×

உபி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்திலும் போராட்டம் வெடித்தது; நீட் தேர்வு முடிவுக்கு கடும் எதிர்ப்பு: தேர்வுகள் வணிகமயமானதாக அகிலேஷ் குற்றச்சாட்டு


மும்பை: நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, பாஜ ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலேயே கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், முதல் முறையாக ஒரே மையத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 67 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் கணித ரீதியாக வாய்ப்பில்லாத மதிப்பெண்களை சில மாணவர்கள் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் இவற்றை மறுத்துள்ள தேசிய தேர்வு முகமை, சில தேர்வு மையங்களில் வினாத்தாள் பெற தாமதமான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும், என்சிஇஆர்டி பாடபுத்தங்களில் செய்யப்பட்ட மாற்றங்களும் தான் அதிக மதிப்பெண் பெற காரணம் என்றும், மறுதேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும் விளக்கம் அளித்தது.

ஆனாலும் நீட் தேர்வு முடிவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் தொடர்ந்து வலுக்கின்றன. குறிப்பாக பாஜ ஆளும் மாநிலங்களிலும் மாணவர்கள் மறுதேர்வு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உபியில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் மறுநீட்தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல, மத்தியபிரதேசம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் வெடித்தது. பாஜ கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் நீட் முறைகேடு குறித்து புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று பேட்டி அளித்த அம்மாநில கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், ‘‘காசு வாங்கிக் கொண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டிருக்கலாம்.

இந்த தேர்வு முடிவால் மகாராஷ்டிராவில் எந்த மாணவரும் இந்த மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சீட் பெற முடியாது. இதன் மூலம் மகாராஷ்டிரா மாநில மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக நீட் தேர்வு முடிவை ரத்து செய்யவேண்டும். இது தொடர்பாக தேசிய மருத்துவ கவுன்சிலிடம் நாங்கள் முறையிடுவோம்’’ என கூறி உள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நீட் தேர்வில் பலரும் 100% மதிப்பெண் பெற்றிருப்பது பெரிய மோசடியின் அடையாளம். பாஜ ஆட்சியில், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், போலி தேர்வு மையம், தேர்வு முடிவில் குளறுபடி என போட்டித்தேர்வுகள் வணிகமயமாகிவிட்டன. பெரும்பாலான தேர்வுகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மோசடிகள் நடப்பது தற்செயலாக இருக்க முடியாது.

இதனால் நாட்டின் இளைஞர்கள் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கி உள்ளனர். பாஜ அரசின் மிகப்பெரிய தோல்விகளில் இதுவும் ஒன்று. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார். இதே கோரிக்கையை ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன.

கருணை மதிப்பெண் ஆய்வு செய்ய குழு
இதற்கிடையே, தேசிய தேர்வு முகமை டைரக்டர் ஜெனரல் சுபோத் குமார் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நீட் தேர்வில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ஆய்வு செய்ய முன்னாள் யுபிஎஸ்சி தலைவர் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த குழு ஒரு வாரத்தில் ஆய்வு செய்து பரிந்துரை வழங்கும். அதன் அடிப்படையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களின் முடிவுகள் திருத்தப்படும். குழு பரிந்துரைக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். இது எந்த விதத்திலும் மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. மாணவர்களை பாதிக்காத வகையில் முடிவு செய்யப்படும்’’ என்றார். இதுதவிர வினாத்தாள் கசிவு உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் சுபோத் குமார் சிங் மறுத்துள்ளார்.

The post உபி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்திலும் போராட்டம் வெடித்தது; நீட் தேர்வு முடிவுக்கு கடும் எதிர்ப்பு: தேர்வுகள் வணிகமயமானதாக அகிலேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : UP ,Maharashtra ,Madhya Pradesh ,NEET ,Akhilesh ,Mumbai ,Uttar Pradesh ,BJP ,
× RELATED அனைத்து கடைகளின் பெயர் பலகைகளும் படிப்படியாக தமிழில் கொண்டு வரப்படும்