×

தேடி, ஓடி, கொஞ்சியும் தாய் யானை மனசு கரையல அம்போவென தவித்த குட்டி யானை முதுமலை முகாமிற்கு அனுப்பிவைப்பு: வனத்துறை முயற்சி பலன் அளிக்காததால் நடவடிக்கை

கோவை: கோவை மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் கடந்த 30ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த யானையின் அருகே 3 மாத குட்டி யானையும் இருந்தது. தாயை மீட்க குட்டி நடத்திய பாச போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி கண்கலங்க வைத்தது. வனத்துறை மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையால் குணமடைந்த யானை, கடந்த 3ம் தேதி வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தாயுடன் இருந்த குட்டி யானை வனத்திற்குள் சென்று காணாமல் போனது. பின்னர், கடந்த 5ம் தேதி குட்டி யானையை தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் வனத்துறையினர் மீட்டனர். அதன்பின், மருதமலை பகுதியில் உள்ள யானை மடுவு என்ற இடத்திற்கு குட்டி யானை கொண்டு செல்லப்பட்டது. கடந்த 4 நாட்களாக குட்டி யானையை, தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

கடந்த 4 நாளில், 7 முறை குட்டி யானை தாயின் அருகே சென்றது. தாய் யானையுடன் ஓடி விளையாடி, கொஞ்சியபடி கால்களின் அருகே நடந்து சென்றது. இந்த பாச போராட்டம் ஜெயிக்கும், தாய் யானை எப்படியும் குட்டியை ஏற்கும் என காத்திருந்த வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். இரவு, பகல் தூக்கம் இல்லாமல் வனத்திற்குள் சென்று யானையை அதன் தாயுடன் சேர்க்க முயன்றும் முடியாமல் போய்விட்டதே என வனத்துறையினர் வேதனை அடைந்தனர்.

இதையடுத்து நேற்று அதிகாலை குட்டி யானை முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் விடப்பட்டது. இந்த முகாமில் ஏற்கனவே பராமரிக்கப்படும் 29 யானைகளுடன் இதையும் சேர்த்து 30 யானைகளாகிறது. நல்ல ஆரோக்கியமாக 150 கிலோ எடையுள்ள இந்த குட்டி யானையை பராமரிக்க 2 பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் லாக்டோஜன் பால், குளுக்கோஸ் கலவை வழங்கப்பட உள்ளது. முதலில் பிரத்யேக கூண்டில் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

The post தேடி, ஓடி, கொஞ்சியும் தாய் யானை மனசு கரையல அம்போவென தவித்த குட்டி யானை முதுமலை முகாமிற்கு அனுப்பிவைப்பு: வனத்துறை முயற்சி பலன் அளிக்காததால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Manasu Kareala Ambovena ,Mudumalai ,Coimbatore ,Coimbatore Marudamalai forest ,Muthumalai camp ,Dinakaran ,
× RELATED மருதமலை வனப்பகுதியில் தாயுடன்...