×

சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரசில் பரபரப்பு ரயிலில் மதுகுடித்தபடி துப்பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டிய சிஆர்பிஎப் வீரர்: நடுவழியில் மக்கள் போராட்டம்; இறக்கிவிடப்பட்ட துணை ராணுவ படையினர்

ஜோலார்பேட்டை: சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சேரன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை நோக்கி புறப்பட்டது. ரயில் இன்ஜின் பகுதியை ஒட்டி உள்ள முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் 10க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்தனர். அதில் ஒரு வீரர் பயணிகள் மத்தியில் அமர்ந்து மது குடித்துள்ளார். மேலும், கழிவறைக்கு செல்லும் பயணிகளையும், ரயில் நிலையங்களில் ஏறும் பயணிகளையும் வர விடாமல் தாக்கி விரட்டியடித்தாராம். அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டும் என கூறியவர்களையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி விரட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பயணிகள், ‘துப்பாக்கியை காட்டி மிரட்டுற நீயெல்லாம் மிலிட்டரியா? உண்மையான மிலிட்டரியா நீ? போற வர்றவங்களையெல்லாம் அடிக்குறது, குழந்தைகளை அடிக்குறது, பெண்களை அடிக்குறதுன்னு இருக்குற? குழந்தைங்க என்னடா பண்ணாங்க உன்ன. சென்னையில ஏறியதுல இருந்து அராஜகம் பண்ணிட்டு இருக்கானுங்க. அப்பாவி ஜனங்கள சுடுறதுக்குதான் உனக்கு துப்பாக்கி கொடுத்தாங்களா? அப்பாவி ஜனங்க கிட்ட துப்பாக்கியை காட்டி மிரட்டுற. அதிகார துஷ்பிரயோகம் பண்ணுறீயா? தண்ணிய போட்டுட்டு உள்ளே வந்து மிலிட்டரிகாரன்னு அராஜகம் பண்ணிட்டு இருக்க. பொதுப்பெட்டியில் 4 சீட் மிரட்டி வாங்கிட்டு, ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் யாரையும் ஏற விடமாட்றீங்க. பொதுமக்களை அடிக்குறதுக்கு எவன்டா ரைட்ஸ் கொடுத்தது உங்களுக்கு?’ என்று சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும் இறங்கு இறங்கு குடிகாரனே கீழே இறங்குன்னு கோஷமிட தொடங்கினர். இதனால் ரயில் பெட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது 50க்கும் மேற்பட்ட பயணிகள் பிளாட்பாரத்தில் இறங்கி சிஆர்பிஎப் வீரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். சிஆர்பிஎப் வீரர்கள் அனைவரையும் வெளியேற்றினால் தான் நாங்கள் தொடர்ந்து பயணம் செய்வோம் என்றனர். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் மது போதையில் இருக்கும் சிஆர்பிஎப் வீரர் தங்களை ெசருப்பால் அடித்ததாகவும் துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து போலீசார், அனைத்து சிஆர்பிஎப் வீரர்களையும் கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் இறங்க மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சக பயணிகள் அனைவரும் பிளாட்பாரத்தில் நின்று எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் 10க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வேறு வழியின்றி உடமைகளுடன் கீழே இறக்கிவிடப்பட்டனர். அப்போது போதையில் இருந்த சிஆர்பிஎப் வீரர் ரயில்வே பாதுகாப்பு படை ஏஎஸ்ஐயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை செல்போனில் படம் எடுத்தார். இதனால் போலீசார் அவரை எச்சரித்தபோது, போலீசாரிடமும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார்.

மற்ற வீரர்கள் அவரை அழைத்து சென்றனர். அதன் பின் பயணிகள் அனைவரும் பொதுப்பெட்டியில் ஏறி பயணித்தனர். யாரும் புகார் அளிக்காததால், ரகளை செய்த சிஆர்பிஎப் வீரர் மீது ரயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ஏற்கனவே ஒரு மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், இந்த சம்பவம் காரணமாக அங்கு அரை மணி நேரம் நின்றது. கீழே இறக்கிவிடப்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பின்னர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவை புறப்பட்டு சென்றனர்.

* ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை இளம்பெண்ணிடம் சில்மிஷம்; முதியவர் கைது
சென்னையை சேர்ந்த 31 வயது இளம்பெண், மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து கடந்த 6ம் தேதி மகளுடன் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் சென்னைக்கு சென்றுள்ளார். அந்த ரயில் சேலம் வந்தபோது முதியவர் ஒருவர் ஏறியுள்ளார். அவர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த அப்பெண், இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் ரயில் ஜோலார்பேட்டைக்கு சென்றதும், டிக்கெட் பரிசோதகர் ரயில்வே போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த உசேன்பாஷா(71)வை சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

The post சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரசில் பரபரப்பு ரயிலில் மதுகுடித்தபடி துப்பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டிய சிஆர்பிஎப் வீரர்: நடுவழியில் மக்கள் போராட்டம்; இறக்கிவிடப்பட்ட துணை ராணுவ படையினர் appeared first on Dinakaran.

Tags : CRPF ,Chennai-Coimbatore ,Jollarpet ,Coimbatore ,Chennai ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்