×

பகவான் மகாவீரர் 4200 சீடர்களுடன் சமண சமயத்தைப் பரப்பியவர்

இந்தியாவில் புராதனச் சமய உணர்வு என்ற சொல்லைக் கேட்டதும், நமக்கு நினைவுக்கு வருவது வேதங்களைப் பற்றித்தான். வேத காலத்துக்கு முன்பும் நம் நாட்டில் சமய உணர்வு இருந்தது. அதுவும் ஆழமாக இருந்தது. பழம்பெரும் நகரங்களான மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்ற இடங்களில் அகழ்வு ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அங்கு சிவந்த வண்ணக் கல்லான ஒரு சிற்பம் கிடைத்தது. அது ஜைன ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் தீர்த்தங்கரர்களின் ‘காயோத் சர்க்க’ முத்திரையை அப்படியே ஒத்திருக்கிறது. அப்படியானால், அக்கால கட்டத்திலேயே சமண சமயம் இருந்ததாக எண்ண இடமுண்டு என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஆதியில், அயோத்தியை ஆண்ட அரசர் ரிஷபதேவர். இந்த ரிஷப தேவர்தான் முதல் தீர்த்தங்கரராக விளங்கியவர். இவருடைய மகனுக்கு பரதன் என்று பெயர். இவர், தன் மகனுக்கு முடி சூட்டிவிட்டு ‘துறவு’ வாழ்க்கையை மேற்கொண்டார். திகம்பரர் ஆனார். ரிஷப தேவரின் மகன் பரதன், இந்த நாட்டை ஆண்டதால் இதற்கு ‘பரதகண்டம்’ என்ற பெயர் ஏற்பட்டது என்று ஜைன அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆதியில் நம் பாரத பூமியில் வாழ்ந்த பழங்குடிகளில் ‘விராட்டியர்’ என்ற இனத்தவர் இருந்தனர். விராட்டியர் என்றால் விரதம் அனுஷ்டிப்பவர் அதாவது விரதங்களை கடைப்பிடிப்பவர் என்று பொருள்.

பொதுவாக, நம் பாரத தேசத்தில் விரதம் அனுஷ்டிக்காத மக்களே இல்லை என்று சொல்லலாம். இருந்தாலும், விரதத்தை தம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மதித்து வாழ்ந்தவர்கள் இந்த விராட்டியர்கள். அத்தகைய விராட்டியர்கள் வணங்கிய ஒரு மகாவிரதனின் உருவம்தான் மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த ‘சிவப்புக்கல் சிலை’! ‘‘வேத மந்திரங்களில் முக்கியமானது “காயத்ரீ மந்திரம்’’. அதை இயற்றியவன் பிராமணன் அல்ல. ஒரு சத்திரியன்; விஸ்வாமித்திரன். ஆத்ரே இனத்தில் வைசியர் உண்டு. எத்தனையோ மதங்கள் தோன்றின. அதில் துறவறம் அனுமதிக்கப்பட்டது. சிலவற்றில் அனுமதிக்கப்படவில்லை.

சமணம் மட்டும் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தது. பாகவத மதம் தோன்றக் காரணமாயிருந்தவன் கிருஷ்ணன். இவன் யாதவகுலத்தைச் சேர்ந்தவன். ‘‘ஜாதி, நீதி குல கோத்ர தூரகம்’’ என்றொரு ஸ்லோகம் உண்டு. அதாவது குலம், நீதி முறை. கோத்திரம், பெயர், தேசம், காலம் இவ்வளவிற்கும் அப்பாற்பட்டது சத்தியம் உண்மை என்பதை மக்களுக்கு உணர்த்தும் காலம் அப்போது நெருங்கிக் கொண்டிருந்தது. ஒன்று மேயில்லாதவன் கூறுவதும் எல்லாம் எல்லாவற்றையும் துறந்து விட்டதாகக் கூறுவதும் அர்த்த மற்றது. சகல சௌபாக்கியங்களும் போகங்களும் இருந்து அதைத் துச்சமாக உதறி எறிந்து விட்டு வெளி வருபவன்தான் உண்மைத் துறவி.

அந்த வகையில், உதாரண புருஷராக விளங்குபவர் மகாவீரர்!’’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். சாதாரணமாக ஒரு ‘மதம்’ என்றால் அதற்கு ஒரு நிறுவனர், ஸ்தாபகர் இருப்பார். கிறிஸ்துவத்துக்கு இயேசு. இஸ்லாமியத்துக்கு முகமது. பௌத்தத்துக்கு புத்தர் என்பது போல, சமண மதத்திற்குக் குறிப்பிட்ட நிறுவனர், ஸ்தாபகர் என்று யாரும் கிடையாது. ரிஷப தேவருக்குப் பின் வந்த ‘23 தீர்த்தங்கரர்கள்’ விட்டுச் சென்ற சில உன்னதமான கொள்கைகளை, நல் ஒழுக்கங்களை, அறிவுரைகளையெல்லாம் மகாவீரர் ஒழுங்கு படுத்தி, ஒளியைத் தூண்டி விட்டார் என்பதே சமண அறிஞர்களின் கூற்று. நாக இன பார்ச்வநாதரை 23-வது தீர்த்தங்கரராகவும், மகாவீரரை 24-வது தீர்த்தங்கரராகவும் கொள்வார்கள்.

பாட்னா எனும் பாடவிபுத்திரத்திற்கு வடக்கே 27-வது மைலில் வைசாலி என்ற ராஜ்ஜியம் இருந்தது. வைசாலி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த பகுதிகளில் ஒன்று ‘கொல்லாக’ என்றொரு நாடு இருந்தது. இந்த நாட்டின் சிற்றரசன் நாக இன சத்திரிய குலத்தைச் சேர்ந்தவன். அவன் பெயர் சித்தார்த்தன். அவன் மனைவியின் பெயர் திரிசலாதேவி. இத்தம்பதியருக்குப் பிறந்த மகன்தான் மகாவீரர். மகாவீரருக்கு பெற்றோர் வைத்த பெயர் வர்த்தமானன். வர்த்தமானன் என்றால் பூரித்து வளர்பவன் என்று பொருள். பின்னாளில் அவர் பெற்ற கீர்த்தியால் ‘மகாவீரர்’ என்ற பெயரைப் பெற்றார். ‘வீரர்’ என்பது விரோதி, ராஜ்ஜியம், சொத்து இவைகளை உடல் பலத்தால் வெற்றி கொள்வதில்லை.

நம் உள்ளத்திலேயே ஊறிக் கிடக்கும் கீழ்த்தரமான உணர்ச்சிகளை வெல்வதே உண்மையான வீரம் வீரனுக்கு உரிய பலம்.அவன் முண்டாக்களில் இல்லை. அவன் இருதயத்தில் அவன் மேற்கொண்டிருக்கும் வைராக்கியத்தில்தான் இருக்கிறது. வர்த்தமானர், மகாவீரர் ஆனது அவர் உடல் பலத்தால் அல்ல. ஒழுக்கம் நிறைந்த சத்திய வாழ்க்கையால், வைராக்கியத்தால்தான்! வர்த்தமானரின் மனைவி பெயர் யசோதரா. இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவளுக்குப் பிரியதர்ஷினி என்று பெயர். அவளை ஜமாலி என்ற ஒரு குறு நிலமன்னனுக்கு மணம் செய்து கொடுத்தனர்.

இந்த மாப்பிள்ளை ஜமாலியே பின்பு மகாவீரரின் சீடரானான். மகாவீரருக்கு இளம் வயதிலேயே துறவு பூண வேண்டும் என்று ஆசை. தம் தாய் உயிருடன் இருக்கும் வரையில் மகாவீரர் துறவு பூணவில்லை. தன்னைப் பெற்று வளர்த்துத் தாலாட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கிய அன்னையின் மனம் வருந்தும் படி துறவு கொள்ள மகாவீரர் விரும்பவில்லை. மகாவீரர் திருமணம் செய்து கொண்டதுகூட தம் தாயைத் திருப்திப்படுத்துவதற்காகத் தான். வர்த்தமானருக்கு முப்பது வயது நிறைந்த போது தாய் மறைந்துவிட்டாள்.

அவர் துறவியாவதற்கு இருந்த ஒரே தடையும் விலகிவிட்டது. துறவியானார். திருவோடுகூட இல்லாமல் வெறும் கையினாலேயே பிச்சை எடுத்து உண்ணத் தொடங்கினார். ஆடை இல்லாமல் நிர்வாண நிலையை  ஏற்றுக் கொண்டு திகம்பரர் ஆகிவிட்டார். ஆடை அணிவது மானத்தைக் காப்பதற்குத்தான். ஆனால், சான்றோர்களுக்கு மான அபிமானம் இல்லை என்பது பழமொழி அல்லவா? இறைவுணர்வைத் தவிர வேறொன்றும் நினைவில்லாதவனுக்கு ஆடைதானாகவே நழுவி விடுவது இயல்புதானே!மகாவீரர் துறவு பூண்டு பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தன. அப்போது அவர் ‘இரும்பிகம்’ என்ற கிராமத்தில் இருந்தார். ஒரு நாள் அக்கிராமத்தின் ஆற்றங்கரையில் உள்ள சால மரத்தடியில் பத்மாசனமிட்டு அமர்ந்தார்.

இரண்டரை நாட்கள் அன்ன ஆகாரமின்றி தியான யோகத்தில் இருந்தார். அப்போது அவர் கேவல ஞானம் அடைந்தார். அதாவது தூய ஞானம் பெற்றார். இதனால் அவருக்கு கேவலின், ஜினன், அரிகந்தன், மகாவீரர் என்ற பெயர்கள் ஏற்பட்டன. பௌத்தர்கள் இவரை இவருடைய இனப்பெயரால் ‘நாட்புட்ட’ என்பார்கள். வைசாலியில் அவர் பிறந்ததால் அவரை ‘வைசாலியன்’ என்றும் அழைத்தனர். தனக்கு முன்னால் வாழ்ந்த 23 தீர்த்தங்கரர்களின் உன்னதமான சிந்தனைகளை மகாவீரர் முப்பது ஆண்டுகள் ஆராய்ந்தார். அவற்றில் சிறந்தவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்தினார். அவர் முறைப்படுத்திய உன்னதமான கொள்கைகளே ‘ஜைன மதம்’ ஆயிற்று.

சமணத்தத்துவங்களை ஏற்றுக் கொண்டு அவர் காலத்திலேயே அவருடன் 4200-சீடர்கள் இருந்தனர். மகாவீரர் காலத்திலேயே சிராவஸ்தி, விதேகம், மகதம், அங்கம், வங்கம் முதலிய பல பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் மத்தியில் சமண தத்துவத்தின் ஒளி ஓங்கி விரிந்து படர்ந்தது. சீடர்களுடன் நாலா தீசைகளிலும் சென்று தத்துவங்களைப் பரப்பினார் மகாவீரர். மகாவீரர் பாமர ஜனங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியான ‘அர்த்தமகதி’ என்ற மொழியில் சமண தத்துவங்களை உபதேசித்து வந்தார். அலை அலையாக மக்கள் திரண்டு வந்து அவரிடம் சரணடைந்தார்கள். சமணமதக் கோட்பாடுகள் நாடெங்கும் விரைந்து பரவின. ஒரு சமயம் பாபாபுரியின் மன்னன் அஸ்திபாலன் அரண்மனையில் மகாவீரர் தங்கியிருந்தார். அது ஒரு மழைக்காலம்.

அதிகாலை வேளை மழைத்தூறல்களினூடே மகாவீரரைத் தரிசிக்க ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர். தரிசனம் கண்டனர் தத்துவம் அறிந்தனர். உதய சூரியனின் கிரணங்கள் இருளை விரட்டி அடித்தன. ஆனால், மற்றொரு இருள் இப்புவியில் புகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும், அந்த இருளை அகற்றி ஞானம் புகட்ட மகாவீரரைவிட வேறெவர்க்கு அக்கறை அதிகம் இருக்கும்?வழக்கம் போல் பொழுது விடிந்ததும் மக்கள் கும்பல் கும்பலாய் அன்றும் தரிசிக்கக் கூடினர். அன்று ஐப்பசி அமாவாசை நாள் புனிதமான நாள் அன்று வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அரண்மனைக்கு முன்னிருந்த பெரிய மைதானத்தில் ஒரு பெரிய மேடை. அதில் மகாவீரர் சமபர்யங்க ஆசனத்தில் வீற்றிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்ததோ கர்ம பலன்களைப் பற்றி. மகாவீரர், அதுவரை உபதேசித்த பொன் மொழிகளின் சிகரமாய் அமைந்திருந்தது அன்றைய பேருரை! அதுதான் அவருடைய கடைசிப் பிரசங்கம் என்பது யாருக்குமே தெரியாது. அவருடைய 4200-சீடர்களுக்கும்கூட தெரியாது. பிறருடைய கர்மங்களை மாத்திரமல்ல. அவருடைய கர்ம பந்தங்களே அன்று விடுபட்டது. பந்தம் அறுந்தது. சித்தி சித்தித்துவிட்டது.

அப்போது அவருக்கு எழுபத்திரண்டு வயது! அஞ்ஞானம் என்ற இருள் அகன்று ஞான ஒளி சுடர் விடச் செய்த இம்மகான் சித்தி பெற்ற அத்தினத்தை மனம் கலங்கிட, கண்களில் கண்ணீர் ததும்ப 4200-சீடர்களும் ‘தீப ஒளி’ ஏற்றி வைத்து வழிபட்டனர். உலகுக்கு ஒளியாய் விளங்கிய பகவான் மகாவீரர் மறைந்துவிட்டார். அவர் மறைவை நினைவுபடுத்துவதற்கு சமணர்கள் வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து ஒளி உண்டாக்கினார்கள். அதைத் தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடினார்கள்.

மகாவீரர் இறந்த போது மற்றொரு அதிசயம் நடந்தது. மகாவீரன் சீடர்களில் அவருடைய அன்புக்குப் பாத்திரமான, அவருடன் மிக நெருங்கி இருந்த ‘கௌதம் இந்திரபூதி’ என்பவர் நிர்வாணம் பெறுவதற்கு அதாவது கேவலஞானம் பெறுவதற்கும், தலைமைப் பீடத்தையும் அலங்கரிப்பதற்கு உட்பட எல்லாத் தகுதிகளையும் பெற்றிருந்தார். மகாவீரர் இருந்ததால் அவர் தாம் பெற்ற கேவலஞானத்தை யாருக்கும் வௌிப்படுத்தாமல் இருந்தார்.

தடை நீங்கிவிட்டது. குருவும் மறைந்துவிட்டார். கௌதம் இந்திரபூதி மகாவீரர் மீது அளவு கடந்த பக்தியும், ஈடுபாடும் கொண்டவர். மகாவீரர் சித்தி அடைந்ததும் கௌதம் இந்திரபூதி தன் குருநாதரையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் எழுந்து, அமர்ந்த நிலையில் சித்தி பெற்ற மகாவீரரை வடக்கு நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பிறகு கௌதம் இந்திரபூதி எழுந்திருக்கவில்லை. குருவைப் பின் தொடர்ந்து அவரும் சித்தியடைந்து விட்டார். இந்த அற்புதத்தை, துயரமான நிகழ்வைக் கண்ணுற்ற ஆயிரக்கணக்கான சமணர்கள் நெஞ்சம் பதறக் கண்ணீர் விட்டழுதார்கள் கதறினார்கள்.

சமணம் போதிக்கும் கொள்கைகள் இந்தியாவிற்குப் புதிதல்ல. இந்தியாவில் வாழ்ந்த பழங்குடி மக்களின் வழிபாட்டுக் கொள்கைகளாகவே அவை இருந்தன. அவற்றை முறைப்படுத்தித் தீவிரமாக மக்களிடம் பிரசாரம் செய்ததுதான் மகாவீரர் செய்த மாபெரும் வரலாற்றுப் பணியாகும். 2300-ஆண்டுகளுக்கு முன்பே சமண சமயம் பாரதம் முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. வட இந்தியா முழுவதையும் சமண சமயமே ஆட்கொண்டது. தென் இந்தியாவில் சமண சமயத்தை ஆதரிக்காத மன்னரே இல்லை. அவர்களில் பல்லவர், பாண்டியர், சோழர், சாளுக்கியர், கங்கர், இராஷ்டிரகூடர், போசளர், காலச்சூரிகள் முதலியவர்கள் முக்கியமானவர்கள்.

தென்னிந்தியாவில் மிகப் பழமையான கல்வெட்டுகளில் உள்ள ‘தமிழ்ப் பிராமி’ சாசனங்கள் அனைத்தும் சமணர்களுடையதே! இந்த எழுத்துக்களுக்குப் ‘பிராமி’ என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? எழுத்துக்களைக் கண்டு பிடித்தவரே முதல் தீர்த்தங்கரரான ரிஷப தேவர்தான். அவரது அன்பு மகளின் பெயர் ‘பிராமி’. அதனால் அவர், தான் கண்டு பிடித்த எழுத்துக்களுக்கு ‘பிராமி’ என்று பெயர் வைத்தார் என்கிறது வரலாற்றுச் செய்திகள். இதனால்தான் சமண தீர்த்தங்கரரின் முதல் தீர்த்தங்கரராக விளங்கிய ரிஷப தேவரை நினைவு கூறும் பொருட்டு, அச்சுமுத்திரைகளில் பிரசித்தி பெற்றது ரிஷபம். இதுவே பிரதான சின்னமாகத் திகழ்ந்தது.

மற்றொன்று சமணர்கள் போற்றும் ‘சுவஸ்திகா’ சின்னம், பல இடங்களில் நடைபெற்ற புராதன அகழாய்வுகளில் இச்சின்னங்கள் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. சமண சமய தீர்த்தங்கரர்களின் தீவிரமான முயற்சியால்தான் ‘அஹிம்சாதர்மம்’ என்ற உன்னத தத்துவமே உலகில் பிறந்தது.உன்னதமான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. அஹிம்சை என்ற தாவர உணவை உண்பது மட்டுமல்ல; மற்ற உயிர்களைத் தன்னுயிர் போல் கருதி, அவைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதும் ஆகும். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் ஆகும். இதைத் தான் வடலூர் அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளும் வாழ்நாள் முழுவதும் உபதேசம் செய்தார். அண்ணல் மகாத்மா காந்தியடிகளும் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்தார்.

மகாவீரரின் வரலாற்று நிகழ்ச்சி களின் விளைவாக சிறந்த தீரச் செயல்களை பல சான்றோர்களால் உருவாக்கப்பட்டன . அவர்களை இருட்டில் இருந்த மக்களை வெளிச்சத்துக்கு, அதாவது ‘அறிவின் ஒளிக்கு’ அழைத்து வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பகவான் மகாவீரர் மறைந்த நாளை ஆண்டுதோறும் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடும் வழக்கத்தை ஜைனர்கள் ஏற்படுத்தினார்கள். மகாவீரர் பரி நிர்வாணம் பெற்ற ஐப்பசி அமாவாசைத் திருநாள் அன்று, அவர் சித்தியடைந்த பாபாபுரி நகருக்குப் பல்லாயிரக்கணக்கான சமணர்கள் சென்று இன்றளவும் தொடர்ந்து தீபமேற்றி வழிபாடு செய்து வருகிறார்கள். அங்கே அவரை வழிபட்டு, வரிசையாக எண்ணற்ற விளக்குகளை வைத்து, அவற்றை ஏற்றித் தீபாவளித் திருநாளாகப் பக்திப் பரவசத்துடன் ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்!

சத்தியவேல்

 

The post பகவான் மகாவீரர் 4200 சீடர்களுடன் சமண சமயத்தைப் பரப்பியவர் appeared first on Dinakaran.

Tags : Lord Mahavira ,India ,Vedas ,Mohenjo Daro ,Harappa ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...