×

வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை: வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். மனுக்களின் மீது ஜூன் 14ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் செலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதுவரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். மேலும், கடந்த 2012 முதல் 2022 வரை சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலத்தில் சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில் பணிபுரிந்த அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரியும், 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களையும் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம. கெளதமன் ஆஜராகி, அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். அமலாத்துறை தரப்பில் வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகி, வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் சூழல் உள்ள நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 91ன் படி ஆவணங்களைக் வழங்க கோரி மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி மேகலா வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முழுவதுமாக செலவு செய்துள்ளதாகவும், தற்போது தனக்குத் தெரியாது என கூறுவது ஏற்புடையதல்ல எனவும் வாதிட்டார். மேலும், 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் செந்தில் பாலாஜி மனுக்களை தாக்கல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் ஜூன் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

The post வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது முதன்மை அமர்வு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Primary Sessions Court ,Senthil Balaji ,Chennai ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் இருந்து...