×

சர்வதேச கராத்தே நடுவராக தேர்வு: பல்லடம் பயிற்சியாளருக்கு பாராட்டு

பல்லடம், ஜூன் 9: பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (45). கராத்தே பயிற்சி ஆசிரியர். ஸ்பெயின் நாட்டில், சர்வதேச கராத்தே பெடரேஷன் சார்பில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளுக்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: நடப்பு ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடந்த தேர்வில் இந்தியா சார்பில் பங்கேற்ற 28 பேரில் தமிழகத்தில் இருந்து நான் உட்பட இருவர் பங்கேற்றோம். தேசிய அளவில் தேர்ச்சி பெற்று நடுவராக இருந்தால் மட்டுமே, சர்வதேச அளவிலான தேர்வில் பங்கேற்க முடியும். கடந்தாண்டு பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் தேர்வு எழுத முயன்று இயலாமல் போனது.

இந்த ஆண்டு முயற்சி செய்ததில், வெற்றியடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், சர்வதேச கராத்தே போட்டிகளில் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சரவணனுக்கு கால்பந்தாட்ட குழு, பூப்பந்தாட்ட குழு, கபடி மற்றும் நடைபயிற்சி நண்பர்கள் குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் நிர்வாகிகள் நடராஜன், திருமூர்த்தி, பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

The post சர்வதேச கராத்தே நடுவராக தேர்வு: பல்லடம் பயிற்சியாளருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : International Karate ,Palladam ,Saravanan ,Vadukapalayam, Palladam ,Spain ,International Karate Federation ,Dinakaran ,
× RELATED பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோவில் பாலாலயம் விழா