×

பாதுகாப்பு படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபாத்” திட்டத்தை மறுபரிசீலனை செய்ய நிதிஷ் குமார் நிபந்தனை.!!

டெல்லி: பாதுகாப்பு படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபாத்” திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நிதிஷ் குமார் நிபந்தனை வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நிபந்தனைகளை கூட்டணி கட்சிகள் பாஜகவிற்கு முன்வைத்து வருகிறது. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளத்தை பொறுத்தவரையில் மிகவும் விமர்சிக்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நிதிஷ் குமார் திட்டவட்டமாக பாஜகவிற்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் பாதுகாப்பு பணிகளில் பணி அமர்த்தப்படுவது குறிப்பிடப்பட்டது. அதில், 25 சதவீதம் பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டு மீதமுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்களின் போராட்டம் வலுவாக நடைபெற்றது. ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் அங்கு நடைபெற்ற நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்கப்படும் போது என்.டி.ஏ தலைமையிலான கூட்டணி ஆட்சி என்பது நிச்சயமாக அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், நடைமுறையை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்ற திட்டவட்டமான கருத்தை நிதிஷ்குமார் நிபந்தனையாக பாஜகவிற்கு விதித்துள்ளார்.

இந்த நிபந்தனையை பாஜக ஏற்று கொள்ள வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு மிக பெரிய பலமாக இருக்கும் என்ற கருத்தையும் நிதிஷ்குமார் நேற்று நடைபெற்ற ஆலோசனையின் போது முன்வைத்துள்ளார். பாஜகவின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், புது சிவில் சட்டங்களை ஐக்கிய ஜனதா தளம் ஆதரித்தாலும் அதிலும் உரிய ஆலோசனையை பாஜக முன்னெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் சார்பாக நேற்று பிரதமரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் பிகாரில் கடுமையாக இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இத்திட்டத்தை மறுபரீசீலனை செய்ய கோரி ஒரு நிபந்தனையை நிதிஷ்குமார் பாஜகவிற்கு முன்வைத்துள்ளார்.

 

The post பாதுகாப்பு படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபாத்” திட்டத்தை மறுபரிசீலனை செய்ய நிதிஷ் குமார் நிபந்தனை.!! appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Delhi ,BJP ,Dinakaran ,
× RELATED சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு!