கோவை: பீகாரில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.1500 வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் பீகாரை சேர்ந்த மகேஷ்குமார், அஞ்சலிதேவி தம்பதி ஓட்டல் நடத்தி வந்தனர். இவர்கள் 2 பேரும் பீகாரிலிருந்து குழந்தைகளை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பீகாரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 வயது ஆண் குழந்தை மற்றும் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை என 2 குழந்தைகளை மீட்ட போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பெண் குழந்தையை விலை கொடுத்து வாங்கியதாக நேற்று முன்தினம் திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவர் கைது செய்யப்பட்டார். விஜயனுக்கு 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பூனம்தேவி (55), மேகாகுமாரி (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் குழந்தை விற்பனை சம்பந்தமாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலிதேவியின் தாய் மற்றும் தங்கை என தெரியவந்துள்ளது. பூனம்தேவி, மேகாகுமாரி ஆகிய இருவரும், பீகாரில் இருந்து ரூ.1,500 கொடுத்து பெண் குழந்தையை வாங்கி வந்துள்ளனர்.
அந்த குழந்தையை விற்பதற்காக அப்பநாயக்கன்பட்டி உள்ள கடையில் வைத்து செலக்கரச்சல் பகுதியை சேர்ந்த 2 பேரிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். பின்னர் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறிய விவசாயி விஜயனுக்கு பெண் குழந்தையை விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. கைதான பூனம்தேவி, மேகாகுமாரி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இதனிடையே கோவையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி தேவி, மகேஷ் குமார், பூனம்தேவி, மேகா குமாரி மற்றும் கோவையைச் சேர்ந்த விஜயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பீகாரில் ரூ.1,500-க்கு குழந்தையை வாங்கி கோவையில் ரூ,2.5 லட்சத்துக்கு விற்பனை செய்த 5 பேர் கைது : தனிப்படை போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.