சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை ரத்து உயர் நீதிமன்றம் செய்தது. மேலும் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் பதிவு செய்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பின்னர் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுத்தாக்கலுக்கான விசாரணை இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கேசவன் தரப்பில் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும், இருந்தபோதிலும் நேற்று தான் விசாரணைக்கு ஆஜராகி 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகவும் அதன் பிறகு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அதன் பிறகு இன்று தன்னுடைய மொபைல், சிம் கார்டு ஆகியவை காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என்று தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் தரப்பில், பணம் பிடிப்பட்டபோது அவர் எங்கிருந்தார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை, அது தொடர்பான விசாரணை நடத்துவதற்காக மொபைல், சிம் கார்டு ஆகியவை கேட்கபட்டத்தக்க விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அழைக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதே போல் கேசவ விநாயகம் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இந்த மனு முடித்து வைக்கப்பட்டது.
The post தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் appeared first on Dinakaran.