×

முதல் பூஜை பசுவுக்கே!

*சென்னை – திருவான்மியூர்

பொதுவாகவே மேற்கு திசை நோக்கும் இறைவன் பக்தர்களின் நோய்ப் பிணியை வேரறுப்பான் என்பது ஐதீகம். சென்னை திருவான்மியூர் பகுதியில் கோயில் கொண்டிருக்கும் ஈசனும் அத்தகையவனே. அதனாலேயே அவன் மருந்தீஸ்வரன்! இதற்கும் ஒரு பக்தரே காரணம். அவர், அப்பய்ய தீட்சிதர். ஒருமுறை இத்தலத்துக்கு அவர் வருகை தந்தபோது கடும் மழை, வெள்ளம் காரணமாக இவரால் கிழக்கு திசைக்குச் சென்று சிவனை தரிசிக்க இயலவில்லை; மேற்கே நிறுத்தப்பட்டுவிட்ட அவர், மனம் உருகி, ‘அரனே, எனக்குக் காட்சி அருள மாட்டாயா?,’ என்று வேண்டிக் கொள்ள இறைவன் கருணையுடன் இவரை நோக்கித் திரும்பினார்; அதுமுதல் அவ்வாறே நிலை கொண்டார்.

கோயில் உருவானதற்குக் காரணம், வான்மீக முனிவர். தன் கொள்ளைத் தொழிலால் மனம் நொந்திருந்த அவர், திருந்தி வாழ முற்பட்டு இந்தத் தலத்துக்கு வந்து பேரருளாளனை வேண்டினார். அவருக்கு வன்னி மரத்தடியில் தன் தோற்றம் காட்டினார், பரமேஸ்வரன். அதுவும் நடன கோலத்தில்! பரவசமுற்ற முனிவர் இறைவன்தாள் பணிந்து வணங்கினார். அந்த வன்னி மரம் இன்றும் காட்சியளிக்கிறது. வான்மீகியார் பெயரிலேயே இந்தத் தலம் திருவான்மீகியூர் (திருவான்மியூர்) என்றழைக்கப்படுகிறது. அகத்திய முனிவரும் இந்தப் பெருமானால் ஆட்கொள்ளப் பெற்றிருக்கிறார்.

இங்கு வந்த அவர் வயிற்றுவலியினால் அவதிப்பட, அவருக்கு ஈசன் திருமணக் கோலத்தில் காட்சியளித்ததோடு, மருத்துவ மூலிகைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
அப்படியே மனதில் வாங்கிக் கொண்ட முனிவர், அக்கணமே தன் நோய் தீர்ந்த நிறைவில், அனைவருக்கும் அந்த மருத்துவக் குறிப்புகளை உலகப் பொதுவுடைமையாக்கினார்.
இறைவனும் ஔஷதீஸ்வரர் அதாவது மருந்தீஸ்வரர் ஆனார். இன்னொரு முனிவருக்கும் இத்தலத்துடன் தொடர்புண்டு. அவர், வசிஷ்ட முனிவர். இவர் மேற்கொள்ளும் சிவபூஜைக்காக, தன்னிடமிருந்த காமதேனு என்ற தெய்வீகப் பசுவை அவரிடம் அனுப்பி வைத்தான் இந்திரன்.

ஆரம்ப காலத்தில் முனிவரின் தேவைக்கேற்ப பூஜை நேரத்தில் பால் சுரந்து கொடுத்த காமதேனு, ஒருநாள் வெகுவாகத் தாமதம் செய்தது. அதனால் கோபம் கொண்டார் வசிஷ்டர். முனிவர் வழக்கப்படி அந்தப் பசுவை, காட்டுப் பசுவாக மாறிவிடுமாறு சபித்துவிட்டார். திடுக்கிட்டுக் கலங்கியது காமதேனு. இங்கே முனிவருக்காகப் பணி முடித்துவிட்டு இனி இந்திரலோகம் செல்லவே முடியாது என்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது அதற்கு.

உடனே முனிவரின்தாள் பணிந்து, விமோசனம் அளிக்குமாறு கோரியது. அவரும் சினம் தணிந்து, ‘வன்னி மரத்தடியில் சுயம்பு லிங்கமாக உறைந்திருக்கும் ஈசனைப் பணிந்தால், சுயவுரு பெறுவாய்’ என்று அறிவுறுத்தினார். காமதேனு தேர்ந்தெடுத்தது இந்த திருவான்மியூரிலுள்ள வன்னி மரத்தைதான். அங்கே சுயம்புவாக வீற்றிருந்த ஈசனார் மீது தினமும் பால் சொரிந்து, தன் ஏக்கத்தைத் தெரிவித்தது.

ஒருநாள், அதற்கு அருள்பாலித்தார் இறைவன். காட்டுப் பசு, மீண்டும் காமதேனுவாயிற்று; தன் நன்றியைத் தெரிவிப்பதற்காக மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி ஈசனுக்குப் பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தது. இதனாலேயே இந்த இறைவன், ‘பால்வண்ண நாதர்’ என்றும் அழைக்கப்பட்டார். ஒருசமயம், இப்பகுதியில் வான்மீகி முனிவரைப் பார்த்த காமதேனு, பயந்து ஓடியது. இன்னும் ஒரு முனிவர், இன்னும் ஒரு கோபம், இன்னும் ஒரு சாபம் என்று ஏற்பட்டுவிடுமோ என்று அதற்கு அச்சம். அவ்வாறு ஓடிய வேகத்தில், சுயம்பு லிங்கத்தைத் தானறியாமல் மிதித்துவிட்டது. (அந்தக் குளம்புத் தடத்தை இன்றும் ஈசனின் தலையிலும், மார்பிலும் காண முடிகிறது.) பிறகு காமதேனுவை, இந்திரலோகம் அனுப்பி வைத்தார் சிவனார்.

தனியே சந்நதி அமைத்து அங்கே இந்த சுயம்பு லிங்கத்தைப் பின்னாளில் ஸ்தாபித்தார்கள். கிழக்கு, மேற்கு என்று இரு திசைகளிலும் கோயிலுக்கு நுழைவாயில்கள் உண்டு. இரண்டிலும் ஐந்து நிலை கோபுரங்கள் நெடிதுயர்ந்து நிற்கின்றன. மேற்கு வாயிலுக்கு இடப்புறம் ஈசன் காட்சியளித்ததன் சாட்சியான வன்னி மரத்தைக் காணலாம். கிழக்கு வாயிலுக்குள் வலப்புறத்தில் அம்பிகை திரிபுர சுந்தரி எழில் மிகுத்து பக்தர்களை வரவேற்கிறாள்.

அந்தக் கருணைப் பார்வையே மன அழுக்குகளைக் கழுவி சுத்தம் செய்துவிடுகிறது. அன்னையின் பிராகார சுவர்களில் அபிராமி அந்தாதி பாடல்கள் பொறித்த கல்வெட்டுகள் அடுத்தடுத்து பதிக்கப்பட்டுள்ளன. பிராகார சுற்றில் காணப்படும் ‘சுக்கிரவார அம்மன்’ பிரதானமாக வெள்ளிக் கிழமைகளில் வழிபடப்படுகிறாள். அம்மை சந்நதியை அடுத்து தனி சந்நதியில் சுப்ரமண்யர், அவருக்கு அருகே விஜய கணபதி இருவரும் பாசக்கார பிள்ளைகளாக, அம்மாவுக்கு அருகிலேயே கோயில் கொண்டிருக்கிறார்கள்! மருந்தீஸ்வரரின் மூலக் கருவறைக்கு முன்னால் தியாகராஜ சுவாமி சபா மண்டபமும், அதனுள் தியாகராஜப் பெருமானையும் தரிசிக்கலாம்.

மூலவர் சந்நதி பிராகாரத்தில் நாயன்மார்கள், நால்வர், நாகருடன் விநாயகர், வீரபாகு, வள்ளி – முத்துக்குமார சுவாமி (அருணகிரிநாதர் பாடி மகிழ்ந்த முருகன்) – தெய்வானை, உற்சவ மூர்த்திகள், நடராஜர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், கேதாரீஸ்வரர் முதல் அருணாசலேஸ்வரர் வரையிலான பஞ்சலிங்கங்கள், 108 சிவலிங்கங்கள், மருந்தீஸ்வரர் உற்சவர், தட்சிணாமூர்த்தி என்று அடுத்தடுத்து சந்நதிகள் நம்மை பக்திப் பரவசத்துக்குள்ளாக்குகின்றன. வெளிப் பிராகாரத்தில் பசுமடம் அமைக்கப்பட்டிருக்கிறது. காமதேனு வந்து சென்ற இடமல்லவா, அதனால் இக்கோயிலில் முதல் பூஜை பசுவிற்குதான். அதிகாலையில் இவ்வாறு கோபூஜை செய்யப்பட்ட பிறகுதான் சுவாமிக்கு அபிஷேகம் மேற்கொள்ளப் படுகிறது. ஆன்மிக வாசகசாலை ஒன்று இங்கே நிறுவப்பட்டு, பக்தர்களின் வாசிப்பு நேசத்தை வளர்க்கிறது.

மருந்தீஸ்வரர் என்ற பெயர் தவிர, வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ண நாதர் என்ற பெயர்களாலும் இறைவன் இங்கே ஆராதிக்கப்படுகிறார்.
சுவாமிக்குப் பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டு, விபூதி பிரசாதத்தை சிறிதளவு உட்கொண்டால், தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை வலம் வந்து வணங்கினால் முக்தி சித்திக்கும் என்பதும் ரகசிய நம்பிக்கை! மருந்தீஸ்வரர் கோயில், சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு அருகில், ஈ.சி.ஆர். சாலையில் அமைந்திருக்கிறது. கோயில் தொலைபேசி எண்.044-2441 0477.

பிரபு சங்கர்

The post முதல் பூஜை பசுவுக்கே! appeared first on Dinakaran.

Tags : Pooja ,Chennai ,Thiruvanmiyur ,Eisen ,Thiruvanmiur ,
× RELATED மஹா ம்ருத்யுஞ்ஜய பூஜை ஏன் செய்கிறார்கள்?