×

தேர்தல் ரிசல்ட் தினத்தில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை முறைகேடு விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு

புதுடெல்லி: பங்குச்சந்தையில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொய்யான தகவல்களை கூறி பங்கு சந்தையில் மாபெரும் ஊழலை நடத்தியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக குற்றம் சாட்டி இருந்தார். குறிப்பாக இதுபோன்ற பொய்யான தகவலால் பங்கு சந்தையில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், சுமார் ரூ.30 லட்சம் கோடி ரூபாய் வரையில் இவர்களது வாக்குறுதிகளால் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் நடந்துள்ள முறைகேட்டின் ஊழலை கண்டறிய செபி மற்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய அவசர இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘நாடு முழுவதும் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பங்கு சந்தையின் சரிவு மற்றும் முதலீட்டாளர்களின் இழப்பு குறித்து விரிவான அறிக்கையை ஒன்றிய அரசு மற்றும் செபி அமைப்புக்கு சமர்பிக்க உத்தரவிட வேண்டும். குறிப்பாக அதானி குழுமம் கணக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை தொடர்பாக முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பிரதான வழக்கினை அடிப்படையாகக் கொண்டு இந்த அவசர இடைக்கால மனு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடியாக செபி அமைப்பு மற்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த இடைக்கால மனுவானது வரும் வாரம் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தேர்தல் ரிசல்ட் தினத்தில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை முறைகேடு விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Lok Sabha ,Narendra Modi ,Home Minister ,Amit Shah ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...