×
Saravana Stores

டெபாசிட் காலி, தொடர் தோல்வி எதிரொலி அதிமுக, பாஜவில் மோதல் வெடித்தது: தொண்டர்களுக்கு சசிகலா, ஓபிஎஸ் அழைப்பு; கே.பி.முனுசாமி பதிலடி; அண்ணாமலைக்கு தமிழிசை பகிரங்க எதிர்ப்பு

சென்னை: பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் காலி, தொடர் தோல்வியால் அதிமுக, பாஜவில் மோதல் வெடித்து உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா, ஓபிஎஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இதற்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதே நேரத்தில் கூட்டணி அமைக்காமல் தேர்தலை சந்தித்தது தொடர்பாக அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜவின் ஐடி விங்கிற்கும் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதிமுக, பாஜ 40 தொகுதிகளிலும் படுதோல்வியை அடைந்தது. பாஜ கூட்டணி 21 இடங்களில் டெபாசிட் இழந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி மற்றும் வேலூர், தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. மேற்கு மாவட்டங்களில் மட்டும் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளது. பல இடங்களில் பாஜ, நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகள் பெற்று 3வது மற்றும் 4வது இடத்தை அதிமுக பிடித்து உள்ளது. எடப்பாடி தலைமையில் அதிமுக சந்தித்த 10 தேர்தல்களில் படுதோல்வி அடைந்து உள்ளதால் தொண்டர்கள் துவண்டுபோயுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ‘அதிமுக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்’ என்று சசிகலா கூறினார். இதேபோல், ‘அதிமுக தொண்டர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். அதே நேரத்தில், ‘அதிமுகவுக்கு தலைமை ஏற்க வா’ என்று சசிகலாவை ஆதரித்து சேலம், தஞ்சை, நெல்லை, தென்காசியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த சூழலில் அதிமுக தொண்டர்களை குழப்பி அதில் மீன் பிடிக்க வெளியேற்றப்பட்ட நிர்வாகிகள் முடிவு செய்து குழப்பத்தை ஆரம்பித்துள்ளனர்.

அதிமுகவுக்கு எதிராக போட்டியிட்டது மட்டுமல்லாமல் டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுக நிர்வாகிகளை வளைத்து பணம் கொடுத்து அவர்களை வேலை செய்யாமல் முடக்கிவிட்டுள்ளனர். இதனால்தான் அதிமுக படுதோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்படி அதிமுகவை முடக்கியவர்கள் தற்போது தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கே.பி.முனுசாமி எம்எல்ஏ, நேற்று கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில், அதிமுகவுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் எனவும், ஒன்றிணைவோம் வா எனவும் கூறியுள்ளார். அவர், அதிமுகவையும் தொண்டர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்த போது, மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓபிஎஸ். அதிமுக தலைமை அலுவலகத்தை குண்டர்களை வைத்து அடித்து, உடைத்து ஆவணங்களை திருடியவர். சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர். இவருக்கு அதிமுக பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். அவரை நல்லவர் எனக்கூறி அவருடன் கைகோர்த்த ஓபிஎஸ்சுக்கு எந்த அருகதையும் இல்லை.

சசிகலா, ஜெயலலிதாவிற்கு பணி செய்ய வந்தவர். அவருடன் 36 ஆண்டுகள் பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர். அவர், தற்போது அனைவரும் ஒற்றுமையாக வாருங்கள் என அழைத்து அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை விடுத்து 24 மணி நேரமாகியும், யார் அவரிடம் சென்றார்கள் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். கடந்த, 2019 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக, பாஜ, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தும், 18 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால், 2024ல் தேமுதிகவோடு மட்டும் கூட்டணி வைத்த நிலையில், 20.46 சதவீத ஓட்டுகளை அதிமுக பெற்றுள்ளது. இதன்படி, 2 சதவீதத்திற்கு மேல் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது.

அண்ணாமலை, தமிழக பாஜ, நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டதாக பொய் கூறுகிறார். அவர்கள் தொகுதியில் விசாரித்தால் எவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்பது தெரியும். 2026 சட்டசபை தேர்தலில், அதிமுக., எப்படி வெல்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கட்டுக்கோப்பாக உள்ள அதிமுகவில் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் ஓபிஎஸ்., சசிகலா ஆகியோரின் விஷம பிரசாரங்கள் எடுபடாது என்றார்.இவ்வாறு அவர் கூறினார். அதிமுக முன்னாள் தலைவர்களும், தற்போதைய தலைவர்களும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி பேசத் தொடங்கியுள்ளதன் மூலம் மீண்டும் அதிமுகவில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

அதேபோல பாஜவிலும் முன்னாள் தலைவரான தமிழிசைக்கும், அண்ணாமலைக்கும் பயங்கர மோதல் வெடித்து உள்ளது. ‘டேய் இவன் போற இடமெல்லாம் கேட் போடுடா’ என்று காமெடி ஒன்றில் வடிவேலு சொல்லுவார். அதுதான் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கையில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. பாஜ தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அந்த கட்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது என்பது தான் உண்மை. இப்போது தேர்தல் அரசியலிலும் அண்ணாமலை கடுமையான தோல்வியை சந்தித்து உள்ளார்.

அவர் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே பல பொய்களை நா கூசாமல் பொது மேடைகளில் பேசி வந்தார். இதை பாஜவினர் கூட ரசிக்கவில்லை. அண்ணாமலையின் பேச்சுக்கள் மிக மோசமானதாக இருந்ததால் பாஜவுக்கு பெரும் பின்னடைவையே கொடுத்துள்ளன. அதுமட்டுமல்ல, தன்னை புகழ்வதற்காகவே இணையத்தில் ஒரு வார் ரூமே இயங்க செய்ததாகவும் தகவல் வெளியானது. தன்னை எதிர்த்த மூத்த நிர்வாகிகள் பலரை ஓரங்கட்டும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டதாக அண்ணாமலை மீது விமர்சனங்கள் எழுந்தன.

அண்ணாமலையின் ஆசியுடன் சொந்தக்கட்சியினரின் பல ஆடியோ, வீடியோ வெளியான விவகாரத்தில் காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா உள்ளிட்ட பலர் வெளியேறினர். பலர் ஓரங்கட்டப்பட்டனர். இப்படியாக அண்ணாமலையின் மோசமான நடவடிக்கைகள் தமிழக பாஜவுக்குள் புயலாக வீசி வரும் நிலையில், பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற எதிர்பார்த்திருந்த நிலையில், அண்ணாமலைக்கு செக் வைக்கும் வகையில் தற்போது, கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை களம் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜ ஆட்சி அமைக்க உள்ளது.

இதனால் சரியாக வேலை பார்க்காத மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் மீது பாஜ தலைமை அதிரடி காட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது பாஜ தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை தூக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள தமிழிசை தரப்பு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இதற்கு, அண்ணாமலையால் ஓரங்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனராம்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று அளித்த பேட்டியின் போது, ‘அதிமுக -பாஜ கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம், அண்ணாமலை பாஜ தலைவர் ஆனது முதல் தான் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பாஜ- அதிமுக உடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் 30 முதல் 35 தொகுதி வரை வெற்றி பெற்றிருக்க முடியும்’’ என்று கூறினார். இதற்கு, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று பதிலளிக்கையில், ‘‘அதிமுகவில் எடப்பாடி-வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக உடன் பாஜ கூட்டணி அமைக்காது’’ என்றார். அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே மீண்டும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை அதிமுக உடன் மோதுவதை தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜவினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் நேற்று தமிழிசை அளித்த பேட்டியில், ‘‘அதிமுக- பாஜ கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற எஸ்.பி.வேலுமணியின் கருத்து உண்மையே. அதிமுக குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே விளக்கம் பெறுங்கள். அண்ணாமலைக்கு கூட்டணி அமைக்க விருப்பம் இல்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அண்ணாமலை சொன்னால், அது அவரது கருத்து. கூட்டணி என்பது அரசியல் வியூகம். 2026 தேர்தல் குறித்து முடிவு செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். பாஜ ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளை எச்சரிக்கிறேன்.

கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்’’ என்று அதிரடியாக கூறினார். அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் பாஜ ஐடி விங் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததோடு, அதிமுகவோடு கூட்டணி கிடையாது என்று கூறிய அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூட்டணி குறித்து அகில இந்திய பாஜ தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தமிழிசை அதிரடி காட்டியுள்ளார்.

இதன் மூலம் தமிழக பாஜவில் அண்ணாமலைக்கும்- தமிழிசைக்கும் இடையே நேரடி மோதல் வெடித்துள்ளதாகவும், பாஜ முக்கிய நிர்வாகிகள் ஆதரவோடு தமிழக பாஜ தலைவர் பதவியை கைப்பற்ற தமிழிசை களத்தில் இறங்கியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சசிகலா, ஜெயலலிதாவுக்கு பணி செய்ய வந்தவர். அவருடன் 36 ஆண்டுகள் பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர். அவர், தற்போது அனைவரும் ஒற்றுமையாக வாருங்கள் என அழைத்து அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை விடுத்து 24 மணி நேரமாகியும், யார் அவரிடம் சென்றார்கள் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்த போது, மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓபிஎஸ். அதிமுக தலைமை அலுவலகத்தை குண்டர்களை வைத்து அடித்து, உடைத்து ஆவணங்களைத் திருடியவர். சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்.தமிழகத்தில் பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது பாஜ தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை தூக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவர் பதவிக்கு தமிழிசை குறி வைத்து காய்நகர்த்துவதாக கூறப்படுகிறது.

* ஆடு, ஓநாய், நரி என எது வந்தாலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது: அதிமுக ஆவேசம்
அதிமுக ஐ.டி. விங் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. தன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியைப் பார்க்காமல் அதிமுக பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளட்டும். ஆடு, ஓநாய், நரி என எது வந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post டெபாசிட் காலி, தொடர் தோல்வி எதிரொலி அதிமுக, பாஜவில் மோதல் வெடித்தது: தொண்டர்களுக்கு சசிகலா, ஓபிஎஸ் அழைப்பு; கே.பி.முனுசாமி பதிலடி; அண்ணாமலைக்கு தமிழிசை பகிரங்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Baja ,Sasikala ,OPS ,K. B. MUNUSAMI ,ANNAMALA ,Chennai ,Bajaj ,minister ,K. B. Munusamy ,Annamalai ,Dinakaran ,
× RELATED 2026-ல் அதிமுக ஆட்சி அமையும்: மதுரையில் வி.கே.சசிகலா பேட்டி!