×

குழந்தைகள் உள்பட 4 பேர் தீயில் கருகி பலி: கேரளாவில் பரிதாபம்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று அதிகாலை வீட்டில் தீ பிடித்ததில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பறக்குளம் பகுதியை சேர்ந்தவர் பினீஷ் குரியன் (45). இவரது மனைவி அனுமோள் (40). இவர்களது மகள் ஜொவானா (8), மகன் ஜெஸ்வின் (5).
பினீஷ் குரியன் பலசரக்கு மொத்த வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் முதல் மாடியில் உள்ள அறையில் தூங்கினர். இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வீட்டுக்குள் திடீரென தீப்பிடித்தது. குடும்பத்தினர் அனைவரும் அயர்ந்து தூங்கியதால் தீப்பிடித்தது தெரியவில்லை. சிறிதுநேரத்தில் வீடு முழுவதும் பரவிய நிலையில் குழந்தைகள் உள்பட 4 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது. புகைமண்டலமாக இருந்ததாலும், தூக்க கலக்கத்தில் இருந்ததாலும் அவர்கள் வெளியே செல்ல வழியில்லாமல் தீப்பிழம்புகளுக்கிடையே மாட்டிக்கொண்டனர்.

அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் பினீஷ் குரியனின் வீட்டில் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். அதன்பின் வீட்டுக்குள் சென்று அங்குள்ள அறைக்கு சென்று தீயில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் குழந்தைகள் உள்பட 4 பேரும் உடல் கருகி இறந்து விட்டது தெரியவந்தது. அங்கமாலி போலீசார் விரைந்து சென்று 4 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீப்பிடித்த அறையில் ஏசி உள்ளது. எனவே மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post குழந்தைகள் உள்பட 4 பேர் தீயில் கருகி பலி: கேரளாவில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Finish ,Kurian ,Angamali Parakulam ,Ernakulam, Kerala ,
× RELATED கேரளாவில் பள்ளம் தோண்டியபோது...