×

39 ரன்னில் ஆல் அவுட் அகீல் சுழலில் மூழ்கியது உகாண்டா: வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி

கயானா: உலக கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில் உகாண்டா அணியை வெறும் 39 ரன்னில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ் 134 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் அகீல் உசேன் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். புராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்தது. பிராண்டன் கிங் 13,, ஜான்சன் சார்லஸ் 44, நிகோலஸ் பூரன் 22, கேப்டன் பாவெல் 23, ரூதர்போர்டு 22 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆந்த்ரே ரஸ்ஸல் 30 ரன், ரொமாரியோ 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உகாண்டா பந்துவீச்சில் பிரையன் மசபா 2, ராம்ஜனி, காஸ்மஸ், தினேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய உகாண்டா அணி அகீல் உசைன் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 12 ஓவரில் 39 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது (3 பேர் டக் அவுட்). ஜுமா மியாகி அதிகபட்சமாக 13 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அகீல் 4 ஓவரில் 11 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அல்ஜாரி 2, ரொமாரியோ, ரஸ்ஸல், குடகேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

* உகாண்டா 39 ரன்னில் சுருண்டு, டி20 உலக கோப்பையில் குறைந்தபட்ச ஸ்கோர் அடித்த அணியாக நெதர்லாந்துடன் முதல் இடத்தை பகிர்ந்துகொண்டது. முன்னதாக, 2014ல் இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து 39 ரன்னில் ஆல் அவுட்டாகி இருந்தது.
* வெஸ்ட் இண்டீஸ் 134 ரன் வித்தியாசத்தில் வென்றது, உலக கோப்பை டி20ல் 2வது அதிகபட்ச ரன் வித்தியாச வெற்றியாக அமைந்தது. 2007 உலக கோப்பையில் இலங்கை அணி 172 ரன் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தி முதலிடம் வகிக்கிறது (இலங்கை 260/6; கென்யா 88).
* டி20 உலக கோப்பையில், ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமை அகீல் உசைனுக்கு கிடைத்துள்ளது. 2014ல் வங்கதேசத்துக்கு எதிராக சாமுவேல் பத்ரீ 15 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்திய சாதனையை அகீல் முறியடித்துள்ளார்.
* உகாண்டா அணியில் ஆட்டமிழந்த 10 பேரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 2009ல் இலங்கைக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் இந்த மோசமான சாதனையை நிகழ்த்தியிருந்தது.

The post 39 ரன்னில் ஆல் அவுட் அகீல் சுழலில் மூழ்கியது உகாண்டா: வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி appeared first on Dinakaran.

Tags : Akhil ,Uganda ,West Indies ,Guyana ,World Cup Group C league ,Akeel Hussain ,Akeel ,Dinakaran ,
× RELATED இன்று முதல் இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்...