×

ஒன்றிய அமைச்சர் பதவிக்காக டெல்லியில் தவம் கிடந்த அண்ணாமலைக்கு பெரும் ஏமாற்றம்: மாநில தலைவராக நீடிக்கவே விரும்புவதாக `அந்தர் பல்டி’

சென்னை: மோடி தலைமையில் அமைந்த புதிய மத்திய அமைச்சரவையில் பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. மத்திய அமைச்சர் பதவிக்காக டெல்லியில் தவம் கிடந்த அண்ணாமலைக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மாநிலத் தலைவராக நீடிக்கவே விரும்புவதாக அண்ணாமலை அந்தர் பல்டி அடித்துள்ளார். தமிழகத்தில் பாஜ தலைமையில் 8 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதில் 19 தொகுதிகளில் பாஜ நேரடியாக களம் கண்டது.

ஆனால், அனைத்து தொகுதியிலும் மக்கள் தோல்வியைத்தான் பாஜவுக்கு பரிசாக அளித்தனர். தேர்தல் முடிந்ததும் பாஜவின் தோல்விக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலைதான் காரணம். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் 20 இடங்களிலாவது வெற்றி பெற்று இருக்கலாம் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கல்யாணராமன் போன்றவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கினர். இது பாஜவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சலசலப்புக்கு மத்தியில் அண்ணாமலை அழையா விருந்தாளியாக திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற அவர் பாஜ சார்பில் நடைபெற்ற எந்தக் கூட்டத்திலும் பங்கேற்றதாக தெரியவில்லை. அவருக்கு அழைப்பும் இல்லை எனக் கூறப்பட்டது. அதே நேரத்தில் அங்கு சென்ற அவர் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கப் போவதாக தேசிய மீடியாக்கள் வரை பேச வைத்தார்.
ஆனால் பதவி ஏற்கும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று பிற்பகலில் நடத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கூட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள லாபியில் அண்ணாமலை தயாராக இருந்தார். ஆனால் அந்த கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்து வந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மட்டும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகே தனக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பதை அண்ணாமலை உணர்ந்தார். இதனால், அண்ணாமலை மிகவும் வருத்தத்தில் உறைந்து போனதாக கூறப்படுகிறது.

கடைசியில் வெளியே வந்த அண்ணாமலை “நான் அமைச்சராக ஆசைப்படவில்லை. அமைச்சர் பதவியும் கேட்கவில்லை. மாநிலத் தலைவராக பணியாற்றதான் ஆசைப்படுகிறேன். அடுத்து வர உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரை மாநில தலைவராகவே தொடர விரும்புகிறேன்” என்று கூறி ஒருவகையாக அனைவரையும் சமாளித்தார். அதே நேரத்தில் டெல்லி சென்று அமித்ஷாவையும் பார்க்க முடியவில்லை.

இதனால் மாநிலத் தலைவர் பறி போகிவிடுமோ என்ற அச்சத்தில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எல்.சந்தோஷை மட்டும் சந்தித்துப் பேசினார். அதே நேரத்தில் படுதோல்வி அடைந்த மாநிலங்களின் தலைவர்கள், சீட் குறைந்த மாநிலங்களின் பாஜ தலைவர்களை மாற்ற டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனால், தமிழகத்தில் மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையும் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இன்னும் 2 மாதத்தில் பாஜ தலைவர்கள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தலைவர் பதவியை பிடிக்கும் ரேஸில் சட்டப்பேரவை பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தென்காசியை சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் மாநில தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

* படுதோல்விக்கு பிறகும் தொடர்ந்து வடை சுடும் அண்ணாமலை
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை பாஜ அமைத்தது. அந்தத் தேர்தலில் பாஜ தரப்பில் கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவர் 3,89,701 வாக்குகளைப் பெற்றார். அடுத்த 10 ஆண்டுகளில் சி.பி.ராதாகிருஷ்ணனைக் காட்டிலும் அதிகமாக அண்ணாமலை மொத்தம் 4,50,132 வாக்குகளைப் பெற்றுள்ளார். வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அண்ணாமலை பாஜவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் போலத் தெரிகிறது.

ஆனால், 10 ஆண்டில் கோவை தொகுதியில் அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை, பதிவான வாக்குகள், வாக்கு சதவீதத்தை கணக்கிட்டால் தற்போது அண்ணாமலை 32.79 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளார். ஆனால், சி.பி.ராதாகிருஷ்ணனோ கோவையில் பதிவான வாக்கில் 33.6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அண்ணாமலையை விட சி.பி.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாகத்தான் கருத முடியும். மேலும் சி.பி.ராதாகிருஷ்ணன் 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஆனால் அண்ணாமலை 1,18,068 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளார். அப்படியிருக்கும்போது கோவை தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றதாக அண்ணாமலை பொய்யான தகவலை கூறி வருகிறார். இவ்வாறு அண்ணாமலை பேசி வருவதை, பாஜ மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. சி.பி.ராதாகிருஷ்ணன் மிகவும் அமைதியானவர். அவருக்கு உள்ளடி அரசியல் எதுவும் செய்யத் தெரியாது. இதுவே தமிழிசையாக இருந்திருந்தால் அண்ணாமலையின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பார் என மூத்த தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

The post ஒன்றிய அமைச்சர் பதவிக்காக டெல்லியில் தவம் கிடந்த அண்ணாமலைக்கு பெரும் ஏமாற்றம்: மாநில தலைவராக நீடிக்கவே விரும்புவதாக `அந்தர் பல்டி’ appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Delhi ,Union Minister ,``Andar Paldi'' ,Chennai ,BJP ,President ,Union Cabinet ,Modi ,Andar Baldi ,``Andar Baldi'' ,state ,Dinakaran ,
× RELATED காங்கிரசார் ஆர்ப்பாட்டம் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து