×

அமெரிக்க கணவர் பெயரில் போலி சான்று பெற்று ₹85 லட்சத்துக்கு நிலம் விற்ற காதல் மனைவி வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கைது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு

வேலூர், ஜூன் 8: சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வெளிநாட்டிற்கு சென்ற கணவர் பெயரில் போலியாக வாழ்நாள் சான்றிதழ் பெற்று 8 ஏக்கர் தென்னந்தோப்பை ₹85 லட்சத்துக்கு விற்பனை செய்த காதல் மனைவியை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் ரகுவீரபாண்டியன்(53). இவர் அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்தபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்த சென்னை சோழிங்கநல்லுார் பகுதியை சேர்ந்த கெஜலட்சுமி(49) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் ஒன்றாக இணைந்து தங்களது பெயரில் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த சின்னதாமன்சேரி பகுதியில் 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பு நிலத்தை வாங்கியுள்ளனர். பின்னர் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். தொடர்ந்து ரகுவீரபாண்டின் அமெரிக்காவில் வேலை செய்து வந்தார். கெஜலட்சுமி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் விவகாரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ரகுவீரபாண்டியன் பெயரில், கெஜலட்சுமி போலியாக வாழ்நாள் சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும் ரகுவீரபாண்டியனுக்கு தெரியாமல் பேர்ணாம்பட்டு சின்ன தாமன்சேரியில் உள்ள 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பை ₹85 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு திரும்பிய ரகுவீரபாண்டியன் இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டிஎஸ்பி சாரதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் வேலூர் சத்துவாச்சாரியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த கெஜலட்சுமியை இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

The post அமெரிக்க கணவர் பெயரில் போலி சான்று பெற்று ₹85 லட்சத்துக்கு நிலம் விற்ற காதல் மனைவி வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கைது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vellore District ,Branch ,Chennai Family Welfare Court ,Vellore ,Vellore District Crime Branch Police ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!