×

இந்த வார விசேஷங்கள்

ரம்பா திருதியை
9.6.2024 – ஞாயிறு

ரம்பை, ஊர்வசி இருவரும் தேவலோகத்துப் பெண்கள். அழகுக்கு உதாரணமாகத் திகழ்பவர்கள். அதில் ஒரு முறை ரம்பை தன்னுடைய அழகை இழந்து விடுகிறார். அப்பொழுது தேவேந்திரன் ‘‘மறுபடியும் இழந்த அழகையும் ஐஸ்வர்யங்களையும் பெற பார்வதி தேவி இருந்த கௌரி விரதத்தை இருக்க வேண்டும்.தற்சமயம் பார்வதி தேவி சிவபெருமானை எண்ணி பூலோகத்தில் மகிழ மரத்தடியில் தவம் செய்கின்றாள். நீ அங்கு சென்று பார்வதியை வணங்கி இந்த விரதத்தை மேற்கொண்டால், உனக்கு சகலநன்மைகளும் கிடைக்கும்’’ என்று சொல்ல, அவள் அப்படியே புறப்பட்டு வருகின்றாள். அவளுக்கு பார்வதி தேவியின் காட்சி கிடைக்கிறது. இந்த விரதத்தின் பலனாய் இழந்த அழகையும் ஐஸ்வர்யங்களையும் பெற்று மறுபடியும் தேவலோகத்தில் முதன்மைப் பெண்ணாகத் திகழ்கிறாள். பொதுவாகவே சுக்லபட்ச திருதியை திதி என்பது மிக உயர்வானது. இந்த ரம்பா திருதியை விரதம் ஆனியிலும் சமயத்தில் வரும். இன்னும் சில பேர் கார்த்திகை வளர்பிறை திருதியை திதியை ரம்பா திருதியை ஆக அனுசரிப்பார்கள். முதல் நாள் மஞ்சளில் அம்பாளின் உருவம் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜைக்கு மறுநாள் சுந்தரமான முருகனை மடியில் எடுத்து பார்வதி தேவி கௌரியாக காட்சி தருவாள். முக அழகு மட்டுமல்ல, மன அழகும் வசீகரமும் ஏற்படும். இதயம் சுத்தியாகும். நல்ல எண்ணங்கள் பிறக்கும். விசாலமான மனம் கிடைக்கும். அதனால் மனம் விரும்பியது எல்லாமே அடையலாம்.

நம்பியாண்டார் நம்பி குருபூஜை
9.6.2024 – ஞாயிறு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பக்கத்தில் உள்ள திருநாரையூர் என்ற ஊரில் சவுந்தரநாதர் என்ற திருக்கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில், 33-வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு அவதரித்தவர் நம்பியாண்டார் நம்பி. இவருடைய அருஞ் செயலானது தேவாரங்களைத் தொகுத்துக் கொடுத்தது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் காட்டுமன்னார் கோயில் உள்ளது. அங்கு அவதரித்தவர் நாதமுனிகள். அவர் ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துக் கொடுத்தார். சைவ நூல்களை தொகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பியும், வைணவ நூல்களைத் தொகுத்துக் கொடுத்த நாதமுனிகளும் கிட்டத்தட்ட ஒரே ஊரில் அவதரித்தது என்பது அந்த ஊருக்கான சிறப்பு.

சேக்கிழார் குருபூஜை
10.6.2024 – திங்கள்

சேக்கிழாருக்கு சைவ மரபில் “தெய்வச் சேக்கிழார்” என்ற அடைமொழி உண்டு. இந்தப் பெருமை வேறு யாருக்கும் இல்லை. காரணம், அவர் இறைவனுடைய பெருமையைவிட, இறை அடியார்களுடைய பெருமையை எழுதியவர். தொண்டர்தம் கூட்டு கண்டாய் என்று இறைவனைச் சொல்லுவார்கள். அப்படி இருப்பதையே இறைவன் விரும்புகின்றான். கூடும் அன்பினில் கும்பிடல் அன்றி வீடும் வேண்டாம் என்ற அடியார்களுடைய பெருமையைப் பேசுவார்கள். தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதும் வாக்கு. அந்த தொண் டர்களின் பெருமைகளைத் தொகுத்து அவர் பாடியதுதான் திருத் தொண்டர் தொகை என்று சொல்லப்படுகின்ற பெரிய புராணம். புராணங்களிலேயே இந்தப் புராணம் சிறப்பானது. காரணம், இது பெரிய புராணம். பெரிய என்பது அளவினால் மட்டுமல்ல. அளவிடற்கரிய பெருமையினாலும் அரிய செய்திகளை சொல்வதினாலும், பெரிய புராணம் பெருமை படைத்தது. அந்த பெருமையை தமிழில் படைத்த சேக்கிழாரின் குருபூஜை தினம் இன்று.

நமிநந்தியடிகள் குருபூஜை
10.6.2024 – திங்கள்

நமிநந்தியடிகள் நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் சோழநாட்டு ஏமப்பேரூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர். இரவும் பகலும் சிவபெருமானை வணங்குவதைத் தவிர வேறு அறியாதவர். தினம்தோறும் திருவாரூக்கு சென்று ஈசனைத் போற்றி வணங்கி வருவார். ஒரு நாள் திருவாரூர் திருக்கோயிலை வழிபடச் சென்றார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு சிறிது நெய் வேண்டினார். ஆனால், அவர்கள் தராததோடு மட்டுமின்றி தகாத வார்த்தை சொல்லி கேலி செய்தனர். ‘‘உன் இறைவன் சக்திவாய்ந்தவன் தானே. நீரால்கூட விளக்கு எரிக்கலாமே’’ என்று சொல்ல, அது கேட்டுப் பொறாத நமிநந்தியடிகள் பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கினார். அப்பொழுது ‘நமி நந்தியே! உனது கவலை ஒழிக. பக்கத்தில் உள்ள குளத்தில் நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக’ என்றதொரு குரல் ஆகாயத்தில் தோன்றியது.
அவர் சிந்தை தெளிந்து பஞ்சாட்சரம் ஓதி குளத்து நீரை அள்ளிக்கொண்டு விளக்கு ஏற்ற விளக்கு பிரகாசமாக எரிந்தது. கோயில் முழுக்க நீரிலேயே விளக்கு ஏற்றிய அதிசயம் தெரிந்து மக்கள் வியந்தனர்.திருவாரூர்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள் மணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லா மக்களும் இறைவனுஉடன் தரிசித்துச் சென்றனர். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் சென்று மகிழ்ந்தார். ஊர்வலம் முடிந்து நமிநந்தியடிகள் நள்ளிருளில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். அப்பொழுது அவர் மனைவியார் வந்து அவரை எழுப்பி வீட்டுக்குள் வந்து
உறங்கும்படி அழைத்தார்.

ஆனால், அவர் திருவிழாவில் எல்லா மக்களுடனும் கலந்திருந்தமையால் தீட்டுண்டாயிற்று. நீராடிய பின்னரே வீட்டுக்குள் வருதல் வேண்டும் என்று சொன்னார். பிறகு சற்று உறங்கிவிட்டார். அவர் வழிபடும் திருவாரூர் வீதிவிடங்கற் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே! சிவனடி யாரோடு கலந்தால் தீட்டு போகுமே தவிர தீட்டு வராது. திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார்.
உறக்கம் நீங்கி விழித்தெழுந்தவர் தம் தவறை உணர்ந்தார். அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைத்தது எத்தனை தவறென்றுணர்ந்து வீட்டினுள்ளே சென்று சிவபூசையை முடித்தார். விடிந்தபின் திருவாரூருக்குச் சென்றார். அப்பொழுது திருவாரூரில் எல்லோருமே சிவசாரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். ‘அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சினார். திருவாரூரில் வெகுகாலம் சிவத்தொண்டு புரிந்த அடிகள், வைகாசி மாதம் பூச நட்சத்திரம் அன்று சிவபதம் அடைந்தார். அவர் குருபூஜை நாள் இன்று.

கதலி கௌரி விரதம்
10.6.2024 – திங்கள்

இன்றைய தினம் திங்கட்கிழமையும், சதுர்த்தியும் இணைந்து வருவதால், ஒரு சிறப்புண்டு. திங்களை சோமன் என்பார்கள். சதுர்த்தியும் சேர்ந்து வருவதால், இன்றைய தினத்தை சோம சதுர்த்தி என்று விசேஷமாகக் கொண்டாடுவார்கள். விநாயகருக்கு விரதம் இருந்து பூஜை செய்து விக்னங்களைக் களைந்து செயல் வெற்றி பெற இந்த விரதம் அவசியம் இருக்க வேண்டும். சோமன், தவமிருந்து விநாயகரை வணங்கி பேறு பெற்றதால், இந்த விரதம் அவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது. இன்று காலை முதல் விரதமிருந்து, அறுகம்புல் மாலை, இயன்றால் சுண்டல், மோதகம், பொரி, அவல், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று சமர்ப்பணம் செய்துவிட்டு, வணங்கி வலம் வர வேண்டும். அவரை மனதார வணங்க வேண்டும். கோயில் அருகில் இல்லாதவர்கள் வீட்டிலும் இதே நிவேதனங்களை வைத்து பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இன்று கதலி கௌரி விரதம். கதலி என்றால் வாழை மரங்களைக் குறிக்கும். அந்தக் காலத்தில் வாழை மரத்தடியில் இந்த விரதத்தை இருப்பார்கள். இப்பொழுது வீட்டிலேயே வாழைப் பழங் களையும், சிறு வாழை கன்றுகளையும் வைத்து பார்வதி படத்தை அலங்கரித்து விளக்கேற்றி வைத்து இந்த விரதத்தை இருப்பதன் மூலமாக தீர்க்க சுமங்கலித்துவமும், கணவனோடு இணக்கமான வாழ்வும் திருமணமாக பெண்களுக்கு நல்ல கணவனும் அமையும்.

சோமாசிமாற நாயனார் குருபூஜை
11.6.2024 – செவ்வாய்

திருவாரூர் பூந்தோட்டம் அருகே திருவம்பர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் மாறநாயனார். சிவபக்தி நிறைந்தவர். தினம் வேதத்தில் சொல்லியபடி வேள்விகள் பல செய்வார். சிறந்த சோம வேள்வியால் எம்பெருமானை வழிபட்டதால், இவர் சோமாசிமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார். இவருடைய காலத்தில் இருந்தவர்தான் தேவார மூவரில் ஒருவரான சுந்தரர். அவர் இறைவனோடு தோழமை கொண்டதை அறிவார் சோமாசிமாற நாயனார். அந்த சுந்தரரோடு தோழமை கொண்டு, அவருடைய பரிந்துரையின் பேரில், சிவனை நேரில் அழைத்து, யாகத்தின் அவிர்பாகம் வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. சுந்தரரின் நட்பைப் பெறுவது எப்படி என்று எண்ணினார். அப்போதுதான் சுந்தரருக்குத் தூதுவளைக் கீரை பிடிக்கும் என்பதை அறிந்தார். தூதுவளைக் கீரையைத் தினமும் பறித்துக் கொடுத்து அதன் மூலம் நட்பை வளர்க்கலாம் என்று தினமும் தூதுவளைக்கீரையைப் பறித்துவந்து சுத்தம் செய்து சுந்தரருக்கு கொடுத்துச் சென்றார். அதனால் சுந்தரருக்கு இவர் மீதான அன்பு அதிகரித்தது. ஒருவழியாக சுந்தரரை நட்பாக்கிக்கொண்டார்.

மெல்ல தம் வேண்டுகோளை சுந்தரரிடம் தெரிவிக்க, முதலில் தயங்கிய சுந்தரர் பிறகு ஏற்றுக் கொண்டார். சுந்தரர் வேண்டுகோளை இறைவனிடம் தெரிவிக்க, ‘‘சரி, நான் அவிர்பாகம் வாங்கிக்கொள்ளச் செல்வேன். ஆனால் எப்பொழுது, எந்த உருவில் செல்வேன் என்பதைச் சொல்ல முடியாது. அவர் என்னை எந்த உருவில் வந்தாலும் தெரிந்து கொண்டு அவிர்பாகம் தந்தால் நான் வாங்கிக் கொள்கிறேன்” என்று உத்தரவாதம் தந்தார். அவருடைய உத்தரவாதத்தை மாறநாயனாருக்கும் சுந்தரர் தெரிவிக்க, சிவனே நேரில் வந்து வேள்விப் பயனைப் பெற்றுக் கொள்வது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்.சோமாசியாரின் வேள்வியில் இறைவனும் நேரில் வரப் போவதாக மக்களுக்கு சொல்லவும் வெள்ளமென திரண்டார்கள்.

வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்தும்போது நான்கு நாய்களை கையில் பிடித்தபடி, வேடன் ஒருவன் யாகம் நடத்தும் இடத்துக்குள் நுழைந்தான். இவனைக் கண்டு வேதியர்கள் ஓடினார்கள். ஆனால், சோமாசிமாறனார் முதல் தெய்வமான விநாயகரைத் துதித்து யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். வந்திருப்பது இறைவனே என்று உணர்த்தினார் விநாயகர். சோமாசிமாறநாயனார் “வேடன்” தான் “வேதன்” என உணர்ந்து வரவேற்று அவருக்கு வேண்டிய அவிர் பாகத்தை அளித்தார். அடுத்த நொடியில் நாய்கள் நான்கும் சதுர் வேதங்களாக மாற, எம்பெருமான் உமையாளோடு இடப வாகனத்தில் காட்சி தந்து அருளினார்.சிவத்தலம் தோறும் தரிசனம் செய்து எம்பெருமானின் திருவருளைப் பெற்று இறைவன் பாதத்தில் பணிந்தார். வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை. அந்த தினம் இன்று.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Ramba Trithiya ,Rambai ,Urvashi ,Rumbai ,Devendran ,Parvati ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் 2வது முறையாக...