×

நீட் தேர்வு குளறுபடி குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்: ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டால் 24 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக இருப்பேன் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். நாடு முழுவதும் நடந்த மருத்துவ நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வினாத்தாள் கசிந்ததாகவும், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம்சாட்டுகின்றனர். நாடு முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மோடி இன்னும் பதவியேற்கவில்லை, அதற்குள் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் அழித்து விட்டது. ஒரே தேர்வு மையத்தில் 6 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்றுள்ளனர். பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால் வினாத்தாள் கசிந்திருப்பதாக எழும் குற்றச்சாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

கல்வி மாபியாவும் அரசு இயந்திரமும் இணைந்து வினாத்தாள் கசியவிடுவதை தடுக்க காங்கிரஸ் வலுவான திட்டம் வகுத்துள்ளது. இதற்கான சட்டம் இயற்றுவதன் மூலம் வினாத்தாள் கசிவிலிருந்து விடுதலை வழங்குவோம் என எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளோம். அதன்படி, நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும், நாடாளுமன்றத்தில் நான் உங்கள் குரலாக இருப்பேன் என்றும், உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்னைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதி அளிக்கிறேன். இளைஞர்கள் இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இளைஞர்களின் குரலை நசுக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.

The post நீட் தேர்வு குளறுபடி குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்: ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : NEET ,Rahul Gandhi ,New Delhi ,Congress ,Parliament ,Dinakaran ,
× RELATED நடப்பாண்டு நீட் தேர்வில் பாஜ ஆளும்...