×

கொடைரோடு பகுதியில் பகலில் வாட்டியது வெயில்; மாலையில் கொட்டியது மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் கொடைரோடு, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. நேரம், செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை நீடித்தது. அதன்பிறகு மழை குறைந்தது. ஆனால், கொடைரோடு, நிலக்கோட்டை பகுதிகளில் இரவு 10 மணிக்கும் மேலாக மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் மழை பெய்தது. திடீர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கொடைரோடு பகுதியில் பகலில் வாட்டியது வெயில்; மாலையில் கொட்டியது மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kodairod ,Nilakottai ,Dindigul district ,Pallapatti ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவில் ஆதார் கார்டுடன்...