×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வாரி சுருட்டி மீண்டும் வரலாற்று சாதனை படைத்தது. இதில் திமுக மட்டும் 21 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. மேலும் நாமக்கல் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனும் வெற்றி பெற்றார்.

இதனால், மக்களவையில் திமுகவின் பலம் 22 ஆக உள்ளது. திமுகவின் இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த வெற்றியின் மூலம் அகில இந்திய அளவில் திமுக 5வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதேபோல எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜ கூட்டணிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இரு கட்சிகளுமே பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தன.

இந்நிலையில் புதிதாக வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 8ம் தேதி (இன்று) மாலை 6.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும். எவ்வாறு மக்களவையில் செயல்பட வேண்டும் என கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரை வழங்க உள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : DMK MPs ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Anna Vithalaya ,DMK ,M.K.Stalin ,Anna Vidyalaya ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து