×

நீட் தேர்வின் தீமையை கண்டறிந்து முதலில் எதிர்த்தது திமுகதான்: ஏ.கே.ராஜன் அறிக்கையை டிவிட்டரில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: நீட் தேர்வின் தீமையை கண்டுணர்ந்து முதலில் எதிர்ப்பு தெரிவித்தது திமுகதான் என ஏ.கே.ராஜனின் அறிக்கையை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழகம்தான் நீட் தேர்வின் தீமைகளை முதன்முதலில் கண்டுணர்ந்து, பெரிய அளவில் அதற்கெதிராகப் பரப்புரை மேற்கொண்டது. ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றினை அமைத்தோம்.

அக்குழு மிக விரிவான தரவுப் பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் இடம் பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஏற்படுத்திய தேவையற்ற தாமதத்தையடுத்து, தற்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

நீட் தேர்வில் அண்மையில் நடந்த பரவலான குளறுபடிகளால், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் இவ்வேளையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள ஏதுவாக, நீதியரசர். ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் பகிர்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post நீட் தேர்வின் தீமையை கண்டறிந்து முதலில் எதிர்த்தது திமுகதான்: ஏ.கே.ராஜன் அறிக்கையை டிவிட்டரில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Simuka ,Stalin ,Rajan ,Chennai ,K. Sharing Rajan ,Chief Minister ,Mu. K. Stalin ,Twitter ,Dravitha Advancement Club ,A. K. Rajan ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில்...