×

சமூக நீதியை நிலைநாட்டவே இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு: சந்திரபாபுவின் மகன் நர லோகேஷ் கூறிய கருத்தால் பரபரப்பு

அமராவதி: மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம் என பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில் அது சமூக நீதி என சந்திரபாபுவின் மகன் நர லோகேஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கு தேசம் ஆதரவுடன் தான் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நர லோகேஷ், ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது திருப்திப்படுத்தும் அரசியல் அல்ல என்றும், அதுதான் சமூக நிதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருவதாகவும், தெலுங்கு தேசம் அதை ஆதரிப்பதாகவும் நர லோகேஷ் தெரிவித்துள்ளார். ஆந்திராவின் சிறுபான்மையினரின் தனிநபர் வருமானம் தான் மிக குறைவாக இருப்பதாகவும், வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது தான் ஒரு அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே அது திருப்திப்படுத்தும் அரசியல் அல்ல என்றும், சமூக நீதியை நிலைநாட்டவே அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் லோகேஷ் தெரிவித்தார்.

நமது நாட்டை வளர்ந்த நாடக மாற்ற விரும்பினால் யாரையும் புறந்தள்ளி விட முடியாது என்று கூறிய அவர் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வது தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாடு என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களில் சொத்துக்களை அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு தாரைவார்த்து விடுவார்கள் என இஸ்லாமியர்களையும் மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த நிலையில் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்தின் நிலைப்பாடு பூகம்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

 

The post சமூக நீதியை நிலைநாட்டவே இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு: சந்திரபாபுவின் மகன் நர லோகேஷ் கூறிய கருத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Nara Lokesh ,Amaravati ,BJP ,Desam ,
× RELATED நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு...