×

தீமைகளை நீக்கி நல்வாழ்வு அருளும் தெய்வீக தலமரங்கள்

1. தாவரம் எனப் பெயர் ஏன்?

மனித உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது காற்று, அந்தக் காற்றை முறையாக சுத்தமாக்கி, மனிதர்களுக்கு சத்துக்கள் நிறைந்த பரிசுத்தமான காற்றாக மாற்றித் தருவதுடன், மழை, மண்வளம் போன்றவற்றிற்கும் ஆதாரமாக விளங்குவது மரங்கள் மட்டுமே, மனித உயிர் மேம்பட்டு வாழ அவை வரம் தருவதால் அதற்கு “தா வரம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு சில மரங்கள் மனித இனத்திற்கு மிகவும் பாதுகாப்பாக இருந்து மனித இனத்தை விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் எனவும் முன்னோர்கள் அழைத்தனர்.

2. தல மரம் ஏன்?

மரங்கள் (வீடுகட்டுதல்) போன்ற மனித நாகரிகத்திற்கு அதிகமாக தேவைப்பட்டதால், அவைகள் அழிக்கப்பட்ட காலத்தில் அவை அழியாமல் காப்பாற்ற கோயில்களிலும், பூஜையிலும், தாவரங்களையும், விருட்சங்களையும் நமது முன்னோர்கள் புகுத்திவைத்துள்ளனர். எனவே மரங்களை வணங்குவது பகவானை வணங்குவது போலத்தான். அப்படி நினைத்து வணங்க வேண்டும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் ஒரு செடி உண்டு. அந்தந்த நட்சத்திர நேயர்கள் அந்தந்த மரத்தையும் செடியையும் வளர்ப்பதிலும் வணங்குவதிலும் தங்களுடைய தோஷங்களை நீக்கிக்கொள்ளலாம்.

3. வனம் தரும் வரம்

தரிசனங்களிலேயே மிக உயர்வானது விருட்ச தரிசனம். காலையில் எழுந்தவுடன் மரங்களைப் பாருங்கள். பறவை சப்தங்களைக் கேளுங்கள். மனம் புத்தெழுச்சி கொள்ளும். நாம் சில மனிதர்களைப் பார்த்து, ‘‘ஏன் மரம் போல் நிற்கிறாய்?’’ என்று கேட்கிறோம். அது தவறு. மரத்தை விட மனிதன் அதிகம் பயன் தருபவன் அல்லன். நாம் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறோம். கார்பன்டை ஆக்சைடு வெளியே விடுகிறோம். ஆனால் மரங்கள் நம் கழிவுகளான கரியமில வாயுவைத்தான் எடுத்துக்கொண்டு நாம் உயிர் வாழ்வதற்குரிய ஆக்சிஜனைத் தருகின்றன.அதனால்தான் கம்பன் மரங்களைக் குறிப்பிடும் போது ‘‘தருவனம்’’ என்றான். காடுகள் இல்லாவிட்டால் வீடுகள் எங்கே? மழை எங்கே? மண் எங்கே? உயிர் எங்கே? பயிர் எங்கே?

4. மரத்தினால் இவ்வளவு பயனா?

ஒரு மரத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. ஆனால், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்துகொள்ளப் பொருளாதார ரீதியில் அதை மதிப்பிட வேண்டியிருக்கிறது. இதை டெல்லி கிரீன்ஸ் அமைப்பு செய் திருக்கிறது. ஒரு வளர்ந்த ஆள் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். அதாவது, ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறார். இதில் 20 சதவீதம் ஆக்சிஜன். அப்படியென்றால், ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக் கொள்கிறார். 2.75 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6,500. இதைக் கொண்டு கணக் கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.13 லட்சம். 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி.

5. மனிதனைவிட மரங்கள் மேலானது

பயனில்லாத மரமோ செடியோ உலகத்தில் இருக்கிறதா? ஏதோ ஒரு வகையில் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் தரும். மனிதன் மரங்களை வளர்க்கவில்லை. ஆனால் மரங்கள் தான் மனிதனை வளர்க்கின்றன. பாதுகாக்கின்றன. உயிர் மூச்சு தருகின்றன. கவியரசு கண்ணதாசன் திருவிளையாடல் படத்தில் ஒரு பாடல் எழுதினார்.
“பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால்
நெடுமரம்
சேர்த்தால் விறகுக்கு ஆகுமா, ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?’’
மரத்தின் கரி அடுப்புக்காகும். மனிதன் சடலமாக எரிந்தால்கூட எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே விருட்சம் மனிதனைவிட உயர்வானது.

6. பச்சை காட்டுதல்

குழந்தை பிறந்தவுடன் பச்சை காட்டுதல் என்றொரு பழக்கம் உண்டு. அது கண் பார்வையின் தெளிவை அதிகரிக்கும். பசுமையான மரங்களைப் பார்க்கும்போது மனம் தெளிவடையும். ஒவ்வொரு காலத்திற்கும் மரங்களின் மாற்றங்களைக் குறித்துத்தான் பருவகாலங்கள் நடக்கின்றன. இது இலையுதிர் காலம், இது வசந்த காலம் என்று சொன்னார்கள். அதை ஒட்டியே பல்வேறு ஆலயங்களில் உற்சவங்களும் நடத்தினார்கள். உதாரணமாக வசந்த காலத்தில் வசந்த உற்சவங்கள் என்று பல ஆல யங்களில் நடைபெறுவதைக் காணலாம். ஒரே ஒரு மரத்தையோ, செடியையோ நம்கைகளால் நாம் நட்டு பராமரித்தால், அது நம்முடைய குடும் பத்தைக் காக்கும். நம்முடைய ஜாதக தோஷங்களைப் போக்கும்.

7. 5000 ஆண்டு பழமையான புளிய மரம்

வழிபடக் கூடிய சில மரங்கள் புனிதமாகப் பார்க்கப்படுவதற்கான காரணம், மிகப் பெரிய துறவிகளுடனான அவைகளின் தொடர்பே. ஆலமரத்தின் கிளைகளில் மார்கண்டேயன் மறைந்து கொண்டதால் இந்த மரம் புனிதமாகக் கருதப்படுகிறது. புத்தரின் பிறப்பு மற்றும் இறப்புடன் சாலா மரம் தொடர்பை கொண்டுள்ளதால் புத்த மதத்தினரால் அது புனிதமான மரமாக கருதப்படுகிறது. திருநெல்வேலி ஆழ்வார் திருநகரியில் பெருமாளைவிட நம்மாழ்வாருக்கு விசேஷம் அதிகம். அவர் யோகத்தில் அமர்ந்த புளியமரம் 5000 ஆண்டுகளாக இன்னும் இருக்கிறது.

அந்த புளிய மரத்தைத் தரிசிக்காமல் வரவே கூடாது. அந்த புளியமரம்தான் ஆழ்வாரின் அருளைப் பெற்றுத் தருகிறது. அந்த ஆழ்வாரின் அருள்தான் பெருமாளின் பூரணமான அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருகிறது. புளிய மரத்தில் செய்யும் விரதத்தை திந்தீரணி கௌரி விரதம் என்று சொல்வார்கள். திந்தீரணி என்றால் புளியைக் குறிக்கும். இந்த விரதத்தால் சனி தோஷம் போகும். கோயில் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜப் பெருமாள் ஆலய தலமரமாக விளங்குவது தில்லை மரமாகும். தில்லை மரங்கள் நிறைந்ததாலேயே தில்லைவனம் என்ற பெயர் பெற்ற ஊர் இது.

8. பகவான் வனங்களின் தலைவன்

விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் பகவான் திருநாமங்கள் அடுக்கடுக்காக வருகிறது. அதில் ஒன்று “அமரப் பிரபுவே நம:’’ என்பது. அதாவது அவன் அமரர்களுக்குத் தலைவன். ஒருவர் சமஸ்கிருதம் தெரியாமல் பகவானுடைய நாமங்களைச் சொல்வதற்கு விரும்பினார். கோயில் வாசலில் அமர்ந்து அவரால் முடிந்த அளவு படித்தார். அவர் பதம் பிரிக்க முடியாமல் மரப் பிரபுவே என்று வாசித்தார்.

சமஸ்கிருத பண்டிதர் ஒருவர் இதைக் கேட்டு, ‘‘ஏன் மொழி அறிவு இல்லாமல் படிக்கிறாய்? பகவான் என்ன மரமா? அவன் மரப்பிரபுவா? அவன் அமரப் பிரபு அல்லவா?’’ என்று அவரைக் கடுமையாக கண்டித்தார். ‘‘ஐயோ அறிவின் குறைபாட்டால் இப்படிச் சொல்லும்படி ஆகிவிட்டதே! பகவானிடம் அபச்சாரப்பட்டு விட்டேனே’’ என்று துடித்தார். அன்று இரவு பகவான் பண்டிதர் கனவில் போய் பண்டிதரிடம் சொன்னார். ‘‘அவன் அன்பினால் சொல்லுகின்றான். மரப்பிரபுவே என்று என்னைச் சொன்னதிலே என்ன குறை? நான் வனமாக இல்லையா? அஸ்வ நாரணன் என்று சொல்வதில்லையா? என்று கேட்டார்.

9. தலவிருட்ச சிறப்பு

ஒவ்வொரு திருக்கோயிலும் தலச் சிறப்பு, தீர்த்தச் சிறப்பு மூர்த்திச் சிறப்பு என்று இருப்பதைப் போலவே தலவிருட்சச் சிறப்பும் உள்ளது. பகவான் இந்த ஆத்மாக்கள் இளைப்பாறுவதற்கு நிழல் தரும் மரமாக இருக்கின்றான் என்று கீதையிலே வருகின்றது ‘‘தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே’’ – என்பது திருவாய்மொழி. ராமலிங்க அடிகளார் இறைவனைக் குறித்து பாடுகின்ற பொழுது குளிர் தரும் நிழலே என்று பாடுகின்றார்.

“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே’’
என்கிற வள்ளலார் பாட்டிலேயே பகவானையே மரங்களாக உருவகித்தார். அதனால்தான் ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சங்கள் சிறப்பாக இருக்கின்றன.

10. மரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி

புத்தன் போதிமரத்தடியில்தான் ஞானம் பெற்றார். ஆலமரத்தின் நிழலில்தான் சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக
நால்வர்க்கு உபதேசித்தார்.

“ஓரானீழல் ஒண்கழல் இரண்டும் முப்
பொழுதேத்திய
நால்வர்க் கொளிநெறி காட்டினை”
– என்று திருஞானசம்பந்தர்
திருவாக்காலும்,
“ஆலமர் நீழலற நால்வர்க் கன்றுரைத்த
ஆலமர் கண்டத்தரன்”
ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு
மேலையுகத் துரைத்தான் மெய்த்
தவத்தோன்’’
– என்ற நாலாயிரப்பிரபந்தம் இயற்பா திருவந்தாதி அடிகளாலும் இனிது விளங்கும். பகவானை “வாசுதேவ தருச்சாயா” என்கிறது வேதம்.
வாசு தேவனின் நிழலில் உயிர்கள் களைப்பு நீங்கி மகிழ்ச்சி அடைகிறது என்கிறது சாஸ்திரம்.

11. நட்சத்திர மரங்கள்

மரங்கள் நம் உலகியல் வாழ்க்கையோடும், உயிரியல் (ஆன்மிகம்) வாழ்க்கையோடும் பின்னிக் கிடக்கின்றன. ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரத்திற்கும் மரங்கள் உண்டு. சில ஆலயங்களில் நட்சத்திர மரங்களைக் காணலாம். ஒரு குழந்தை பிறந்தால் ஒரு மரம் நட வேண்டும். சந்ததி விருத்தி போலவே விருட்சவிருத்தியும் நடைபெற வேண்டும். இனி நட்சத்திர மரங்கள்
குறித்துக் காண்போம்.

அஸ்வினி – ஈட்டிமரம்,
பரணி – நெல்லிமரம்,
கார்த்திகை – அத்திமரம்,
ரோகிணி – நாவல்மரம்,
மிருகசீரிடம் – கருங்காலிமரம்,
திருவாதிரை – செங்கருங்காலிமரம்,
புனர்பூசம் – மூங்கில்மரம்,
பூசம் – அரசமரம்,

12. ஜெகம் ஆளும் மகமும், ஆலமரமும்
ஆயில்யம் – புன்னைமரம்,
மகம் – ஆலமரம்,
பூரம் – பலாமரம்,
உத்திரம் – அலரிமரம்,
அஸ்தம் – அத்திமரம்,
சித்திரை – வில்வமரம்,
சுவாதி – மருதமரம்,
விசாகம் – விலாமரம்,
அனுஷம் – மகிழமரம்,
கேட்டை – பராய்மரம்,
மூலம் – மராமரம்,
பூராடம் – வஞ்சிமரம்,
உத்திராடம் – பலாமரம்,
திருவோணம் – எருக்கமரம்,
அவிட்டம் – வன்னிமரம்,
சதயம் – கடம்புமரம்,
பூரட்டாதி – தேமமரம்,
உத்திரட்டாதி – வேம்புமரம்,
ரேவதி – இலுப்பை மரம்.

13. தலவிருட்சம் தரிசிக்காமல் தரிசனம் நிறைவு பெறாது

ஒவ்வொரு தலத்துக்கும் விருட்சம் உண்டு. அதற்கு தலவிருட்சம் என்று பெயர். சிலர் நேராகப் போய் சாமியை மட்டும் பார்த்துவிட்டு வந்து விடுகிறார்கள். அங்குள்ள மூர்த்தியை தரிசிப்பது போலவே, தீர்த்தத்தையும் தல விருட்சத்தையும் நாம் தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும், துளசியை பெருமாளுக்கும், வில்வத்தை மகாலட்சுமிக்கும், சிவபெரு மானுக்கும், வேப்பிலையை அம்மனுக்கும் எனப் பிரித்து வைத்தார்கள். இவைகள் அனைத்துமே மருந்துப் பொருள்கள். மருத்துவன் இறைவன். மருத்துவனை தரிசித்து, மருந்துப் பொருள்களைப் பெறுவதுதான் ஆலய தரிசனம். இதில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

14. “மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்” – கீதை

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில், “மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரசமரமே திருப்புல்லாணி தலத்தின் விருட்சமாகும். இந்த மரம் சுவாமி சந்நதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.பிராணவாயுவை அதிக அளவு வெளியிடும் மரம் அரசமரம் என்று சொல்கிறார்கள். அரசமரத்தைச் சுற்றி வரும்போது அதிகளவில் பிராணவாயு கிடைப்பது, மனித ஆரோக்கியத்தை வளம்படுத்துகின்றது.

ஆயுளை அதிகரிக்கின்றது. அரச மரத்தை பெண்கள் சுற்றி வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும் என்பதை வெறும் நம்பிக்கையாக மட்டும் எடுக்காமல், பெண்களின் கருப்பை சம்பந்தமான கோளாறுகள் நீக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

15. அரசமரம் பெயர் ஏன்?

குரு கிரகத்தின் ஆற்றலும், சூரிய கிரகத்தின் ஆற்றலும் ஒருங்கே நிரம்பி வழியும் மரம் அரசமரம். இந்தக் காரணத்தால் அது ஒரு ஜீவமரம் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை அரைமரம் என்றே – அரசமரத்தின் பெயரை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அரை = அரைசு மரம் – என்றால் அரைச்சல் எழுப்பும் மரம் (ஓசை எழுப்பும் மரம்) என்று பொருள். நெடிதுயர்ந்து வளரும் அரை மரத்தின் இலைகள் காற்றில் சலசலக்கும் ஓசையானது மற்ற மரங்களைவிட மிகுதியாக அமைதியைக் கலைக்கக் கூடியது. உடலில் உள்ள இதயம், கல்லீரல், போன்ற ஒற்றையாக இருக்கும் உறுப்புகள் “அரசர்கள்’’ என்று மருத்துவத்தில் சொல்லப் படுகின்றன. அவற்றுக்கு மருந்தாக அரச மரத்தின் வேர், இலை, பட்டை, பூ, ஆகியவை பயன்படுகின்றன. எனவே அது அரசமரம் என்று அழைக்கப்படுகிறது. பாரத ரத்னா விருது அரச இலை வடிவிலேயே வழங்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

16. பல தலங்களில் தல மரமாகும்

அரசமரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம், ஆவூர்ப் பசுபதீச்சுரம், திருஅரசிலி, திருவியலூர், திருவெண்காடு, திருச்சுழியல் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது. கூரிய இலை களையுடைய பெருமரம் திருவாவடுதுறை தலத்தில் படர்ந்து காணப் படுவதால், படர் அரசு எனப்படுகிறது. இம்மரத்தைத் திருமரம் என்றும் கூறுவதுண்டு. ஏரி, குளக்கரைகளில் வேம்புடன் இணைத்து வளர்க்கப் பெறுவதுண்டு; இவ்விணை மரங்களை வலம் வருவதால் மகப்பேறு வாய்க்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது. இந்நம்பிக்கை “அரச விதையால் ஆண்மலடு நீங்கும் என்பதையும், வேப்பிலையால் பெண்மலடு நீங்கும்” என்பதையும் குறிப்பால் உணர்த்தியதேயாம். இம்மரத்தில் துளிர், பட்டை, வேர், விதை ஆகிய பாகங்கள் மருத்துவக் குணமுடையது.

17. எல்லா தேவதைகளும் ஒரே மரத்தில்…

“அஸ்வத்த: ஸர்வ வ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத” என்பது கீதை. ஆற்றங்கரை அரச மரமும், அங்குள்ள பிள்ளையார் கோயிலும் நமது சமய மரபில் முக்கியம். அஸ்வத்த மரத்தின் வேரில் பிரம்ம தேவனும், நடுப்பாகத்தில் விஷ்ணுவும், நுனியில் சூலபாணியும் வசிக்கின்றார்கள்.! (“மூலதோ ப்ரும்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே அக்ரத் சிவரூபாய’’) அதன் கிளைகளிலும் இலைகளிலும் சூரியன், இந்திராதி தேவதைகள் வசிக்கின்றனர்.! தவிர, கோ (பசு), பிராமணர், வேதம், யக்ஞம், சமஸ்த தீர்த்தங்கள், சப்த ஸாகரங்கள் வேரிலும், கிளைகளிலும் வாசம் செய்கின்றார்கள்.! அதன் மூலஸ்தானத்தை அ காரமாகவும், கிளைகளையும், இலைகளையும் உ காரமாகவும், பூ, பழங்களை ம காரமாகவும் அஸ்வத்த விருட்சம் ஓங்கார ரூபமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்பவிருட்சமாகும்.

18. மர உருவில் உள்ள பெருமாள் திருமேனிகள்

சில தலங்களில் பெருமாள் திருமேனியே மரத்தால் (தாரு) உருவான திருமேனியாக இருக்கும். அதில் ஒரு கோயில் திருக்கோவிலூர். இங்கு உலகளந்த பெருமாள் என்ற திருநாமமுள்ள மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. சாளகிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சந்நதியில் உள்ளார். கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

இக்கோயில் மயிலாடுதுறை -கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள மூவலூரிலிருந்து 2 கிமீ புறவழிச் சாலையில் 5 கிமீ தொலைவில் கோழிக்குத்தி அமைந்துள்ளது. சோழன்பேட்டை கிராமத்தில் அமைந்த கோடிஹத்தி பாபவிமோசனபுரமே கோழிக்குத்தி என்று தற்போது அழைக்கப்படுகிறது. 14 அடி உயரத்தில் அத்தி மரத்தில் வடிக்கப்பட்டு மூலிகை நிறம் தீட்டப்பட்டு கிழக்கு நோக்கிய நிலையில் இறைவன் உள்ளார்.

பக்தப்ரியன் என்ற பெயரில் இப்பெருமாள் தயாலட்சுமி, பூமிதேவியோடு உள்ளார். கோயிலின் தீர்த்தம் பிப்பல மகரிஷி தீர்த்தம் ஆகும். திருநெல்வேலி, வைகுண்டம் அருகே வகுளகிரி என்று சிறப்பிக்கப்படும் கருங்குளம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் உள்ளது. இங்கு மலை மீது உள்ள கோயிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில்தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.

19. வில்வமரம்

வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். “தவ விருட்ஷோத பில்வ:’’ என்று சூக்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, மகாலட்சுமி வில்வமரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது வேதம். “யார்வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க் கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்.’’ இதன் இலைகள் ஈஸ்வரனுக்கு பூஜை செய்யப் பயன்படுகிறது. இதன் காய், கனி, வேர் ஆகிய அனைத்தும் நல்ல பலனை நமக்குக் கொடுக்கிறது.

பெரும்பாலும் வில்வமரம் ஈஸ்வரன் கோயில்களில் உள்ளது. திருவையாறு, திருவெறும்பியூர், திருமயேந்திரப்பள்ளி திருத்தென்குடித்திட்டை திருக்கலிக்காமூர், திருமூக்கீச்சரம், திருச்சத்திமுற்றம், திருக்குரக்குக்கா, திருவியலூர், திருக்கருக்குடி, திருவிளமர், திருக்குருகாவூர், வெள்ளடை, திருக்கழிப்பாலை, திருக்குரங்கணில்முட்டம், திருவேட்டக்குடி, திருநன்னிலம் (திருநன்னிலத்துப் பெருங்கோவில்), திருகோகர்ணம் (கோகர்ணா), திருக்கருவிலிக்கொட்டிட்டை, திருப்பள்ளியின் முக்கூடல், திருவிடைவாய், திருக்கோடி (கோடிக்கரை), திருக்கொள்ளிக்காடு, திருராமேச்சரம் திருக்கோவில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது.

20. இத்தனை கோயில்களில் வில்வமா!

நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூசனை மூலிகையான வில்வம் கற்ப மூலிகையாகும்; இன்ன பிணிக்கு மட்டுமே மருந்துதென்று அமையாது எல்லாப் பிணிகளையும் நீக்கும் தன்மையுடையது. திருத்தருமபுரம், திருநள்ளாறு, திருக்கோட்டாறு, திருஅறையணிநல்லூர், திருமீயச்சூர் இளங் கோயில், திருக்கடவூர் வீரட்டம், திருக்கடவூர் மயானம், திருக்கருவூர் ஆனிலை (கரூர்), திருக்கானப்பேர் (காளையார் கோயில்), திருவேதிகுடி, திருகற்குடி, திருநெடுங்களம், திருக்கோணமலை, மேலைத் திருக்காட்டுப் பள்ளி, திருக்கண்டியூர், திருவைகாவூர், திரு இலம்பையங்கோட்டூர், திருஆனைக்கா, திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருவெஞ்சமாக்கூடல், திருக்கோழம்பம், திருத்தென்குரங்காடுதுறை, திருநனிபள்ளி, திருநெல்வெண்ணெய், சக்கரப்பள்ளி, திருநல்லூர், திருச்செம்பொன்பொள்ளி, திருப்பறியலூர், திருவலஞ்சுழி, திருநீலக்குடி, திருத்தெளிச்சேரி, திருமீயச்சூர், திருச்சிறுகுடி, திருஅரிசிற்கரைப்புத்தூர், திருக்கொண்டீச்சரம், இடும்பாவனம், திருவெண்டுறை, திருக்கொள்ளம்பூதூர், திருஏடகம், திருஆடானை, திருமுருகன்பூண்டி, திருக்கோவலூர் வீரட்டம், இடையாறு, திருவல்லம், திருமாற்பேறு, திருஇடைச்சுரம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருக்குடந்தைக் காரோணம், திருக்கானூர், திருவடுகூர், திருப்பூந்துருத்தி, திருப்பாற்றுறை, திருக்கூடலையாற்றூர், திருப்பழனம் திருநெய்த்தானம், திருத்தெங்கூர், திருவிற்கோலம் (கூவம்), திருப் பெரும்புலியூர், திருஅழுந்தூர், திருவக்கரை, திருவெண்காடு, திருப் பழையாறை, வடதளிதிருக்குடமூக்கு (கும்பகோணம்) முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தலவிருட்சமாக அமைந்துள்ளது.

21. வாழை மரம்

வாழை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருவெள்ளியங்குடி என்ற திருத்தலத்தில் வாழைமரம் (கதலி) தான் தலவிருட்சம். கதலி கௌரி விரதம் என்று வாழை மரத்தை அடிப்படையாகக் கொண்டவிரதம் உண்டு. வாழை மரத்தின் இலை, காய், கனி, தண்டு, மட்டை என பயன்படாத பகுதியே இல்லை. திருக்கரம்பனூர் எனப்படும் உத்தமர் கோயிலிலும் வாழைதான் தல மரமாகும். வாழைமரம் தலமரமாக உள்ள சிவாலயங்கள், திருப்பழனம், திருத்தேவூர், திருமருகல், திருத்தருமபுரம், திருக்குடவாயில், திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம், திருத்தென் குரங்காடுதுறை முதலிய தலங்களில் தலமரமாக வாழை விளங்குகின்றது. திருப்பைஞ்ஞீலியில் ஞீலி எனும் ஒரு வகைக் கல்வாழையும், திரு மருகலில் மலைவாழை இனத்தைச் சேர்ந்த வாழையும் தலமரங்களாக உள்ளன. ஞீலி வாழைக்கனி இறைவனுக்கு பூசனை செய்து நீரில் விடப்படுவது மரபு; யாரும் உண்பதில்லை.

22. மகிழமரம்

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம். சுற்றுச் சூழலைக் காக்கும் ஆற்றல் மிக்க ஞானவிருட்சம் மகிழமரம், அடர்த்தியான இலைகளையும் மனங்கவரும் மணமுடைய கொத்தான வெண்மலர்களையும் உடையது. வீடுகளிலும் வளர்க்கப் படுகிறது. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது. இதன் பூக்களை மாலையாக அணிந்தவர் என்பதால் நம்மாழ்வாருக்கு வகுளாபரணர் என்ற திருநாமம்.

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலில், மகிழ மரத்தடியில்தான் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமியன்று ராமானுஜர் தனது குருவான பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டார். திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர், திருப்புனவாயில், திருக்காளத்தி முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.

23. புன்னை மரம்

வைணவர்களுக்கு கோயில் என்றால் திருவரங்கம்தான். இந்தத் தலத்தின் தலமரம் புன்னை மரம். அனைத்து பெருமாள் கோயில்களிலும் பிரம்மோற்சம் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தரிசனம் தருவார். வேதாரண்ய ஆலயத்தின் தலவிருட்சமான புன்னை மரத்தின் காய்களில் பருப்பு இருக்காது. திருவேட்டக்குடியில் சிவபிரானை “நறையுலவும் பொழிற்புன்னை நன்னிழற்கீழமரும் இறை” என தேவாரம் குறிப்பிடுகிறது.

இம்மரம் தமிழகத்தின் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் இயல்பினது. இதன் இலை சற்று நீண்ட தாகவும்,பளப்பளப்பாகவும் இருக்கும், உருண்டையான உள் ஓடுள்ள சதைக் கனியை உடையது. இதன் இலை, பூ, விதை, பட்டை, நெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருப்புனவாயில், திருப்பல்லவனீச்சுரம், திருநாரையூர், திருச்சுழியல் (திருச்சுழி), திருவலிவலம், திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேட்டக்குடி, திருப்புறம்பயம், திருஅம்பர் பெருந்திருக்கோவில், திருநெல்வெண்ணெய், திருஇரும்பைமாகாளம் முதலிய சிவத்தலங்களில் புன்னை, தலமரமாக விளங்குகிறது. தஞ்சாவூருக்கு அருகே புகழ் பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலின் தலவிருட்சம் புன்னை.

24. பலாமரம்

முக்கனிகளில் ஒன்று பலாபழம். பலா மரத்தின் எப்பகுதியில் விளைகிறது என் பதற்கேற்ப கிளைப்பலா, வேர்ப்பலா என வகைப்படும். இலை, பிஞ்சு, காய், பால், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் தன்மை உடையது. பழம் மலமிளக்கும், சேலம் மாவட்டம் கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற ஆறுமுகப்பெருமான் கோயில் உள்ளது. கோயிலின் புனித மரம்பலா ஆகும். பல சிவன் திருகோயில்களில் தலமரமாக விளங்குகிறது. திருக்குற்றாலம் திருக்குறும்பலா, திருநாலூர், திருவாய்மூர், தலையாலங்காடு, கடிக்குளம், திருக்காறாயில், திருவாலங்காடு, திருஇன்னம்பர், திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை), திருப்பூவணம், திருபறியலூர் (பரசலூர்), திருப்பூவனூர் முதலிய பத்துக்கும் மேற்பட்ட சிவத்திருக் கோயில்களில் தலமரமாக விளங்குகிறது. திருக்குற்றாலத்துத் தலமரத்துப் பலாப்பழம் உண்ணப்படுவதில்லை.

25. மாமரம்

மாமரம் அற்புதமான மரம். தமிழகமெங்கும் கனிகளுக்காகப் பயிரிடப் பெறுகிறது. துளிர், இலை, பருப்பு, பட்டை ஆகியவை மருத்துவக் குண முடையதாக விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் மாமரம் மிகப் பழமையானதாகும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள 4 வகையான சுவையுடன் கூடிய 3500 ஆண்டுகள் பழமையான மரம் மாமரம் மாமரத்தின் கீழ் இருப்பதனால் இறைவனுக்கு மாமூலர் என்று பெயர். வடமொழியில் ஏகாம்பரம் என்று அழைக்கப்பட்டது. இப்பெயரே, ஏகம் – ஒற்றை, ஆம்பரம் – மாமரம். ஒற்றை மாவின் கீழ் உள்ளார் என்ற பொருளில் ஏகாம்பரர், ஏகம்பரநாதர் என வழங்கலாயிற்று. இன்றும் மாமரமே அங்கு தலமரமாகும்.

திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருக்கச்சியேகம்பம், திருக்கச்சி மேற்றளி (பிள்ளைப் பாளையம்), திருஓணகாந்தன் தளி, திருக்கச்சி அநேகதங்காவதம், திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள் புரம்), திருஉசாத்தானம், திருஅவிநாசி, திருப்பறியலூர், திருநாகைக்காரோணம், திருநாகை(நாகப்பட்டினம்) அகத்தீஸ்வரர் கோயில், பாதாளேச்சுரம் முதலிய சிவத்
தலங்களில் மா தலமரமாக விளங்குகிறது.

26. இலந்தை மரம்

கூர்மையான முள்ளுள்ள மரம் இலந்தை மரம். இலைகள் முட்டை வடிவமானவை; புளிப்புச் சுவையுடைய சிறிய கனிகளை உடையது. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானாகவே வளரும் இயல்பினது. கொழுந்து, இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம், கட்டை முதலியன மருத்துவப் பயனுடையது. 108 திவ்ய தேசங்களிலே ஒன்று பத்ரிகாஸ்ரமம் இதனை “வதரி வணங்குவோம்’’ என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்கின்றார். மகாலட்சுமிக்கு பிரியமான இருப்பிடமான பத்ரிநாத். அங்கே இலந்தை மரத்தின் கீழேதான் பத்ரி நாராயணன் வீற்றிருக்கிறார். இங்கேதான் எட்டெழுத்து மந்திரத்தை அருளிச் செய்தார். அதைப் போலவே திருநெல்வேலியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தலம் அம்பை.

இங்கே சிவபெருமான் இலந்தை மரத்தின் கீழ் காட்சி தருகின்றார் குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் இங்கு தரப்படும் இலந்தைப்பழத்தை பிரசாதமாகச் சாப்பிடுகின்றனர். இது தவிர திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர், திருக்குரங்கணில்முட்டம், திருவெண்பாக்கம் (பூண்டி) முதலிய திருக் கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.

27. நெல்லிமரம்

வில்வமரம் போன்று நெல்லிமரமும் திருமாலின் பேரருளைப் பெற்றது. இதனால் நெல்லி மரத்தை `ஹரி பலம்’ என்றும் சொல்வார்கள். நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த நெல்லிக்காய் எல்லா காலங்களிலும் மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது ஓர் கற்பமருந்து. மகாலட்சுமிக்குரியது. துவாதசி அன்று அவசியம் நெல்லிக்கனியை பாரணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் ஆயுளை வளர்ப்பது நெல்லிக்கனி.

அமலாகி ஏகாதசி என்ற ஏகாதசியின் போது நெல்லி மரத்தின் கீழ் பகவானை பூஜிக்க வேண்டும் என்று சொல்வார்கள். நெல்லி மரத்தின் நிழலில் அன்னதானம் செய்வது சிறப்பு. பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் தலவிருட்சம் நெல்லிமரம்.திருநெல்லிகா, திருநெல்வாயில், திருப்பழையாறை வடதளி, திருவூறல் (தக்கோலம்) முதலிய திருத்தலங்களில் நெல்லி மரமே தலமரமாக விளங்குகின்றது.

28. வேப்பமரம்

அம்மன் கோயில் என்றால் வேப்பமரம் தானே. அம்மனை வேப்பிலைக் காரி என்று அழைப்பார்கள். வேம்பு இருக்கும் இடத்தில் நோய் அண்டாது. இம்மரம் வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் மிகையான மருத்துவப்பயனால் “அம்மை” போன்ற கடுந்தொற்று நோய்களுக்கு மருந்தாவதாலும், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை நல்குவதால் இம்மரம் தொன்றுதொட்டு தெய்வீக மரமாகக் கருதப்பட்டு வருகிறது.

இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, எண்ணெய், பிண்ணாக்கு முதலியன மிகுந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. திருக்குடந்தைக் காரோணம், புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்), திருவாட்போக்கி (ஐயர்மலை), குடந்தைக்காரோணம் ஆகிய திருக்கோயில்களில் வேம்பு தலமரமாக உள்ளது. இனி மற்ற தலங்களில் உள்ள தலமரங்களை விரைவாகப் பார்ப்போம்.

29. மருதமரம்

கோயம்புத்தூரில் உள்ள மருதமலையில் தண்டபாணி கோயிலின் தலவிருட்சம் மருதமரம் திருவிடைமருதூர், திருஇடையாறு, திருஅம்பர் பெருந்திருக்கோவில், திருஅம்பர் மாகாளம், திருப்பருப்பதம் ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது. திருச்செந்தூரில் முருகனுக்கு பன்னீர் மிக விசேஷமானது இங்கு பன்னீர் இலைகளில் மட்டுமே விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகின்றது. திருக்கானப்பேர் (காளையார்கோவில்), திருத்திலதைப்பதி தலங்களில் தலமரமாக விளங்குவது மந்தாரை ஆகும்.

சீர்காழியில் – பாரிஜாதமும், திருநெல்வேலியிலும் திருவேட்களத்திலும் மூங்கில் தலமரங்களாக உள்ளன. பட்டுக் கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப் பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில் ஆலமரமே கடவுளாக வழிபடப்படுகிறது. தாமரங்கோட்டையிலிருந்து வடக்கே – இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அத்திவெட்டி பிச்சினிக்காடு. கிராமத்தில் ஆவாரங்காட்டுக்குள் ஒற்றைப் பனைமரம் உள்ளது.

பனையின் கீழ் சிறு கொட்டகை மட்டுமே. மற்றபடி, மாலை சந்தனம் குங்குமம் எல்லாம் ஒற்றைப் பனைக்கே. (அந்தப் பனை மரம்தான் வயிரவர்) திருக்கடவூரில் தலவிருட்சம் – முல்லைக் கொடியாகும். சந்தனமரம், அத்திமரம் – விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் இன்றி சுபகாரியங்களும், பூஜைகளும் ஏது! வாஞ்சியத்திலும் திருமாலிருஞ் சாலையிலும் தலமரமாக – சந்தனமரம் உள்ளது. திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர், திருநாலூர் மயானம் ஆகிய சிவத்தலங்களில் புரசு (பலாசம்) தலமரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

30. நிறைவுரை

வில்வத்திற்கு அடுத்து அதிக தலங்களில் விளங்கும் பெருமையை உடையது – வன்னியே. திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருப்பழுவூர் – முதலிய திருத்தலங்களின் தலமரமாக ஆலமரம் உள்ளது. திருப்பூந்துருத்தி, திருவான்மியூர், தஞ்சை ஆகிய தலங்களின் தலமரம் – வன்னி. கொன்றை, வில்வம், ஆல், வன்னி, மகிழ் – ஆகியன சிவபெருமானின் அம்சங்கள். இம்மரங்களின் கீழிருந்து தியானம் செய்தால், தியானம் எளிதாக கைகூடும். திருப்புன்கூர் திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது புங்கமரமாகும். திருக்கோடிகா என்னும் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது பிரம்பு ஆகும். இஃது அடர்ந்து வளரும் கொடி இனத்தைச் சார்ந்தது.

திருப்பாதிரிப்புலியூர், திருவலிதாயம், திருஅவினாசி, திருவாரூர், ஆரூர் அரநெறி, திருவாரூர் – ஆரூர்ப்பரவையுண்மண்டளி, திருப்புக்கொளியூர் (அவிநாசி), அவளிவணல்லூர் முதலிய சிவத்தலங்களில் பாதிரி தலமரமாக விளங்குகின்றது. திருவாழ்கொளிப்புத்தூர் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது வாகை மரமாகும். திரு ஊறல் (தக்கோலம்) திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது வால்மிளகு ஆகும். திருகாறாயில், திருவிளநகர், திருநின்றியூர் திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது விளாமரம் ஆகும்.

திருப்பனந்தாள், திருப்புறவார் பனங்காட்டூர், திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவலம்புரம், திருப்பாலைத்துறை, திருக் கன்றாப்பூர் முதலிய சிவத்தலங்களில் பனைமரம் தலமரமாக விளங்கு கின்றது. திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பசுமையான மரங்களை பகவானாக தரிசியுங்கள். மனம் தெளிவாகும். சிந்தனை உருவாகும். வாழ்க்கை சுகமாகும்.

எஸ். கோகுலாச்சாரி

The post தீமைகளை நீக்கி நல்வாழ்வு அருளும் தெய்வீக தலமரங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்