×

பெங்களூரு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்: ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்தாண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அப்போது ஆட்சியில் இருந்த பாஜ அரசு, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் அரசு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெற்றதாக குற்றம்சாட்டினார். ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டை ஆமோதிக்கும் வகையில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரும் அப்போதைய முதல்வர் பசவராஜ்பொம்மை உள்ளிட்ட அமைச்சர்கள் மீது 40 சதவீதம் கமிஷன் வாங்கியதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளரும் மேலவை உறுப்பினருமான கேசவபிரசாத், பெங்களூரு 42வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி, முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில், கடந்த 1ம் தேதி முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகினர். மக்களவை தேர்தல் இருப்பதால், ராகுல்காந்தி ஆஜராக காலஅவகாசம் கேட்டு அவரது தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்தார்.

அதையேற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜூன் 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி ராகுல்காந்தி நேற்று தனது வக்கீலுடன் நேரில் வந்து வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோரும் நீதிபதி முன் ஆஜராகினர். அப்போது ராகுல் காந்தியை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு ராகுல்காந்தி நேரில் ஆஜராக விலக்கும் அளிக்கப்பட்டது.

The post பெங்களூரு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்: ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Bengaluru ,Congress ,Karnataka Assembly ,BJP government ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி