×

கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்த வெளிநாட்டு பெண்கள் பெங்களூரு சிறையில் இருந்து போதைப்பொருள் விற்பனை

* ஸ்கெட்ச் போட்டு கும்பலை தூக்கிய போலீஸ், வங்கியில் உள்ள ரூ.49 லட்சத்தை முடக்க நடவடிக்கை

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து பெங்களூரு சிறையில் இருந்து போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு பெண்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த கும்பலை ஸ்கெட்ச் போட்டு போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் உள்ள ரூ.49 லட்சத்தை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மெத்தபிட்டமின் போதை மருந்து சப்ளை செய்யப்பட்டு வந்தது.

கல்லூரிகள் அதிகம் நிறைந்த கோவையில் மாணவர்களை குறிவைத்து செயல்பட்ட இந்த கும்பலை பிடிக்க, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி சமீபத்தில் போதை மருந்து விற்பனை செய்த கவுதம், அபிமன்யு, பாசில், முகமது அர்சித், இஜாஸ், பெவின் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 102 கிராம் மெத்தபிட்டமின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன்குமார், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தார்வார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பிரவீன்குமார், வினோத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, போதை மருந்து கடத்தலுக்கு முக்கியமாக செயல்பட்டது கென்யா நாட்டை சேர்ந்த இவி பொனுகே (26) என்ற பெண் என்று தெரியவந்தது.

இவர் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கூட்டாளி உகாண்டா நாட்டை சேர்ந்த காவோன்கே என்பவரை சந்திக்க வந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்த கோவை தனிப்படை போலீசார் பெங்களூரில் கென்யா பெண்ணை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் கிடைத்தது. கைதான கென்யா பெண் இவி பொனுகே, தார்வார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்ட கல்வி படிப்பதற்காக தங்கி உள்ளார்.

படிப்பை முடிக்கவில்லை. அவரது விசாவும் காலாவதியாகி விட்டது. இதைத்தொடர்ந்து தார்வார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு போதை மருந்து சப்ளை செய்துள்ளார். உகாண்டா நாட்டை சேர்ந்த அவரது கூட்டாளி காவோன்கே சிறையில் இருந்து கொண்டே போன் மூலம், வரும் தகவலின் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு கென்யா பெண் போதை மருந்தை அனுப்பி வைத்துள்ளார்.

நேரடியாக கொடுக்காமல் ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு, போதை மருந்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை லொகேசன் மூலம் அனுப்பி எடுத்துக்கொள்ள செய்வார். வாங்க வருபவர்கள் செல்போன் லொகேசன் அடிப்படையில் சென்று அங்கு ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும் போதை மருந்தை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருப்பதாக வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
மேலும், அவரது வங்கி கணக்கில் ரூ.49 லட்சம் இருந்தது. அதனை முடக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கைதான கென்யா பெண் உள்பட 3 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

* பார்சலில் போதைப்பொருள் வந்ததாக கூறி டாக்டரிடம் ரூ.40 லட்சம் மோசடி: போலி சிபிஐ அதிகாரிகளுக்கு வலை கோவை சாய்பாபா காலனியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் சந்திரசேகர் (70). டாக்டர். எலும்பு முறிவு கிளினிக் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதில், பேசிய மர்ம நபர் டெல்லியில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது. அதில், போதை பொருள் அனுப்பி உள்ளனர்.

அதுகுறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட மற்றொரு நபர் தன்னை சிபிஐ அதிகாரி என்று தெரிவித்ததுடன், உடனே டெல்லிக்கு வந்து போதைப்பொருள் சம்பந்தமாக விளக்கம் தர வேண்டும், இல்லையென்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டி உள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனக்கு யாரும் போதை பொருள் அனுப்ப வாய்ப்பில்லை, என தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து பேசிய மர்ம நபர்கள், உங்களது வங்கிக் கணக்கில் இருப்பு தொகை எவ்வளவு உள்ளது? என கேட்டுள்ளனர். உடனே சந்திரசேகர் ரூ.40 லட்சம் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மர்ம நபர்கள் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 25ஐ அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் மீது குற்றமில்லை என நிரூபித்த பின்பு அந்த பணத்தை நாங்களே உங்களது வங்கி கணக்கில் திருப்பி செலுத்தி விடுவோம் என நம்பும்படி தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய சந்திரசேகர் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி உள்ளார். பல நாட்கள் கழித்தும் அவரது வங்கி கணக்கிற்கு பணம் திரும்ப வரவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த சந்திரசேகர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்த வெளிநாட்டு பெண்கள் பெங்களூரு சிறையில் இருந்து போதைப்பொருள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Bengaluru ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்