×

கோகுல்ராஜ் கொலை வழக்கின் ஆயுள் கைதி யுவராஜ் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க கோர முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்


சென்னை: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜ், சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென உரிமை கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் உள்துறை சார்பில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், முதல் வகுப்பு ஒதுக்கக்கோரி யுவராஜ் அளித்த மனுவை விதிகளுக்குட்பட்டு முறையாக பரிசீலித்ததாகவும், சமூகத்தில் யுவராஜ் செய்த குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு அவருக்கு முதல் வகுப்பு வழங்க கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு முதல் வகுப்பு ஒதுக்கக் கூடாது என சிறை விதிகள் உள்ளதால் தனக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென உரிமையாக யுவராஜ் கோர முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 20க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post கோகுல்ராஜ் கொலை வழக்கின் ஆயுள் கைதி யுவராஜ் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க கோர முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Gokulraj ,Yuvraj ,Tamil Nadu government ,ICourt ,Chennai ,Madras High Court ,Maviran Theeran Chinnamalai Assembly ,
× RELATED முதல் வகுப்பு சிறையை ஒதுக்க யுவராஜ் கோர முடியாது : தமிழக அரசு