×

நீட் தேர்வு முறைகேடு குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். இந்தாண்டு நீட் நுழைவு தேர்வில், ஒரே மையத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 67 மாணவர்கள் முதல் தரவரிசையில் வெற்றி பெற்றுள்ளனர் என்ற புகார் எழுந்துள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுவதை தேசிய தேர்வு முகமை மறுத்ததோடு, சமூக ஊடக பதிவுகள் எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை என்றும்,தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடபுத்தகங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்கியது போன்றவை இதற்கு காரணம் என்று கூறியது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நீட் உள்ளிட்ட பல தேர்வுகளில் கேள்விதாள் கசிவு, மோசடி மற்றும் ஊழல் நடைபெறுவது வழக்கமாகி விட்டன. இந்த முறைகேடுகளுக்கு மோடி அரசே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். தேர்வில் முறைகேடுகள், கேள்வி தாள் கசிவு போன்றவை இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடி வருகிறது. எனவே உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இது குறித்த விசாரணை நடத்த வேண்டும். இதன் மூலம் நீட் உள்ளிட்ட தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுவது முற்றிலும் ஏற்றுகொள்ள முடியாதது, மன்னிக்கமுடியாதது. இது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் நேரடி சூதாட்டம் ஆகும். ஜூன் 14ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட இருந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய தினத்தில் இந்த முடிவுகளை வெளியிட்டதன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பதிவிடுகையில், நீட் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 6 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றிருப்பது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் எழுப்பும் கேள்விக்கு ஒன்றிய அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post நீட் தேர்வு முறைகேடு குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mallikarjuna Kharge ,New Delhi ,Congress ,president ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...