×

6,244 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 15.88 லட்சம் பேர் எழுதினர்

* 1 பணியிடத்துக்கு 254 பேர் என்ற அளவில் போட்டி, அடுத்தாண்டு ஜனவரியில் ரிசல்ட் வெளியிட திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று குரூப் 4 தேர்வு நடந்தது. 6244 காலி பணிகளுக்கு நடந்த இத் தேர்வை 15.88 லட்சம் பேர் எழுதினர். இதனால், ஒரு பணியிடத்திற்கு 254 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனிச் செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியது.

இதனால் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 37,101 ஆனது. இதில் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுத அனுதிக்கப்பட்டனர். குரூப் 4 எழுத்து தேர்வு நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் 7247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு கண்காணிப்பு பணியில் சுமார் 1.50 லட்சம் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, திருவான்மியூர், அண்ணாநகர், வடபழனி, பெரம்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 432 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,32,276 பேர் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பகல் 12.30 மணி வரை நடந்தது.

எழுத்து தேர்வில் பகுதி 1ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பகுதி 2ல் பிரிவில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என 100 வினாக்களும், ஆக மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது.

தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தேர்வு எழுதுபவர்கள் காலை 7 மணி முதலே வரத் தொடங்கினர். அவர்கள் தேர்வு கூடங்களுக்கு வெளியே இறுதிக்கட்டமாக புத்தகங்களை படித்து தயாராகினர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மோதிரம் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குரூப் 4 தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுதியதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 தேர்வு ஒரு திருவிழா போல நடந்து முடிந்தது. குரூப் 4ல் ஒரு பணிக்கு நியமனம் பெற 254 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கட் ஆப் மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை அடுத்த ஆண்டு ஜனவரியில் மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். அடுத்து கலந்தாய்வையும் நடத்த டிஎன்பிஎஸ்சி தயாராகி வருகிறது.

* எளிதான வினாக்கள்
தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், “கட்டாயத் தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்தது. பொது அறிவில் கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. மறைமுக வினாக்களைப் போல சில வினாக்கள் இடம் பெற்றிருந்தது” என்றனர்.

* 4.48 லட்சம் பேர் ஆப்சென்ட்
குரூப் 4 தேர்வை எழுத 20 லட்சத்து 37,101 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 78% பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது, 15 லட்சத்து 88,684 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். 22 சதவீதம் பேர் வரவில்லை. அதாவது 4 லட்சத்து 48 ஆயிரத்து 90 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

* பெரும்பாலான கேள்விகள் தினகரன் நாளிதழ் மாதிரி வினா-விடைத்தாளில் வந்தவை: தேர்வர்கள் பாராட்டு
தினகரன் நாளிதழ் வெளியிட்ட மாதிரி வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட பொதுத்தமிழ் பிரிவு வினாக்களில் இருந்து 95 சதவீத கேள்விகள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்டிருந்ததாக தேர்வர்கள் பாராட்டு தெரிவித்தனர். டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வை நேற்று எழுதிய பெரும்பாலானோர் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.

இந்த தேர்வில் தேர்வாளர்கள் வெற்றிபெறுவதற்காக தினகரன் நாளிதழ் டிஎன்பிஎஸ்சிக்கான மாதிரி வினா-விடை பகுதியை கடந்த 109 நாட்களாக வெளியிட்டு வந்தது. பொதுத் தமிழ் வினாக்களைப் பொறுத்தளவில், தினகரன் நாளிதழில் வெளிவந்த மாதிரி வினா-விடை பகுதியில் இருந்து 95 சதவீத வினாக்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக புறநானூறு, குறுந்தொகை பாடல்கள் பற்றி கேட்கப்பட்டிருந்த கேள்விகள் ஒத்திருந்தன என தேர்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

The post 6,244 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 15.88 லட்சம் பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : TNPSC Group 4 ,Chennai ,Tamil Nadu ,
× RELATED 393 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4...