×

தொடர் மழைக்கு தரிசு நிலங்களில் புற்கள் முளைத்ததால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு குறைந்தது

*விவசாயிகள் மகிழ்ச்சி

தோகைமலை : தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் பொழிந்து வரும் மழையினால் தடுப்பணைகள் மற்றும் குளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, அனைத்து தரிசு காடுகளிலும் புற்கள் முளைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து மழை பெய்யாமல் கடுமையான வெயில் தாக்கம் ஏற்பட்டு வந்தது. இதில் கால்நடைகளுக்கு தேவையான பசுமை புற்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் சிலர் தாங்கள் வளர்த்து வந்த கால்நடைகளின் எண்ணிக்கையை குறைந்துக் கொண்டனர். சிலர் கால்நடை வளர்ப்பதை கைவிட்டனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி கடவூர் ஒன்றிய பகுதிகளான வடவம்பாடி, பாப்பையம்பாடி, வௌ்ளப்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல் கடந்த மே 5ம் தேதி கடவூர், தரகம்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் கடுமையாக ஏற்பட்டு வெப்ப அலைகள் வீசியதில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி அன்று கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனை தொடர்ந்து கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும், சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருகிறது. கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் சித்திரை மாத வெயில் தாக்கம் கடுமையாக ஏற்பட்டு வெப்ப அலைகள் மூலம் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் அவ்வப்போது கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இந்த மழைக்கு நீர்நிலைகள் நிரம்பின. இதில் கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட தொடங்கி உள்ளதோடு, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் மாறி உள்ளது. இதேபோல் அனைத்து பகுதிகளில் உள்ள காடுகளில் புற்கள் முளைத்து பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களில் கால்நடைகளுக்கான தீவன புற்கள் வளர்ச்சி பெற்று வருகிறது. இதனை அடுத்து கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

The post தொடர் மழைக்கு தரிசு நிலங்களில் புற்கள் முளைத்ததால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Kadavur ,district ,Dinakaran ,
× RELATED தடுப்பணை, குளங்கள் நிரம்பி வருகிறது: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி