×

பிரதமராக பொறுப்பேற்ற மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முதல் கையெழுத்திட்டார்!!

டெல்லி : 3-வது முறை பிரதமரான பிறகு விவசாயிகளுக்கு 17-வது தவணையாக நிதி வழங்கும் கோப்பில் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதைத் தொடர்ந்து மோடி, இன்று பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். டெல்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் கைதட்டி வரவேற்றனர். சவுத்பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்து மோடி முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.பிரதம மந்திரி கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான முதல் கோப்பில் அவர் கையெழுத்திட்டார். நாடு முழுவதும் சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 20,000 கோடி விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, “புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பிரதமராக பொறுப்பேற்ற மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முதல் கையெழுத்திட்டார்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Presidential Inauguration Ceremony ,Presidential Palace ,
× RELATED ஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா...