×

முள்ளிகிராம்பட்டில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும்

*கரைகளை பலப்படுத்தவும் கோரிக்கை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட கீழ்பட்டாம்பாக்கம் அண்ணா நகர் பகுதியில் முள்ளிகிராம்பட்டு செல்லும் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இக்குளம் தகுந்த பராமரிப்புடன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயன்பட்டது. அண்ணா நகர் மற்றும் நெல்லிக்குப்பம் நகர பகுதி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இக்குளத்தில் குளித்து மகிழ்ந்தனர். காலப்போக்கில் இக்குளத்தை சரிவர பராமரிக்காததால் ஆகாயத்தாமரை செடிகள் குளம் முழுவதும் படர்ந்துள்ளதுடன், கரை பகுதியில் செடி, கொடிகள் புதர் போல் மண்டி எந்தவித பயன்பாடின்றி உள்ளது.

மேலும் நகரப்பகுதி வீடுகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வரும் கழிவுநீர், மழை நீரால் இக்குளத்தின் நீர் அசுத்தமாகி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் இக்குளத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இக்குளம் நகராட்சி நிர்வாகத்துக்குட்பட்டது என பொதுப்பணித்துறையினரும், நகராட்சி நிர்வாகத்தில் கேட்டால் இக்குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் மாறி மாறி கூறுகின்றனர். குளத்தை யார் தூர்வாருவது என்பது கேலிக்கூத்தாகவே உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அண்ணா நகர் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி மீண்டும் அழகுப்படுத்த வேண்டும். குளத்தை சுற்றி கரை அமைத்து கரையோரம் தேக்கு மரக்கன்றுகள் நட்டால் வருங்காலத்துக்கு நகராட்சி நிர்வாகத்துக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.

வருங்காலத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், முதியவர்களுக்கும் காலை மாலை நேரங்களில் பொழுதுபோக்குக்கும் மற்றும் நடை பயிற்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இக்குளத்தை யார் தூர்வாருவது என அரசு அதிகாரிகளுக்கு இடையே ஏற்படும் குழப்பத்தால் பல ஆண்டுகளாக இக்குளம் தூர்வாரப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு குளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முள்ளிகிராம்பட்டில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mullikrampat ,Nellikuppam ,Public Works Department ,Mullikrampattu ,Anna Nagar ,Kilpattambakkam ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம்...