×

பீகார், ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிவால் போராட்டம்; 1,563 தேர்வருக்கு வழங்கிய கருணை மதிப்பெண் செல்லுமா?.. உயர்நிலை குழு விசாரணை தொடங்கியது; தேர்வு ரத்தாகுமா?

புதுடெல்லி: பீகார், ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிவால் போராட்டம் வெடித்துள்ள நிலையில், 1,563 ‘நீட்’ தேர்வருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உயர்நிலை குழு விசாரணையை தொடங்கி உள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடந்து முடிந்த தேர்வு ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. ராஜஸ்தானில் உள்ள ஒரு மையத்தில் வினாத்தாள் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது. தேர்வு தொடங்குவதற்கு முன்பாக நீட் வினாத்தாளை சில மாணவர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இருந்தபோதும், இந்தப் புகார்களை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மறுத்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் முதலிடம் பெற்றனர். மேலும் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையும் தேசிய தேர்வுகள் முகமை மறுத்தது. இதுதொடர்பாக வெளியான விளக்கத்தில், ‘என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், தேர்வு மையங்களில் சில தேர்வர்கள் நேரத்தை இழந்ததாலும் அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது’ என்று கூறப்பட்டது.

இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, இந்தாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ‘முறைகேடு புகார் எழுந்து நிலையில் இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என மகாராஷ்டிர மாநில அரசும் வலியுறுத்தியது. அதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் மறு ஆய்வு செய்யப்படும் என தேசிய தேர்வுகள் முகமை நேற்று அறிவித்தது. இதுகுறித்து நேற்று அதன் தலைவர் சுபோத் குமார் சிங் கூறுகையில், ‘நீட் தேர்வு எழுதியவர்களில் 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) முன்னாள் தலைவர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, தேர்வின் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மேலும், தேர்வு முடிவுகள் மறு ஆய்வு, இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயர்நிலைக் குழு அறிக்கையின் அடிப்படையில் தான், மறு தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார். வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் விவகாரங்களால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தேர்வுகள் முகமை, உயர் நிலைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறியுள்ளது. அவர்களும் விசாரணையை தொடங்கி விட்டனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஒருவேளை கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் பட்சத்தில், மீண்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இதே விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் தேர்வெழுதிய மாணவர்கள், பெற்றோர் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.

The post பீகார், ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிவால் போராட்டம்; 1,563 தேர்வருக்கு வழங்கிய கருணை மதிப்பெண் செல்லுமா?.. உயர்நிலை குழு விசாரணை தொடங்கியது; தேர்வு ரத்தாகுமா? appeared first on Dinakaran.

Tags : Bihar, Rajasthan ,NEW DELHI ,NEET ,Bihar ,Rajasthan ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய...