நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வந்தது. நேற்று, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் 60 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசில் இருந்து, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்சமாக 60 காசுகள் வரை, முட்டை விலை உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை கோடை விடுமுறைக்கு பின், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல் வாரத்திற்கு தேவையான முட்டைகள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சத்துணவு திட்டத்திற்காக தினமும் 55 லட்சம் முட்டைகளை அரசு கொள்முதல் செய்து வருகிறது. இதனால் முட்டையின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விலையில் 60 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்றனர்.
The post ரூ.5.40 ஆக நிர்ணயம் முட்டை விலை ஒரே நாளில் 60 காசுகள் அதிரடி உயர்வு appeared first on Dinakaran.