×

பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள்!

இறைவன் ஒவ்வொரு மனிதர்களையும் சில பலங்களோடும் பலவீனங்களோடும் படைத்திருக்கின்றான். பலவீனங்களை வெளிப்படுத்தாத வரை தோல்வி கிடையாது. சில மனிதர்கள் இந்த பலவீனங்களை தாங்களே வெளிப்படுத்திக் கொண்டு, அந்த பலவீனங்களை மற்றவர்கள் பயன்படுத்தி, தங்களை வீழ்த்துவதற்கு தாங்களே துணை புரிகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ராமாயணத்தில் கைகேயி பலமானவள். அவள் பலவீனம் எது என்று மந்தரைக்குத் தெரியவில்லை. அதனால்தான் உடனடியாக கைகேயியை தன்னுடைய வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. அவள் பலவீனத்தை அறிந்து, கடைசி தாக்குதல் நடத்துகின்ற பொழுது கைகேயி மந்தரையின் வார்த்தைக்கு பலியாகிறாள்
“கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்பார்கள் சில கற்கள் சாதாரணமாகத் தூக்கிப் போடும்போது தூள் ஆகிவிடும். சில கற்களை தண்ணீரில் போட்டால் கரைந்து விடும். சில கற்களை குறிப்பிட்ட ரசாயனங் களில்தான் கரைக்க வேண்டி இருக்கும்.

கைகேயி உடனே கரைந்து விடுகின்ற எளிமையான மனம் படைத்தவள் அல்ல. நல்ல குணம் படைத்தவள். ஆனாலும், அவளுக்குரிய பலவீனமான புள்ளியைத் தேர்ந்தெடுத்து மந்தரை புத்திசாலித்தனமாகத் தாக்குதல் நடத்துகிறாள்.பலவீனமான புள்ளிகளை மர்மஸ்தானங்கள் என்பார்கள். இந்த மர்மஸ்தானங்களை வெளிப்படுத்தாமல் கவசமிட்டு மூடிக்கொள்வார்கள். போர்க்களத்தில் முதலில் வீரர்கள் இந்த கவசத்தைத்தான் உடைப்பார்கள். கவசம் உடைந்துவிட்டால் பிறகு வெற்றிதான். மந்தரை, கைகேயியின் மர்மஸ்தானத்தைக் (பலவீனத்தை) கண்டுபிடிக்கத்தான் படாதபாடு படுகிறாள். இது மந்தரைக்கும் கைகேயிக்கும் நடந்த உரையாடலின் மூலமாக நமக்குத் தெரிகிறது. கைகேயி மந்தரையை தொடர்ந்து பேச வைத்ததுதான் குற்றம். அவளை இரண்டொரு வார்த்தையோடு வெளியேற்றி இருந்தால் இத்தனைச் சிக்கல்கள் வந்திருக்காது.

இதற்குக் காரணம் மந்தரையின் மீது கொண்ட நம்பிக்கை, அன்பு. கைகேயி பிறந்ததிலிருந்து மந்தரையை அறிவாள். அவள் தனக்குச் சாதாரண வேலைக்காரி என்ற நினைப்பில் வைத்திருக்கவில்லை. எந்த நேரத்திலும் தன்னைச் சந்திக்கவும், தன்னோடு உரையாடவும் உரிமையைக் கொடுத்திருந்தாள். அதைத்தான் கூனி பயன்படுத்திக் கொள்கிறாள். முதலில் கூனி சொல்லுகின்ற எந்த குற்றச்சாட்டும் கைகேயிடம் எடுபடவில்லை என்பதை ராமாயணத்தை படிப்பவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். கீழே உள்ள உரையாடலைப் பார்த்தால் தெரியும் கைகேயி எத்தனை பெருந்தன்மையோடு கூனிக்குப் பதில் சொல்லுகிறாள், எத்தனை புத்திசாலித்தனம் அவளிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மந்தரை: ராமருக்கு நாளை பட்டாபிஷேகம்
கைகேயி: ரொம்ப சந்தோஷம்.. இந்தா முத்துமாலை.
மந்தரை: தசரதன் நயவஞ்சகன் ஏமாற்றுப் பேர்வழி
கைகேயி: உனக்கு ஏதாவது பிரச்னையா இந்த அரசாங்கத்தில், சொல் தீர்த்து வைக்கிறேன்.
மந்தரை: எனக்கல்ல… உனக்குத்தான் பிரச்னை.. தசரதன் உனக்குப் பேருக்குதான் புருஷன். உண்மையில் உன்னுடைய ஜன்ம விரோதி. என்றதும் கைகேயி சிரிக்கிறாள்.
மந்தரை: ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்து உன்னையும் பிள்ளை பரதனையும் குடும்பத்தாரையும் நிர்மூலம் செய்வான் தசரதன்.
கைகேயி: வெறும் கற்பனை. ராமன் வேறு; பரதன் வேறல்ல.
மந்தரை: அடியே கைகேயி, புரியாமல் இருக்கிறாய். பரதனுக்கு ராமனால் கெடுதி நேரும்.
கைகேயி: பரதனுக்கு மட்டுமா, லட்சுமணனுக்குமா?
மந்தரை: லட்சுமணனுக்கு வராது அவன் ராமனுக்கு விஸ்வாசமானவன். அண்டிப் பிழைத்துக் கொள்வான். உன் பரதனின் நிலை அப்படியல்ல.
கைகேயி: ராமன் அப்படிச் செய்ய மாட்டான்.
மந்தரை: ராமனைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் தனக்கும் தன் சந்ததியருக்கும் பரதன் பகை என்று நினைப்பான். அவனை ஒழித்து விடத்தான் பார்ப்பான். ராமனுக்கு உள்ள சாமர்த்தியம் உன் பையன் பரதனுக்கு இல்லை. பாவம் சாது அவன்!
கைகேயி: எனக்கு தெரியும் ராமனைப் பற்றி! நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே.
மந்தரை: நீ கல்மிஷம் இல்லாதவள். வெளுத்த எதையும் பால் என்று நம்புகிறவள். உன்னிடத்திலே இருக்கக்கூடிய பிரச்னை அதுதான். அதனால்தான் இப்படி ஏமாற்றப்படுகிறாய். கோசலை அதிர்ஷ்டசாலி. நீ துரதிர்ஷ்டசாலி.
கைகேயி: என்ன அதிர்ஷ்டம் அவளுக்கு வந்துவிட்டது. நானும் ராமனுக்குத் தாய்தான்.
மந்தரை: இருக்கலாம். ஆனால், விவரம் புரியாதவளாக இருக்கிறாய். ராமன் பெற்ற அன்னை கோசலைக்கு நன்மையைச் செய்வானா? உனக்கு நன்மையைச் செய்வானா? நாளை ராமனால் கோசலை சிறப்பு பெறுவாள். அதன் பிறகு இந்த அரசாங்கத்தில் அவள் வைத்ததுதான் சட்டம். நீ அவளுக்கு வேலைக்காரி. அந்த வேலைக்காரிக்கு வேலைக்காரி நான். நீயும் உன் மகனும் கைச் செலவுக்குக் கூட கோசலையை அண்டி நிற்க வேண்டிய நிலை வந்துவிடும்.
கைகேயி: இதோ பார், நீ சொல்லும் எந்த குறையும் ராமனிடத்தில் இல்லை. அவன் தர்மவான். நன்றி உள்ளவன். சத்தியம் தவறாதவன். சுத்தன். தசரதனின் மூத்த புதல்வன். அதனால் அவன்தான் முறையாக இந்த நாட்டுக்கு அரசன். அதைத்தான் தசரதன் செய்தார். தசரதன் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். ராமன் என்னையும் பரதனையும் நன்றாகப் பார்த்துக்கொள்வான். உனக்கு ராஜ நீதி தெரியாது. இந்த அயோத்தி நான்கு பிள்ளைகளுக்கும் உரிய பொதுச்சொத்து அல்ல. அது மூத்தவனுக்குத்தான் சொந்தம் அந்த ராமன், பரதனுக்கும் அரசாங்கத்தில் பங்கு தருவான். அவனையும் கௌரவமாக வைத்திருப்பான்
மந்தரை: உனக்கு வருகின்ற ஆபத்து குறித்து எவ்வளவு சொன்னாலும் புரியவில்லையா?
கைகேயி: இதோ பார்.. கோசலையைவிட ராமனுக்கு என்மீது பரிவு அதிகம். எனக்கும் அவன் மீது பரிவு அதிகம். ராமன் தன் தாயைவிட எனக்கு மிக அதிக மரியாதை செய்பவன். பரதனிடமும் அன்பு கொண்டவன். அவன் 100 ஆண்டுகள் வாழ்ந்து, பிறகு பரதனுக்கும் அரசு தருவான். தன் தம்பிகள் அரசு நடத்துவதைப் பார்த்து தகப்பனைப் போல மகிழ்ச்சி அடைவான்.இத்தனை சொல்லியும் கைகேயி கேட்காததால், மந்தரை தன்னுடைய முழுமூச்சோடு கைகேயியின் மூளையை சலவை செய்கின்றாள். அதுதான் கடைசித் தாக்குதல். கைகேயியை வீழ்த்திய தாக்குதல். எதைச் சொல்லி கைகேயியை வீழ்த்தினாள்?

அடுத்த இதழில்…

The post பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்