×

மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்பு; 30 பேருக்கு அமைச்சர் பதவி: உத்தேச பட்டியல் வெளியானதால் பரபரப்பு


புதுடெல்லி: மோடி இன்றிரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். அவருடன், முதல்கட்டமாக 30 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3வது முறையாக தக்கவைத்துக் கொண்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு புதிய ஒன்றிய அரசு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பிரதமராக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

பாஜக ஆட்சியில் உள்ள மாநில முதல்வர்கள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு, நீதி, மருத்துவம் உள்ளிட்ட துறைசார்ந்த பிரபலங்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். சுமார் ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதற்கிடையே ஒன்றிய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாகாக்கள் என்பது குறித்து, நேற்றிரவு அமித் ஷாவின் வீட்டில், ஜேபி நட்டா, பி.எல்.சந்தோஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின் இறுதி பட்டியல் மற்றும் இலாகாக்கள் முடிவு செய்யப்பட்டன. முன்னதாக இவர்கள் மூவரும் நேற்று மோடியை சந்தித்து கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் இலாகாக குறித்து விவாதித்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்றிரவு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். முழு அமைச்சரவையும் அவருடன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், சுமார் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மொத்த ஒன்றிய அமைச்சர்களின் எண்ணிக்கை 78ல் இருந்து 81 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பதவியேற்க உள்ள அமைச்சர்களின் உத்தேச பட்டியல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி மாநிலம் வாரியாக வருமாறு:

பீகார் ஜிதன் ராம் மஞ்சி (ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா)
லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்)
சுனில் குமார் (ஐக்கிய ஜனதா தளம்)
கவுசலேந்திர குமார் (ஐக்கிய ஜனதா தளம்)
ராம்நாத் தாக்கூர் (ஐக்கிய ஜனதா தளம்)
சஞ்சய் ஜா (ஐக்கிய ஜனதா தளம்)

ராஜீவ் பிரதாப் ரூடி (பாஜக)
சஞ்சய் ஜெய்ஸ்வால் (பாஜக)
நித்யானந்த் ராய் (பாஜக)
சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி)
உத்தர பிரதேசம்
ராஜ்நாத் சிங் (பாஜக)

அனுப்ரியா படேல் (அப்னா தளம்)
ஜெயந்த் சவுத்ரி (ராஷ்ட்ரிய லோக்தளம்)
ஜிதின் பிரசாத் (பாஜக)
கர்நாடகா எச்டி குமாரசாமி (மதசார்பற்ற ஜனதா தளம்)
பிரஹலாத் ஜோஷி (பாஜக)

பசவராஜ் பொம்மை (பாஜக)
கோவிந்த் கர்ஜோல் (பாஜக)
பிசி மோகன் (பாஜக)
மகாராஷ்டிரா பிரதாப்ராவ் ஜாதவ் (பாஜக)
நிதின் கட்கரி (பாஜக)

பியூஷ் கோயல் (பாஜக)
மத்திய பிரதேசம்
ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக)
சிவராஜ் சிங் சவுகான் (பாஜக)
தெலங்கானா கிஷன் ரெட்டி (பாஜக)

ஈட்டால ராஜேந்தர் (பாஜக)
டி.கே.அருணா (பாஜக)
டி அரவிந்த் (பாஜக)
பாண்டி சஞ்சய் (பாஜக)
ஒடிசா தர்மேந்திர பிரதான் (பாஜக)

மன்மோகன் சமல் (பாஜக)
ராஜஸ்தான் கஜேந்திர சிங் ஷெகாவத் (பாஜக)
துஷ்யந்த் சிங் (பாஜக)
கேரளா சுரேஷ் கோபி (பாஜக)
மேற்குவங்கம் சாந்துனு தாக்கூர் (பாஜக)

ஆந்திரா புரந்தேஸ்வரி (பாஜக)
கிஞ்சராபு ராம் மோகன் (ெதலுங்கு தேசம்)
ஜம்மு – காஷ்மீர் ஜிதேந்திர சிங் (பாஜக)
ஜுகல் கிஷோர் சர்மா (பாஜக)

அசாம் சர்பானந்தா சோனோவால் (பாஜக)
பிஜூலி கலிதா மேதி (பாஜக)
கிரண் ரிஜிஜு (பாஜக)
பிப்லப் தேவ் (பாஜக)

புதிய அமைச்சரவையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் இணைவது உறுதி என்று கருதப்பட்டாலும், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான், பசவராஜ் பொம்மை, மனோகர் லால் கட்டார், சர்பானந்தா சோனோவால், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்டி குமாரசாமி, ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 அமைச்சர்கள், தெலுங்கு தேசத்திற்கு 4 அமைச்சர்கள், மற்ற கட்சிகளின் தலைவர்களான ஜெயந்த் சவுத்ரி, பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி, அப்னா தளம், ஜேஎல்டி, ஆர்எல்டி கட்சி பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதத்திலும், பீகாரில் அடுத்த ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த மாநிலங்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதேபோல் தேர்தலில் பெரும் தோல்வியை பாஜக சந்தித்ததால், கட்சிக்குள்ளும் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தல் காரணமாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த சிலரை கட்சி பணிக்கு அனுப்பிவிட்டு, தற்போது ஜேபி நட்டாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. உள்துறை, பாதுகாப்பு, நிதி, வெளியுறவு, ரயில்வே, சாலை போக்குவரத்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு, சிவில் விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், விவசாயம் ஆகிய அமைச்சகங்கள் பாஜக வசம் இருக்கும் என்றும், ஊரக வளர்ச்சி, கனரக தொழில், தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற இலாகாக்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி இன்றிரவு 7.15 மணிக்கு பதவியேற்பதையொட்டி, தலைநகர் டெல்லி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1,100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக இன்று காலை 7 மணியளவில் டெல்லி காந்தி நினைவிடமான ராஜ்காட், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடங்களுக்கு சென்ற மோடி, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு கூடியிருந்த மக்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு கிளம்பினார்.

The post மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்பு; 30 பேருக்கு அமைச்சர் பதவி: உத்தேச பட்டியல் வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாக தேர்தல்?.. போட்டியை தவிர்க்க பா.ஜ ஆலோசனை