×
Saravana Stores

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: வைகாசி அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசைக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாள் என 8 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இதன்படி, வைகாசி பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி முதல் நாளை வரை (ஜூன் 7) நான்கு நாட்கள் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமாவாசை தினமான இன்று சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்காக அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த பின், அவர்களை கோயிலுக்குச் செல்ல அனுமதித்தனர்.

மேலும், ‘கோயிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது, நீரோடைகளில் குளிக்கக்கூடாது, எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது, மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,Vathirayiru ,Chaturagiri Sundaramakalingam ,Sami ,Vaikasi Amavasai ,Western Ghats ,Vathirairipu ,Virudhunagar district ,
× RELATED சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி மழையால் ரத்து