×

ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள் மாற்றம் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் பயணிகள் ரயில்களாக மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில்கள், ஜூலை 1 முதல் பயணிகள் ரயில்களுக்கான எண்களை கொண்டு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகரங்களையும், சிறுகிராமங்களையும் இணைக்கும் முக்கிய ரயில் போக்குவரத்தாக பயணிகள் ரயில் விளங்குகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு தெற்கு ரயில்வேயில் 5,081 கி.மீ. தொலைவுக்கு 487 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன.

கொரோனா கட்டுப்பாட்டின்போது நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவை, பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் எனும் பெயரில் இயக்கப்பட்டன. இதனால் குறைந்தப்பட்ச கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.30ஆக உயர்ந்ததால் தினசரி பயணிக்கும் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரயில்கள், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரயில்களுக்கான எண்களாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் இருந்து அனைத்து கோட்டப் பொதுமேலாளருக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரயிலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களாக மாற்றி இயக்கப்பட்டன. இந்த ரயில்களின் எண்களும் ‘0’ வில் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் பழைய எண்களை அறிவிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரயில்களின் எண்கள் ஜூலை 1ம் தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்படும். உதாரணமாக திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 06728 எனும் எண்ணுக்கு பதிலாக 66070 எனும் எண்ணிலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் 06504 எனும் எண்ணுக்கு பதிலாக 56719 எனும் எண்ணிலும் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள் மாற்றம் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் பயணிகள் ரயில்களாக மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,CHENNAI ,Corona ,Dinakaran ,
× RELATED தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு