×

அரசு கலை கல்லூரிகளில் பகுதி நேரமாக கலைகள் பயில புதிய பாடங்கள் அறிமுகம் அதிகாரிகள் தகவல் வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில்

வேலூர், ஜூன் 10: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் பகுதி நேரமாக புதிய கலை பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லூரி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் பகுதி நேரமாக கலைகள் பயில உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வாரம் இரண்டு நாட்கள் பகுதி நேர கலை பயிற்சி அளிப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவ்வியல் கலை, கிராமியக்கலை, கவின் கலை ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு கலையில் முதற்கட்டமாக 100 கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இக்கலை பயிற்சி அளித்திட தொகுப்பூதியத்தில் கலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். குரலிசை, தேவாரம், மிருதங்கம், பரதநாட்டியம், ஓவியம், நவீன சிற்பம், கைவினை, கிராமிய பாடல், கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களில் 100 பகுதி நேர ஆசிரியர்கள்2 மணி நேர வகுப்புகளுக்கு ₹750 வீதம் மதிப்பூதியத்தில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் மேற்கொள்வதற்கு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரியில் வியாழன், வெள்ளி கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை தப்பாட்டம் பயிற்சி வழங்கப்படுகிறது. செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய், புதன் கிழமைகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிராமிய நடனம், திருவண்ணாமலை கருணாநிதி அரசு கலை கல்லூரியில் புதன், வெள்ளி கிழமைகளில் பிற்பகல் 2.15 முதல் பிற்பகல் 3.15 குரலிசை பயிற்சி வழங்கப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய், வியாழன் கிழமைகளில் குரலிசை பயிற்சியும், வாலாஜா அண்ணா பெண்கள் கல்லூரியில் செவ்வாய், வியாழன் கிழமைகளில் பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கிராமிய பாடல், வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய், வியாழன் கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை தெருக்கூத்து பயிற்சியும், சேர்க்காடு அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய், வியாழன் கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கைவினை பயிற்சியும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய், வியாழன் கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை குரலிசை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கல்லூரி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அரசு கலை கல்லூரிகளில் பகுதி நேரமாக கலைகள் பயில புதிய பாடங்கள் அறிமுகம் அதிகாரிகள் தகவல் வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Tags : Vellore, Tiruvannamalai ,Vellore ,Tiruvannamalai ,Tirupattur ,Ranipet ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!