×

கூட்டணிக்குள் ஆரம்பித்தது மோதல் கேபினட் அமைச்சர் பதவி தான் வேணும்… அஜித்பவார் போர்கொடி

புதுடெல்லி: பாஜ கூட்டணியில் நேற்றே முதல் மோதல் வெடித்தது. இணை அமைச்சர் பொறுப்பு வழங்க பாஜ தலைமை முன் வந்த நிலையில், கேபினட் அமைச்சர் பொறுப்பு மட்டுமே வேண்டும் என்று தேசிய வாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார் போர் கொடி தூக்கி உள்ளார். பாஜ, சிவசேனா ஷிண்டே அணியுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மக்களவை தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்தது. அக்கட்சி போட்டியிட்ட 4 தொகுதியில் ராய்காட்டில் மட்டுமே வென்றது. பாராமதியில் நடந்த கவுரவ மோதலில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவிடம் தோல்வி அடைந்தார்.

இதனால், அஜித் பவாருக்கு மவுசு குறைந்ததால் அவரது கட்சிக்கு ஒரே ஒரு தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி தர பாஜ முன்வந்தது. அதுவும் மாநிலங்களவை எம்பியான பிரபுல் படேலுக்கு தர முடிவு செய்தது. ஆனால், இதை ஏற்க அஜித் பவார் மறுத்து விட்டார். கேபினட் அந்தஸ்துடன் முக்கிய பொறுப்பு வேண்டுமென முரண்டுபிடிக்கிறார். இதனால் பாஜ கூட்டணியில் மோதல் உருவாகி விட்டது. அமைச்சரவையில் அஜித் பவாரின் கட்சி இடம் பெறவில்லை. அதே சமயம், கூட்டணி ஆட்சியில் அனைவருக்கும் வகுக்கப்பட்ட பார்முலாவை ஒரு கட்சிக்காக உடைக்க முடியாது என பாஜ திட்டவட்டமாக கூறி விட்டது. இதனால் அஜித் பவார் கடும் அதிருப்தியில் உள்ளார்.

இது குறித்து பிரபுல் படேல் கூறுகையில், நான் ஏற்கனவே ஒன்றிய கேபினட் அமைச்சராக பதவி வகித்தவன், இப்போது இணை அமைச்சர் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டால் அது பதவி இறக்கமாகவே இருக்கும். இதை ஏற்க முடியாது. இது பற்றி பாஜ தலைமையிடம் கூறியுள்ளோம். அவர்கள் விரைவில் நல்ல பதில் சொல்வதாக தெரிவித்துள்ளனர் என்றார். ஆனால், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறுகையில், மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை பொறுத்துதான் அமைச்சர் பதவி தரப்படும். அதன்படி ஒரு எம்பி உள்ள தேசியவாத காங்கிரசுக்கு ஒரு இணையமைச்சர் பதவிதான் என்பதில் பாஜ உறுதியாக உள்ளது. அஜித் பவாருக்காக அமைச்சர் பதவி ஒதுக்கீடு பார்முலாவை மாற்ற முடியாது என்றார். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் மோதல் முற்றி உள்ளது. இது மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

* மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் அஞ்சலி
பிரதமராக 3வது முறையாக பதவியேற்பதைத் தொடர்ந்து மோடி, நேற்று காலை டெல்லி ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து பாஜ மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் நினைவிடத்திற்கும், இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கும் சென்ற மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

* கார்கே பங்கேற்றார்
மோடி பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்பது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு கார்கே மட்டும் விழாவில் பங்கேற்றார். அவரைத் தவிர பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அழைப்பை புறக்கணித்தன. மம்தா உத்தரவைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை. இதே போல சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகிய இடதுசாரி கட்சி தலைவர்களும் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர்.

* மூன்றாம் பாலினத்தவர்கள்
முதல் முறையாக பங்கேற்பு
பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மூன்றாம் பாலினத்தவர்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட அச்சமூகத்தை சேர்ந்த 50 பிரதிநிதிகள் விழாவில் பங்கேற்று மோடி அரசுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பங்கேற்றவர்களில் ஒருவரான உபி பாஜ கட்சியை சேர்ந்த சோனம் கின்னார், ‘‘தேர்தலில் எதிர்பார்த்த அளவு சீட்கள் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. ஆனாலும் பிரதமர் மோடி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த நிலைமை விரைவில் மாறும்’’ என்றார். பிரதமர் பதவியேற்பு விழாவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முறைப்படி அரசு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

* 7 அண்டை நாடுகளின்
தலைவர்கள் பங்கேற்பு
பதவியேற்பு விழாவில் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாள பிரதமர் பிரசண்டா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூக்நாத், ஷெஷல்ஸ் துணை அதிபர் அகமது அபீப் ஆகிய 7 தலைவர்கள் பங்கேற்றனர்.

* சாமானியர்களுக்கு அழைப்பு
பதவியேற்பு விழாவில் சாமானிய சாதனையாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட 250 தொழிலாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். உத்தரகாண்ட் உத்தரகாசியில் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்ட எலி துளை நிபுணர்கள், மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் அடையாளம் காணப்பட்ட சாதனையாளர்கள் பங்கேற்றனர். இவர்களைத்தவிர பத்ம விருது பெற்றவர்கள், மத தலைவர்கள், பிரபல வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட 9,000 பேர் பங்கேற்றனர். கடந்த 2014ல் மோடி பதவியேற்பு விழாவில் 5,000 பேரும், 2019ல் 8,000 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

* ரஜினிகாந்த், அதானி, அம்பானி சிறப்பு விருந்தினர்கள்
மோடி பதவியேற்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

* துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவாரா?
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இம்முறை பெற்றுள்ளது. இதனால், மக்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு தரப்படும். கடந்த ஜூன் 5ம் தேதியுடன் கலைக்கப்பட்ட 17வது மக்களவையில் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் இருந்ததால் 5 ஆண்டுக்கும் துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இம்முறை எதிர்க்கட்சிகள் பலத்துடன் இருப்பதால் இதற்கான அழுத்தம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் துணை சபாநாயகரை நியமிப்பதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை. கடந்த 16வது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 70 நாட்களுக்குப் பிறகு துணை சபாநாயராக அதிமுகவின் தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* ஹாட்ரிக் பிரதமர்
இந்திய பிரதமர்களில் நேரு மட்டுமே கடந்த 1952, 1957, 1962ல் 3 முறை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை வகித்துள்ளார். அவருக்குப் பின் தொடர்ந்து 3 முறை வென்று ஹாட்ரிக் பிரதமரான முதல் பிரதமர் மோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

* ‘இது மோடி அரசு அல்ல என்டிஏ அரசு’
ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா கூறுகையில், ஒன்றியத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள அரசை மோடி அரசு என்று அழைக்கக் கூடாது. இது என்டிஏ(தேசிய ஜனநாயக கூட்டணி) அரசு. இந்த ஆட்சியாவது சமுதாயத்தில் நலிவடைந்தோருக்கு ஏதாவது நல்லது செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என்றார்.

* 100 நாள் பணிகளை முடிக்க அமைச்சர்களுக்கு உத்தரவு
பதவியேற்புக்கு முன்பாக பிரதமர் மோடி நேற்று காலை 11.30 மணி அளவில் தனது வீட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார். இதில் பெரும்பாலும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற தலைவர்கள் பங்கேற்றனர். பாஜ மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து அமைச்சர்களும் முந்தைய பாஜ அரசின் விட்ட பணியை தொடர வேண்டுமெனவும், மக்கள் நலனில் அக்கறை செலுத்தவும் வலியுறுத்தினார். ஏற்கனவே திட்டமிட்டபடி புதிய அரசு பதவியேற்று 100 நாளில் செய்ய வேண்டிய பணிகளை விரைந்து நிறைவேற்றவும் உத்தரவு பிறப்பித்தார்.

* பல அடுக்கு பாதுகாப்பு
பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகையை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவப்படையினர், டெல்லி ஆயுதப் படை போலீசார் உட்பட 2,500 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பல வெளிநாட்டு தலைவர்கள் வருகையையொட்டி, ராஷ்டிரபதி பவன் வரும் பாதைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, விழா நடக்கும் பகுதியை சுற்றி வெளி வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. விழா நடக்கும் இடத்தில் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு பலத்த சோதனை செய்யப்பட்டது.

* வாக்குறுதி தந்தபடி தோற்றாலும் பதவி
பஞ்சாப்பை சேர்ந்த ரவ்னீத் சிங் பிட்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். லூதியானா தொகுதியில் போட்டியிட்ட பிட்டு, காங்கிரசின் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங்கியிடம் தோல்வி அடைந்தார். ஆனாலும், அவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிட்டு அளித்த பேட்டியில், ‘‘மீண்டும் 4வது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர நான் விரும்பவில்லை. அதனால் பாஜவுக்கு தாவினேன். நான் தோற்றாலும் வென்றாலும் அமைச்சரவையில் எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என பாஜ மேலிடம் வாக்குறுதி தந்தது. பஞ்சாப் மாநிலமே முதன்மையானது என பாஜ கூறியது. அதே போல தோற்றாலும் எனக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. பாஜ அரசு பஞ்சாப்பை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர விரும்புகிறது’’ என்றார்.

இந்திய பிரதமர்கள் பட்டியல்
ஜவகர்லால் நேரு (1947-1964)
லால் பகதூர் சாஸ்திரி (1964-1966)
இந்திரா காந்தி (1966-1977)
மொரார்ஜி தேசாய் (1977-1979)
சரண் சிங் (1979-1980)
இந்திரா காந்தி (1980-1984)
ராஜிவ்காந்தி (1984-1989)
வி.பி.சிங் (1989-1990)
சந்திரசேகர் (1990-1991)
பி.வி.நரசிம்மராவ் (1991-1996)
வாஜ்பாய் (1996-1996)
தேவகவுடா (1996-1997)
ஐ.கே.குஜ்ரால் (1997-1998)
வாஜ்பாய் (1998-2004)
மன்மோகன் சிங் (2004-2014)
நரேந்திர மோடி (2014 முதல் தற்போது வரை)

* கவனத்தை ஈர்த்த கிங் மேக்கர்கள்
பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியே பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவுக்கு வந்த கூட்டணியின் கிங் மேக்கர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். பாஜ மூத்த தலைவர்கள் மற்றும் புதிய அமைச்சர்கள் அவர்களை வணங்கி வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர்.

* அமைச்சரவையில் 6 மாஜி முதல்வர்கள்
புதிய அமைச்சரவையில் மொத்தம் 6 முன்னாள் முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ராஜ்நாத் சிங் உபியின் முன்னாள் முதல்வர் ஆவார். அவரைத் தவிர மபியின் சிவ்ராஜ் சிங் சவுகான், அசாமின் சர்பானந்தா சோனோவால், அரியானாவின் மனோகர்லால் கட்டார், கர்நாடகாவின் குமாரசாமி, பீகாரின் ஜிதன் ராம் மஞ்சி அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் பாஜவை சேர்ந்தவர்கள், குமாரசாமி (மஜத), மஞ்சி (இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா) இருவரும் பாஜ கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவர்.

* அடுத்த பாஜ தலைவர் யார்?
பாஜ கட்சி தலைவராக உள்ள ஜெ.பி.நட்டா பதவிக்காலம் இன்னும் ஒரு மாதத்தில் முடியவடைய உள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக அவரது பதவிக்காலம் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட நிலையில்தான் இருந்தது. இந்நிலையில், நேற்று அவர் ஒன்றிய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பாஜ கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியும் என்கிற கொள்கை பின்பற்றப்படுகிறது. அதன்படி, பாஜ தலைவராக ஜெ.பி.நட்டா நீடிக்க முடியாது. எனவே, விரைவில் உட்கட்சி தேர்தல் நடத்தி புதிய தலைவரை பாஜ தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்டா ஏற்கனவே மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 2014 நவம்பர் 9 முதல் 2019 மே 30 வரை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

* இளம் அமைச்சர் ராம் மோகன் நாயுடு
மோடி அமைச்சரவையில் இளம் அமைச்சர் தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு (37). ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 1996ம் ஆண்டு ஐமு கூட்டணி ஆட்சியில் ஒன்றிய அமைச்சராக இருந்த மறைந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் யர்ரான் நாயுடுவின் மகன். சிங்கப்பூரில் தொழில் செய்த ராம் மோகன் நாயுடு, 2012ல் கார் விபத்தில் தந்தையின் சோகமான மறைவைத் தொடர்ந்து அரசியலில் களமிறங்கினார். 2014ல் ஸ்ரீகாகுளம் தொகுதியில் 26 வயதில் போட்டியிட்டு 16வது மக்களவையில் 2வது இளம் எம்பியாக வெற்றி பெற்றார்.

* ஆந்திராவில் `ஆபரேஷன் தாமரை’
மக்களவையில் தனது பலத்தை அதிகரிப்பதற்கான திரைமறைவு வேலைகளை பாஜ தற்போது தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஆந்திராவில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெறாமல் ஆட்சியை இழந்துள்ள ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் வெற்றிபெற்ற 4 எம்பிக்களை பாஜகவுக்கு இழுக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதனிடையே காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், `பாஜக தனது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள ஆபரேஷன் தாமரையை தொடங்கிவிட்டது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்குகிறது’ என தெரிவித்துள்ளார்.

எந்தெந்த கட்சிக்கு எத்தனை
அமைச்சர்கள்
பாஜ 61
கூட்டணி கட்சிகள் 11
தெலுங்கு தேசம் 2
ஐக்கிய ஜனதா தளம் 2
லோக் ஜனசக்தி 1
மதசார்பற்ற ஜனதா தளம் 1
சிவசேனா 1
குடியரசு கட்சி 1
ஆர்எல்டி 1
அப்னா தளம் 1
இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 1

The post கூட்டணிக்குள் ஆரம்பித்தது மோதல் கேபினட் அமைச்சர் பதவி தான் வேணும்… அஜித்பவார் போர்கொடி appeared first on Dinakaran.

Tags : Ajit Pawar ,New Delhi ,BJP ,Minister of State ,Nationalist Congress ,Maharashtra ,Deputy ,Chief Minister ,Ajith ,Cabinet Minister ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வி எதிரொலி...