சென்னை: நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரில் தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்தும், கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடி ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக வரும் 20ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
The post நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.