×

டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: கூடுதல் நீர் திறக்க அரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லிக்கு கூடுதல் நீர் திறக்க அரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடும் வெப்பத்தின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பல பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் ஒரு நாளைக்கு ஒரு டேங்கர் லாரி மட்டுமே அனுப்பப்படுவதால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து குடிநீர் பிடித்து செல்கின்றனர். டேங்கர் லாரி வரும் நேரம் தினந்தோறும் மாறுபடுவதால் சமையல் செய்யக்கூட குடிநீர் இல்லாத நிலையில் தவிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தர பிரதேசம், இமாச்சல் மற்றும் அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனு இன்று நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டெல்லிக்கு உபரி நீரை விடுவிக்குமாறு இமாச்சல பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், சுமார் 137 கன அடி நீரை கூடுதலாக இமாச்சல அரசு விடுவிக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு இது குறித்த தகவலை அரியானா மாநில அரசிடம் இமாச்சல அரசு தெரிவிக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டியுள்ளது. அதனை வாஜிராபாத் அணை வழியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை மேற்கொள்ள அரியானா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அப்படி பெறுகின்ற நீரை டெல்லி அரசு வீணடிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

The post டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: கூடுதல் நீர் திறக்க அரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Aryana ,Himachal Pradesh ,Delhi ,Ariana ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை...