×

ஏரியை ஆக்கிரமித்துள்ள காட்டாமணக்கு செடிகள் அகற்றப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நகரப்பாடி ஊராட்சியில் விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 220 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்பட்டு வந்தது. மழைக்காலங்களில் இந்த ஏரிக்கு கீழப்புளியங்குடி தாமரை ஏரி, வக்காரமாரி ஏரி மூலம் வரும் உபரிநீரானது சேல்விழி ஏரி மூலம் ஸ்ரீநெடுஞ்சேரி, பவழங்குடி வெள்ளாற்று தடுப்பணையில் கலக்கிறது.

இந்த ஏரி மூலம் இப்பகுதி விவசாயிகள் 1,000 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் விவசாய பம்பு செட்டுகளில் போர்வெல் நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஏற்கனவே இந்த ஏரியின் கரை மட்டும் பலப்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

தற்போது ஏரியை சரிவர பராமரிக்காததால் ஏரி முழுவதும் நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் முளைத்து தூர்ந்து உள்ளது. இதனால் மழை காலங்களில் மழை நீரை சேமிக்க முடியாமல் தண்ணீர் வீணாக செல்வதுடன், சுற்று பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலம் தொடங்கும் முன் ஏரியை ஆக்கிரமித்துள்ள காட்டாமணக்கு செடிகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post ஏரியை ஆக்கிரமித்துள்ள காட்டாமணக்கு செடிகள் அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Srimushnam ,Vrudhachalam Public Works Department ,Nagarapadi Panchayat ,
× RELATED ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குள் கார் பாய்ந்ததால் பரபரப்பு..!!