×

பாஜவுக்கு வாக்களிக்காத மராத்தாக்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க ஜராங்கே வலியுறுத்தல்

ஜல்னா: மகாராஷ்டிராவில் பாஜவுக்கு வாக்களிக்காத மராத்தாக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாராஷ்டிராவின் பீட் மக்களவை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் பங்கஜ முன்டே 6,77,397 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திரபவார்) வேட்பாளர் பஜ்ரங் மனோகர் சோன்வானே 6,83,950 வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்நிலையில் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜாரங்கே பாட்டீல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

ஜல்னா மாவட்டம் அந்தர்வாலி சாரதி கிராமத்தில் போராட்டம் நடத்தி வரும் ஜாரங்கே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜாரங்கே, “பீட் தொகுதியில் மராத்தாவினர் பாஜவுக்கு வாக்கு செலுத்தாததால் பாஜ வேட்பாளர் பங்கஜ முன்டே தோற்று போய் விட்டதாக பாஜவினர் நினைக்கின்றனர். இதற்காக பீட் மாவட்டத்தின் ஒருசில கிராமங்களில் மராத்தாக்கள் மீது பாஜவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பீட் காவல்துறை கண்காணிப்பாளர், மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்நவிசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் மராத்தா இளைஞர்கள் அமைதி காக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

The post பாஜவுக்கு வாக்களிக்காத மராத்தாக்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க ஜராங்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Jarange ,Jalna ,Marathas ,Maharashtra ,Lok Sabha ,Pankaja Munde ,Dinakaran ,
× RELATED போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது