×

சேத்தியாத்தோப்பு அருகே விவசாயிகளை ஏமாற்றி போலி உரம் விற்பனை

*வேளாண் துறை அதிகாரிகள் எச்சரிக்கை

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சக்திவிளாகம் கிராமம் உள்ளது. இக்கிராமத்துக்கு பிக்கப் வேனில் ஏராளமான உர மூட்டைகளை கொண்டு வந்த நபர்கள் பிரபல கம்பெனி பெயரில் விவசாயிகளிடம் இயற்கை உரம், நேரடி விற்பனை என்று கூறி ஒரு மூட்டை உரம் 1,150 ரூபாய் என விற்பனை செய்துள்ளனர். அவற்றுக்கு பில்லும் தந்தனர். இதனை விவசாயிகள் பலர் வாங்கி பார்த்தபோது அந்த உரம் செம்மண்ணை குழைத்து சிறு சிறு உருண்டைகளாக மண் போன்று இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த விவசாயிகள் அவர்களிடம் கேட்டபோது பார்ப்பதற்கு மண் போன்று தான் இருக்கும் என்று கூறியதுடன், இது சக்திமிக்க இயற்கை உரம், இதனை நெற்பயிருக்கு இடும்போது ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக விளைச்சல் இருக்கும் என்று ஆசைவார்த்தை கூறி விவசாயிகள் பலரிடம் உரத்தை விற்றுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துள்ளனர். இப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கீரப்பாளையம் வட்டார வேளாண்மை அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, முஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உரக்கடைகளில் ஆய்வு செய்த வேளாண்மை துறை அதிகாரிகள் போலி உரம் விற்கக்கூடாது, அதிக விலைக்கு உரம் விற்கக்கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் போது, கடலூர் மாவட்டத்தில் போலி உரம் விற்பவர் மீது வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது இப்பகுதிகளில் விவசாயிகள் குறுவை நடவு பணிகளை செய்து வருவதால் அவர்களை குறி வைத்து மர்ம நபர்கள் போலி உரத்தை விற்பனை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் என பல இன்னல்கள் பட்டு விவசாயம் செய்து வந்தாலும், தற்போது போலி உரம் விற்பனையானது விவசாயிகளை மேலும் வஞ்சிக்கும் விதமாக உள்ளது. இவைகளை ஆய்வு செய்து தடுக்க வேண்டிய வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டியதையடுத்து போலி உரம் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வேளாண் அதிகாரிகளும் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேத்தியாத்தோப்பு அருகே விவசாயிகளை ஏமாற்றி போலி உரம் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chetiyathoppu ,Agriculture Department ,Chethiyathoppu ,Sakthivilakam ,Cuddalore district ,
× RELATED ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி