×

6,244 காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நெல்லை, தூத்துக்குடி,தென்காசியில் 1.36 லட்சம் பேர் எழுதினர்

நெல்லை : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடந்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் 1.36 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் விஏஓக்கள் – 108, அரசுத் துறைகள் மற்றும் நீதித்துறையில் இளநிலை உதவியாளர் (பிணையமற்றது – 2,442, டைப்பிஸ்ட் – 1653 உள்ளிட்ட 35 வகையான பணியிடங்கள் மூலம் 6 ஆயிரத்து 244 காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, மானூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை ஆகிய 8 தாலுகாக்களில் 226 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடந்தது. இத்தேர்வை 57 ஆயிரத்து 787 ேபர் தேர்வு எழுதினர்.தேர்வு எழுதுவதற்காக காலை 8 மணி முதலே பலரும் மையங்களுக்கு வரத் தொடங்கினர். 9 மணிக்கு முன்னரே தேர்வு எழுத வந்தவர்களின் நுழைவுச்சீட்டு, ஆதார், டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஏதாவதொரு அடையாள அட்டை மற்றும் பேனா ஆகியவற்றுடன் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையத்திற்குள் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், இயர்போன், இயர்பட்ஸ் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒரு சில தேர்வு மையங்களில் போட்டித் தேர்வர்கள் தாமதமாக வந்ததால் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் சோகத்துடன் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். தேர்வறையில் ஒஎம்ஆர் விடைத்தாள் 9 மணிக்கும், வினாத்தொகுப்பு 9.15 மணிக்கு வழங்கப்பட்டு தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் இத்தேர்வு நடந்தது. பாளை. புனித சவேரியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த குரூப் 4 தேர்வு மையத்தில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதுவதை நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு துணை கலெக்டர் வீதம் எட்டு தாலுகாக்களுக்கு 8 துணை கலெக்டர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர். மேலும் 13 பறக்கும் படைகளும், தேர்வு பணிகளை மேற்கொள்ள தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 55 இயக்கக் குழு அலுவலர்களும், 226 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டனர். மேலும் தேர்வின் நடவடிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையத்திற்கு செல்வதற்கும், தேர்வு முடிந்த பின் செல்வதற்கும் போதிய பஸ் வசதிகள் செய்யப்பட்டது.

இத்தேர்வை நெல்லை தாலுகாவில் 6,325 பேரும், அம்பை தாலுகாவில் 6,252 பேரும், சேரன்மகாதேவி தாலுகாவில் 3,306 பேரும் ஆர்வத்துடன் பங்கேற்று எழுதினர். இதேபோல் மானூர் தாலுகாவில் 1873 பேரும், நாங்குநேரி தாலுகாவில் 2848 பேரும், பாளையங்கோட்டை தாலுகாவில் 18,619 பேரும் தேர்வெழுதினர். மேலும் ராதாபுரம் தாலுகாவில் 3,563 பேரும், திசையன்விளை தாலுகாவில் 1655 பேரும் தேர்வெழுதினர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 44,441 பேர் எழுதினர். இருப்பினும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தோரில் 13,337 பேர் நேற்று காலை தேர்வெழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். அதாவது நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தம் 23% பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஆப்சென்டாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஏரல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய 10 தாலுகாக்களில் அமைக்கப்பட்டிருந்த 200 தேர்வு மையங்களில் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடந்தது.

இத்தேர்வினை எழுத தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 58,373 விண்ணப்பித்திருந்தனர். இதில் 45,440 பேர் தேர்வு எழுதினர். 12,933 பேர் தேர்வெழுதவில்லை.
தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குரூப்-4 தேர்வினை கலெக்டர் லட்சுமிபதி நேரில் சென்று பார்வையிட்டார். தேர்வினை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 41 மொபைல் குழுக்களும், 18 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடியில் தேர்வினை எழுத வந்தவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் 231 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு 56 ஆயிரத்து 385 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 11 பேர் நேற்று தேர்வு எழுதினர். இது 81.6 சதவிகிதம் ஆகும். 10,374 பேர் தேர்வு எழுத வரவில்லை தென்காசி மாவட்டத்தில் மொத்தம் எட்டு தாலுகாக்கள் உள்ளது. தாலுகா வாரியாக தேர்வு எழுதியவர்கள் விபரம் வருமாறு: தென்காசி தாலுகாவில் 55 மையங்களில் அதிகபட்சமாக 13 ஆயிரத்து 740 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 10,811 பேர் வருகை தந்தனர்.

இது 7 8.68 சதவிகித வருகை ஆகும் 2, 829 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஆலங்குளம் தாலுகாவில் 25 மையங்களில் 5,684 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில்4,540 பேர் தேர்வு எழுதினர். இது 79.87 சதவிகித வருகை ஆகும். 1,144 பேர் தேர்வு எழுத வரவில்லை. கடையநல்லூர் தாலுகாவில் 34 மையங்களில் 9,059 பேர் விண்ணப்பித்திருந்தனர். 7,415 பேர் தேர்வு எழுத வருகை தந்தனர். இது 81.85 சதவிகித வருகை ஆகும். 1909 பேர் தேர்வு எழுத வரவில்லை. சங்கரன்கோவில் தாலுகாவில் மாவட்ட அளவில் இரண்டாவதாக ஐம்பது மையங்களில் 12 ஆயிரத்து
85 பேர் விண்ணப்பித்திருந்தனர். 10 ஆயிரத்து 896 பேர் தேர்வு எழுதினர். இது 85.09 சதவிகித வருகை ஆகும். 199 பேர் தேர்வு எழுத வரவில்லை.

செங்கோட்டை தாலுகாவில் 19 மையங்களில் 4,259 பேர் விண்ணப்பித்திருந்தனர். 3, 419 பேர் தேர்வு எழுதினர். இது 80.27சதவிகித வருகை ஆகும். 840 பேர் தேர்வு எழுத வரவில்லை. சிவகிரி தாலுகாவில் 19 மையங்களில் 4,587 பேர் விண்ணப்பித்திருந்தனர். 3,795 பேர் தேர்வு எழுதினர். இதை 82.73 சதவிகித வருகையாகும். 792 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருவேங்கடம் தாலுகாவில் மாவட்ட அளவில் குறைந்தபட்சமாக 11 மையங்களில் 2,203 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

1838 பேர் தேர்வு எழுதினர். இது 83.43 சதவீத தேர்ச்சி ஆகும். 365 பேர் தேர்வு எழுத வரவில்லை. வீரகேரளம் புதூர் தாலுகாவில் 18 மையங்களில் நான்காயிரத்து 48 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 3,297 பேர் வருகை தந்தனர். இது 81.4 சதவீத தேர்ச்சி ஆகும். 751 பேர் தேர்வு எழுத வரவில்லை. சங்கரன்கோவில் தாலுகாவில் மாவட்ட அளவில் இரண்டாவது எண்ணிக்கையாக 12,805 பேர் விண்ணப்பித்ததுடன் தேர்வு எழுத வந்தவர்கள் எண்ணிக்கையில் சதவிகித அடிப்படையில் முதலிடமாக 85.09 சதவீதம் பேர் தேர்வு எழுத வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 6,244 காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நெல்லை, தூத்துக்குடி,தென்காசியில் 1.36 லட்சம் பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : TNPSC Group 4 ,Nellie, Thoothukudi, Tenkasi ,Tamil Nadu Civil Service Commission ,Tamil Nadu ,Nellai, Thenkasi, Thoothukudi district ,Nellai, Thoothukudi, Thenkasi ,
× RELATED 393 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4...