×

தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்

விநாயகருக்கு விளையாட்டு என்றால் கொள்ளைப் பிரியம். விதியோடு விளையாடி, விக்னங்களை விரட்டி, தம் பக்தர்களைக் காப்பாற்றுவது அவர் வழக்கம். இந்த தீவனூர் கணநாதனும் சிறுவர்களுடன் திருவிளையாடல் நிகழ்த்தி, கோயில் கொண்டிருக்கிறார். திண்டிவனத்திலிருந்து 13கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் இருக்கிறது, தீவனூர். திருவண்ணாமலை செல்லும் இந்த பிரதான சாலையை தொட்டுக் கொண்டிருக்கும் தீவனூருக்கு, அறிமுக அடையாளமே இங்கிருக்கும் பிள்ளையார் கோயில்தான். தண்ணீர் இல்லாதபோதும், அழகு காட்டியபடி இருக்கிறது குளம். கரையில் பசுமை பரப்பி, தலையெல்லாம் ரத்தினம் பதித்தது போல சிவப்பு நிறப் பழங்களையும் தரை தொட தவிக்கும் விழுதுகளையும் தாங்கி நிற்கும் ஆலமரம், அந்த பிரதேசத்தின் ராஜகம்பீரம்.

நாளைக்குப் பூத்துவிடுவேன் என சிணுங்கி நிற்கும் மரமல்லி மரங்கள். சுற்றி வயல்வெளி. இதற்கு நடுவே கோயில் கொண்டிருக்கிறார், விநாயகர். அட, அம்சமான இடத்தில் அமர்க்களமாக அமர்ந்து கொண்டாரே என்ற வியப்பின் உந்துதலோடு ஆலயத்தின் அருகே செல்கிறோம். கோயிலின் வெளியே நவக்கிரகங்களின் அமைப்பில் ஒரு பலிபீடம். இதில் ஒன்றின்மீது இரண்டு விரல்களை வைத்து மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா என வேண்டிக் கேட்க, நடக்குமென்றால் விரல்கள் இரண்டும் நகர்ந்து ஒன்று சேருமாம்.

பல காரியங்களுக்கு இங்கு வந்து இப்படியொரு உத்தரவு பெற்று செல்கிறார்கள், பக்தர்கள். இவருக்கு அருகே யானை போன்ற புடைப்புக்கற்சிற்பம். கொடிமரம் தாண்டி உள்ளே செல்ல அங்கே மூன்று வாகனங்கள். இது என்ன அதிசயம் எனக்கேட்டால், விநாயகர் இங்கு லிங்கரூபமாய் இருக்கிறார். இவருக்கே உரிய மூஞ்சூறு, யானை தலையர் என்பதால் யானையும் வாகனமாய் இங்கே இருக்கிறது என்கிறார்கள். பிராகார வலம் வர, விதவிதமான விநாயகர்களின் தரிசனம் காண்கிறோம். இவை தவிர நாகர், தனிச்சந்நதியில் ஜோதிர்லிங்கேஸ்வரர் அருள்கிறார். முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நதி. பிராகாரத்தை ஒட்டி வெளியே ஒரு கல்மேடை. சுமார் 50 பேருக்கு விருந்து பரிமாறும் அளவுக்கு பரப்புள்ள அந்த இடத்தில், நிழல் பரப்பி நிற்கிறது கல்லாலமரம்.

அடிவேரிலிருந்து மூன்று பிரிவாக வளர்ந்திருக்கிறது இந்த மரம். இம்மூன்றும், மும்மூர்த்திகள் என்றும் தீவனூர் விநாயகரை தரிசிக்க வந்தவர்கள் தம் நினைவு மறந்தவராய் இப்படி கல்லால மரமாய் சமைந்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த மரத்துக்கு நூல் சுற்றி வழிபட, திருமண வரமும் குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கிறதாம். மண்டபம் தாண்டி ஆலயத்தினுள் நுழைகிறோம். தீப ஒளியில் சிரிக்கும் சிவகுமாரனை சிந்தையில் நிறுத்தி வணங்க, மனதில் மெல்ல அமைதி படர்கிறது. இவர் இங்கு வந்து அமர்ந்த கதை படமாய் விரிகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் வயல்வெளியாக இருந்தது. ஆடுமேய்க்கும் சிறுவர்கள் மதிய வேளையில் பசியாற அருகில் இருந்த வயல்களில் முற்றிய நெல்மணிகளை சேகரித்து, உமிநீக்கி, சோறு பொங்கிசாப்பிடுவது வழக்கம்.

ஒருநாள் அப்படி சேகரித்த நெல்மணிகளை குத்தி அரிசியாக்க, கல் தேடிய போது, ஒரு கல் யானைத் தலை போன்று இருக்க, இது உதவாது என ஓரமாய் வைத்துவிட்டு வேறு கல் தேடிப் போனார்கள். வேறு கல்லைத் தேடி எடுத்து வந்தபோது, இந்த யானைக்கல் அருகே இருந்த நெல்லெல்லாம் அரிசியாகி இருந்தது! சிறுவர்களுக்கு வியப்பு. நெல் எப்படி அரிசியானது!இந்த அதிசயக் கல் செய்த வேலைதான் இது என உணர்ந்து, அந்தக் கல்லை ஒரு இடத்தில் மறைத்து வைத்தார்கள். ஆனால், மறுநாள் அவர்கள் மறைத்து வைத்த இடத்தில், கல் இல்லை. தேடியபோது அருகில் இருந்த குளத்திலிருந்து நீர்க்குமிழ்கள் எழுந்தன. பளிச்சென்று குளத்தில் பாய்ந்து, மூழ்கி கல்லை மீட்டெடுத்து, ஒரு மரத்தோடு சேர்த்துக் கட்டிப் போடுகிறார்கள்.

இதே காலகட்டத்தில் வயலில் நெற்கதிர்கள் திருடுபோக, ஊர்ப் பெரியவர்களின் விசாரணையில் ஆடுமேய்க்கும் சிறுவர்கள் பிடிபட்டார்கள். இந்த விசாரணையில், தங்களுக்கு கிடைத்த இரண்டு கல் பற்றி சொல்ல, ‘நெல்குத்தி அதிசயக் கல்’ விவரமும் தெரியவந்தது. அந்த இரண்டு கற்களையும் ஊர்ப் பெரியவர் தன்வீட்டுக்குக் கொண்டு சென்றார். அன்று இரவு அவர் கனவில் தோன்றிய கணநாதன், தான் விநாயகர் என்றும், எனக்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபட, குலம்காப்பேன் என்றும் கூறி, தன்னோடு கிடைத்த இன்னொரு கல்லையும் கருவறையில் வைக்க வேண்டும் என்றும், தான் வளர வளர அது தேயும் என்றும்கூறி அருளினார். மறுநாள் கனவை ஊராரோடு பகிர்ந்து கொண்ட பெரியவர், விநாயகருக்கு ஆலயம் அமைத்து குடமுழுக்கும் செய்தார்.

அன்று முதல் இவர் நெற்குத்தி விநாயகர் என அழைக்கப்பட்டார். இவரை, பொய்யாமொழிப் பிள்ளையார் என்றும் போற்றுகிறார்கள். அது ஏன்? திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வியாபாரத்திற்கு மிளகு ஏற்றிச் சென்ற வியாபாரி மரத்தடியில் வண்டியை நிறுத்திவிட்டு கோயிலில் படுத்து ஓய்வெடுத்தான். அன்று பிள்ளையாருக்கு பொங்கல் செய்து படைக்க விரும்பிய கோயில் பணியாளர்கள், வியாபாரியிடம் கொஞ்சம் மிளகு கேட்டார்கள். ஆனால் வியாபாரியோ ‘‘இது மிளகு இல்லை, உளுந்து’’ என்று சொன்னார். காலையில் எழுந்து மூட்டையைத் திறந்து பார்த்த வியாபாரி, அதிர்ந்து போனார். அத்தனை மூட்டையும் உளுந்தாகிவிட்டது! பதறியவர் விநாயகரிடம் விழுந்து மன்னிப்பு கேட்க, உளுந்து மூட்டைகள் மீண்டும் மிளகாகின.

அன்று முதல் இவருக்கு `பொய்யாமொழி விநாயகர்’ என பெயர் உண்டானது. இன்றும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை என்றாலும், திருடு தொடர்பான வழக்கு என்றாலும், இவர் சந்நதிக்கு அவ்வாறு வரும் பஞ்சாயத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது. லிங்கரூபமாய் அருளும் விநாயகருக்கு பாலபிஷேகம் செய்யும்போது, நாம் துதிக்கையில், அவர் நமக்கு தும்பிக்கையோடு தரிசனம் தருவது அற்புதக் காட்சி. கற்பூர ஆரத்தியால் மின்னும் இவரது திருமேனி தரிசனம், நம் வாழ்வைப் பொலிவாக்கும். இவரை வணங்க மும்மூர்த்திகளின் அருளும் கிடைக்கும். புது வாகனம் வாங்கியவர்கள், இவரது கோயிலுக்கு வந்து, இவரது பாதத்தில் சாவியை வைத்து ஆசி பெற்றுச் செல்கிறார்கள். அவரது அருளோடு தொடங்கும் எந்த காரியமும், தொழிலும் வெற்றி பெறுவது திண்ணம். உலக வாழ்வுக்கான பொருள் தேடலோடு, அருள் தேடல் உள்ளவர்கள் இங்கு அதிகாலை வந்து அந்திவரை இவரது சிந்தையோடு இருக்க, மனம் அழிந்து உள்ளே ஞானப்பூ பூக்கும்.

 

The post தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர் appeared first on Dinakaran.

Tags : Thivinyal Theertharulwar ,Thivanur Vinayagar ,Divanur Gananathan ,Dindivan ,Senchi ,Deevanur ,
× RELATED புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்