நன்றி குங்குமம் டாக்டர்
ராக்கூன் கண்கள் தெரியுமா?
கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி
கடந்த மாதத்தில் ஒரு நாள் இரண்டு கண்களும் வீங்கிய நிலையில் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். அவர் சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தோன்றினார். அவரது இரண்டு கண்களிலும் வெள்ளை விழிகளில் இரத்தச் சிவப்பாக இருந்தது. கூடவே கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் வீக்கத்துடனும், கறுப்பு நிறமாகவும் (blackening) இருந்தது. உடன் யாரும் இல்லாத நிலையில் அவர் தனியாக வந்தார். “கீழே விழுந்துட்டேன், வண்டிக்காரன் இடிச்சிட்டான்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.
பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது தலையில் ஓர் இடத்தில் வீக்கக் காயம் இருந்தது. கண்பார்வையும் கண்களின் அசைவும் சீராகவே இருந்தது. அவருக்குத் தேவையான சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிவிட்டு அவருடைய உறவினர்களை அழைத்து வருமாறு கூறினோம். கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் கறுப்பான வீக்கம் காணப்பட்டால் அதற்குத் தசைகளினூடே ஏற்பட்டிருக்கும் ரத்தக் கசிவே காரணம். கண்களைச் சுற்றியுள்ள தசைகள் மெலிதாக இருப்பதால் காயம் ஏற்படும் இப்படியான ரத்தக்கசிசு ஏற்பட்டு விடக்கூடும்.
வட அமெரிக்காவில் காணப்படும், தேவாங்கு போல் தோற்றம் அளிக்கும் பாலூட்டி இன விலங்கான ராக்கூனிற்கு இயல்பாகவே கண்களைச் சுற்றி கறுப்பு நிறத்தில் வட்டம் இருக்கும். அதனால் இப்படி இரண்டு கண்களிலும் கறுப்பு நிறத்தில் வீக்கம் காணப்படுவதை Raccoon eyes என்கிறோம். அடிபட்டவுடனேயே இது போன்ற அறிகுறிகள் எதுவும் தெரியாது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து கருஞ்சிவப்பு நிறமாகவும், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் கருப்பு நிறமாகவும் மாறிவிடக்கூடும். இத்தகைய நோயாளிகளுக்கு கண்ணைச் சுற்றியுள்ள எலும்புகளில் ஒன்றில் மிகச் சிறிய அளவில் எலும்பு முறிவும் இருக்கக்கூடும். காயம் தவிர, இரத்த நாளங்களில் ஏற்படும் சில பிரச்சனைகள், இரத்தநாளங்களை வலுவற்றதாக ஆக்கும் amyloidosis, arteritis உள்ளிட்ட நோய்கள், சில வகை மைக்ரேன் தலைவலிகள் இவற்றிலும் கண்களைச் சுற்றி கருப்பு நிறத்தில் வீக்கம் வரக்கூடும்.
தலைக்காயங்களைப் பொருத்தவரை ‘ராக்கூன் கண்கள்’ மிக முக்கியமான ஒரு அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றது. கபால எலும்பின் முன்புறத்தில் (anterior cranial fossa) அடிப்பாகத்தை பாதிக்கும் எலும்பு முறிவுகள் (base of skull fractures) கண்களைச் சுற்றி கருப்பு நிறத்தைத் தோற்றுவிப்பதால், கண்கள் கறுப்பு நிறமாகும் நோயாளிகளைப் பார்த்தவுடன் விரைந்து அதற்கான பரிசோதனைகளையும் அறுவைசிகிச்சையும் செய்வது சாத்தியமாகிறது.
நமது கண் பந்து ஏழு எலும்புகளால் ஆன பெட்டி போன்ற (Orbit) அமைப்பிற்குள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த எலும்புகள் எல்லாமே தகடு போன்றவை. முகத்திலுள்ள Maxilla எலும்பு, கபாலப் பகுதியிலுள்ள Frontal, ethmoidal, zygomatic எலும்புகள் இவற்றின் நீட்சியான தட்டுக்கள் (plates) இணைந்து தான் Orbit பகுதியை உருவாக்குகின்றன. சாலை விபத்துக்கள், அடிதடி மற்றும் விளையாட்டுக்களின்போது ஏற்படும் காயங்கள் இவற்றால் கண்களைச் சுற்றியுள்ள எலும்புகளில் எலும்பு முறிவு ஏற்படக்கூடும். தலையின் வேறு பகுதிகளில் ஏற்படும் காயங்கள் கூட மறைமுகத் தாக்குதல் (indirect injury) காரணமாக கண் பகுதியில் எலும்பு முறிவை ஏற்படுத்தலாம்.
கண்களில் வீக்கத்துடன் வரும் நோயாளிகளுக்கு பெரும்பாலான சமயங்களில் முதன்மைக் காயத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மட்டுமே போதுமானது. கண் பகுதிக்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. கண்ணில் ஏற்பட்டிருக்கும் இரத்தக் கசிவு இயல்பாகவே பெரும்பாலானோருக்கு சரியாகிவிடக்கூடும். சொட்டு மருந்துகள், வைட்டமின் C மாத்திரைகள் உட்பட்டவற்றைப் பரிந்துரைப்போம். சில நோயாளிகளுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு பெரியவர்களை விட கண்ணைச் சுற்றியுள்ள எலும்புகள் சரியாக வளர்ச்சி அடையாமலும் மெலிதாகவும் இருக்கும் என்பதால் தீவிரமான காயங்களின் போது எலும்பில் விரிசல் ஏற்படக்கூடும். அந்த விரிசல்களுக்கு நடுவே தசைகள், கொழுப்பு, ரத்த நாளங்கள் இவை மாட்டிக்கொள்வது உண்டு. இவற்றை Trap door fracture/ White eye fracture என்று சொல்வோம்.
இப்படி மாட்டிக்கொள்ளும் ஒரு தசைக்கு (entrapment) ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் பொழுது, அதிக வலியும், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் தோன்றலாம். கண்களை உருட்டுவதில் சிரமம் ஏற்படுவதால் பார்வை இரட்டையாகத் தெரிவது போலவும் தோன்றும். இப்படியான சமயங்களில் பார்வையும் பாதிக்கப்படும். அதனால் அறுவைசிகிச்சை தேவைப்படலாம். ஆனால் சாதாரணப் பிரச்னை தான், இயல்பாகவே சரியாகிவிடும் என்பதைத் தீவிர பரிசோதனையின் பின்பே ஒரு கண் மருத்துவர் உங்களுக்கு உறுதிப்படுத்துவார்.
நான் முதலில் சொன்ன நபரின் உறவினரிடம் தகவல் தெரிவித்து சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு மெலிதான எலும்பு முறிவு தான் இருந்தது. போதுமான அளவு ஓய்வு கொடுத்தாலே போதும், அறுவைசிகிச்சை தேவையில்லை என்ற அளவில் இருந்ததால் அதற்குத் தகுந்த அறிவுரைகளைக் கூறி அனுப்பினோம். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் அவர் இயல்பாகி விட்டார். உடலின் பிற பகுதிகளைப் போலவே கண் பகுதியில் உள்ள எலும்புகளும் உடைந்து விட்டால் சேர்வதற்கு சராசரியாக 21 நாட்கள் மட்டுமே பிடிக்கும். அந்தக் காலகட்டத்தில் அவற்றுக்குத் தொந்தரவு கொடுக்காமல் அப்படியே வைத்திருந்தால் போதும்.
கண்ணுக்கு அருகிலேயே மூக்குப் பகுதி இருக்கிறது என்பதால் சில நோயாளிகளுக்கு காது- மூக்கு- தொண்டை நிபுணரின் ஆலோசனையும் தேவைப்படும். மூக்குப் பகுதியில் ஏதேனும் தொந்தரவு ஏற்படக்கூடும் என்று காது மூக்கு தொண்டை நிபுணர் கருதினார் அவர் எண்டோஸ்கோப்பி மூலமாகவோ நேரடியாகவோ அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தக்கூடும். கண் மற்றும் மூக்குப் பகுதியில் இருக்கும் எலும்பு முறிவுகளுக்கு பெரும்பாலும் நாங்கள் கூறும் அறிவுரை, வேகமாக மூக்கை உறிஞ்சவும் வேண்டாம்.
பலமாக மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற முயல வேண்டாம் என்பது. வேகமாக மூக்கை உறிஞ்சும் போதும், சிந்தும் போதும் கண் பகுதிக்கும் மூக்கிற்கும் இடையில் உள்ள எலும்புகளில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டிருந்தால் அந்த விரிசலின் வழியே காற்று உள்ளே போய் இன்னும் கண் பகுதியை அதிகமாக வீங்கச் செய்துவிடும். அதன் காரணமாக எலும்பு சேர்வதில் தாமதம் ஏற்படலாம்.
மது போதை நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்ட சூழலில் இது போன்ற காயங்களுடன் வரும் நோயாளிகளை அதிக அளவில் பார்க்க முடிகிறது. பெரும்பாலானவர்கள் வலது அல்லது இடது புறத்தில் ஒரு பக்கக் காயத்துடனும் வருவார்கள். அதீத போதையில் இப்படி நடப்பதால் நிறைய பேர் மறுநாளோ அதற்கு மறுநாளோ தான் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். அப்போது கண் முழுவதும் வீங்கிக் கொண்டு திறக்க இயலாத சூழலில் இருக்கும்.
அடிக்கடி இப்படி விபத்துகளில் சிக்கிக் கொள்பவர்களுக்கு குடும்பத்தினரின் கவனிப்பும் குறைவாகவே இருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஒரு இளைஞன் பதினைந்து வயது முதலே மதுபோதைக்கு அடிமையானவன். அவனுக்கு கண்ணின் வெளிப்புறத்தில் மட்டுமல்லாது கண்ணின் உட்புறத்திலும் காயம் இருந்தது. மூன்று நாட்கள் தாமதமாகவே அவன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான். “ஏன் முதல் நாளிலேயே வரலை?” என்று அவனது பெற்றோரைக் கேட்டதற்கு, “இதோட அஞ்சாவது தடவையா விழுறான். ஒவ்வொரு தடவையும் இப்படி இந்தக் கண்ணும் அந்தக் கண்ணுமா மாத்தி மாத்தி வீங்கும். அப்புறம் தானே சரியாயிடும். எத்தனை தடவைதான் இவனைத் தூக்கிட்டு வந்து வைத்தியம் பார்க்கிறது? விழுந்தான்னா போதை தெளியிறதுக்கே ரெண்டு நாள் ஆகுது” என்றார்கள் சலிப்புடன்.
அவர்களின் வாதமும் சரிதான். இதுவரை அவன் விழுந்த நான்கு முறைகளும் அதிக சேதாரம் இல்லாத காயங்களாகப் போய்விட்டன. அப்பொழுது இயல்பாகவே அவனுக்கு எல்லாம் சரியாகி விட்டது. அதன் பின்னும் மது போதைப் பழக்கத்தைத் திருத்திக் கொள்ளாதவன், ஐந்தாவது தடவையும் வாகனத்தில் இருந்து விழுந்திருக்கிறான். இந்த முறையும் எப்போதும் போலத்தானே, என்று பெரியவர்கள் நினைத்திருக்க, காயம் கொஞ்சம் தீவிரமாகிவிட்டது.
அந்த இளைஞனுக்குத் தேவையான சிகிச்சை அளித்து வீக்கத்தை ஒருவாறு குறைத்தோம். ஆனால் அவனுடைய காயம் காரணமாக அவனுடைய ஆப்டிக் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கான சிகிச்சையையும் தொடங்கி ஐந்து நாட்கள் முடிந்த நிலையில் பார்வை பாதி அளவே வந்திருந்தது. ஒருவேளை முதல் நாளே ஆப்டிக் நரம்பை கவனித்திருந்தால் பார்வையை சரி செய்திருக்கக்கூடும். கண்களைப் பிரிக்கவே முடியாத அளவிற்கு அதிக வீக்கமும், ரத்த உறைவும் இருந்ததால், வீக்கம் வடிந்து, பார்வை குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளவே சில நாட்கள் ஆகிவிட்டன.
அவனது நிலையை அந்த இளைஞனிடம் விளக்கி, “புலி வருது புலி வருது என்று ஒரு கதை சொல்வார்களே கேள்விப்பட்டு இருக்கிறாயா? அப்படித்தான் ஆகிவிட்டது உன்னுடைய நிலைமை. இனிமேல் உடல்நலத்தில் அக்கறை வைத்துக் கொள். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாமல் மதுவை உட்கொள்ள நேர்ந்தால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். எப்போது வாகனம் ஓட்டினாலும் ஹெல்மெட் அணிவது அவசியம்” என்று அறிவுரைகளைக் கூறி அனுப்பினோம்.
The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! appeared first on Dinakaran.