- உயர் நீதிமன்றம்
- சென்னை
- உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Arutra
- ஹிஜாவு, எல்.
- என். எஸ்.
- தின மலர்
சென்னை: மோசடி நிதி நிறுவனங்கள் மீது பதிவான வழக்குகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தருமாறு தமிழக அரசுக்கு உயர் நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ். உள்பட பல நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக கூறி, லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்களின் நிர்வாகிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதால், இந்த வழக்குகளின் விசாரணையை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை காவல் துறையினர் இதுவரை கைது செய்யவில்லை.
மோசடி செய்து திரட்டப்பட்ட இத்தொகை வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளை அமலாக்கப்பிரிவு, சிபிஐ போன்ற அமைப்புகளே விசாரிக்க வேண்டும். இந்த மோசடி நிறுவனங்கள் மீதான வழக்குகளின் விசாரணை நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், நிதி மோசடி தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஹிஜாவு, ஆருத்ரா மோசடி வழக்குகளில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். இதையடுத்து, இந்த நிதி நிறுவன மோசடி வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post மோசடி நிதி நிறுவனங்கள் மீது பதிவான வழக்குகளில் எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தர அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.