×

வரும் 11ம் தேதி கூடுகிறது தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்: முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு


சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கட்பத் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளனர்.

அதேசமயம் பாஜ தமிழகத்தில் பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் என்பது குறைந்திருப்பது மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளை கவலை அடையச் செய்துள்ளது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 11ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் இந்த தேர்தலில் வெற்றி வெற்ற எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட 711 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பாஜ பல தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றது குறித்தும், வரும் காலங்களில் அதன் வளர்ச்சியை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை தமிழகத்தில் பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றியும் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய நிர்வாகிகளுக்கு முறையான அழைப்பிதழை காங்கிரஸ் தலைமை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

The post வரும் 11ம் தேதி கூடுகிறது தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்: முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress General Committee ,Chennai ,DMK ,Congress ,Sasikanth Senthil ,Thiruvallur ,Tamil Nadu ,Daragai Khadpath ,Vilavanko ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவர் அணி...