×

சீரான குடிநீர் விநியோகிக்க கோரி ஈரோட்டில் சாலை மறியல்

ஈரோடு: ஈரோட்டில் சீரான குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி 44வது வார்டுக்கு உட்பட்ட பழைய பூந்துறை சாலை ஓடைப்பள்ளம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென ஈரோடு காந்திஜி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகு வடிவு, ஈரோடு தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி 3ம் மண்டல தலைவர் சசிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இங்கு ஒரே ஒரு பொதுக்கழிப்பிடம் மட்டுமே உள்ளது.

கூடுதல் கழிப்பிடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் மண்டல தலைவர் பதிலளித்து பேசுகையில், ஓடைப்பள்ளம் பகுதியில் உள்ள குடிநீர் பம்ப் செய்யும் மின் மோட்டார் பழுதாகி உள்ளதால் சீரான குடிநீர் வழங்க முடியாமல் உள்ளது. பழுது சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்கப்படும். கூடுதல் கழிப்பறை அமைப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதன்பேரில், பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் மாநகராட்சி சார்பில் ஓடைப்பள்ளம் பகுதி மக்களுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post சீரான குடிநீர் விநியோகிக்க கோரி ஈரோட்டில் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : blockade ,Erode ,Odaipallam ,Old Poonthurai Road ,Erode Corporation ,Dinakaran ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது